வெள்ளப் பகுதிகளை பார்வையிட்ட மத்திய குழுவிடம் ரங்கசாமி அறிவுறுத்தல்
பாண்டிச்சேரி, டிச 9
சமீபத்தில் வீசிய பெஞ்ஜல் புயல், மழை – வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் புதுச்சேரிக்கு 614 கோடி ரூபாய் நிவாரண நிதி அளிக்க பரிந்துரைக்க வேண்டும் என்று மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான குழுவிடம் முதல்வர் என். ரங்கசாமி அறிவுறுத்தினார்.
புயல் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு, பொது மக்களின் பாதிப்புகளையும் குறைகளையும் கேட்டறிந்த குழுவினர் முதல்வரை இன்று காலை நேரில் சந்தித்தனர். அப்போது அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும், கலெக்டரும் உடன் இருந்தனர். புயல்– வெள்ள தேசப் படங்களைக் காட்டிய முதல்வர், நிவாரண உதவி உடனே வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மத்திய குழு இரண்டு பிரிவாகப் பிரிந்து மாநிலத்தில் புயல் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டது.
செட்டிப்பட்டு, சந்தை புதுக்குப்பம், வில்லியனூர், கைகளப்பட்டு, உழவர்கரை, இந்திரா சிலை அருகில் உள்ள வாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளையும் நேரில் பார்வையிட்டனர். பொதுமக்களிடம் குறைகளை, பாதிப்புகளை கேட்டு அறிந்தனர்.
கிராம மக்கள் முறையீடு
மணவெளி தொகுதிக்கு உட்பட்ட டி என் பாளையம் இருளர் குடியிருப்பு பகுதிகளை பார்வையிட வந்த குழுவினரை கிராம மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். ரேஷன் கார்டுகள் வெள்ளை தண்ணீரில் போய்விட்டது. அவை உடனடியாக மீண்டும் கிடைக்க வழி காண வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தினார்கள.
கடலூர் பாண்டிக்கு இடையில் ஆற்றில் தரைப்பாலம் உடைந்ததால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு குறித்தும், அதனால் எதிர்நோக்கி இருக்கும் சிரமங்கள் குறித்தும் அவர்கள் முறையிட்டார்கள்.
ரூபாய் 100 கோடி படகுகள், வலைகள் சேதம்
காலாப்பட்டு மீனவர் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்திய குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது மீனவர்கள், ரூபாய் 100 கோடி மதிப்புக்கு மீன் பிடி படகுகளும், வலைகளும் சேதமடைந்திருப்பதாகவும், அவற்றுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
வெள்ளம் மழை நீர் பாதித்த பகுதிகளில் மக்கள் தங்களுடைய வீடுகளில் அன்றாட உபயோகப் பொருட்கள் மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், ஒரு சில இடங்களில் கழிவு நீர் குடிநீரோடு கலந்திருப்பதாகவும் வேதனையோடு தெரிவித்தார்கள். தங்களுடைய இந்த வேதனைகளை எல்லாம் களைய உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.
வாதனூர், பாகூர் ஆகிய இடங்களில் விளைபொருட்கள் வெள்ளத் தண்ணீரில் மூழ்கி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாக கூறிய விவசாயிகள், இஞ்சி, மரவள்ளி கிழங்கு ஆகிய பயிர்கள் சேதமடைந்து இருப்பதை (கையில் பிடித்துக் காட்டி) உரிய நிவாரணம் உடனடி வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.