சென்னை, பிப் 11–
‘‘பெஞ்சல்’’ புயலால் பாதிக்கப்பட்ட 24 மாவட்டங்களில், பயிர் அறுவடை பரிசோதனைகள் முழுவதுமாக முடிந்த அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில், தகுதி வாய்ந்த கிராமங்களுக்கு இந்த மாதம் இறுதி வாரத்தில் இழப்பீட்டுத் தொகை வழங்க அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த மாத இறுதிக்குள் முடிவடையும் பயிர் அறுவடை பரிசோதனைகளுக்கும் வழக்கமாக ஜூன் மாதத்தில் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை படிப்படியாக மார்ச் மாதத்திற்குள்ளாகவே விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் வரவு வைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில், கடந்த 2024 டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெஞ்சல் புயல் மற்றும் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகையை விரைவில் வழங்க காப்பீட்டு நிறுவனங்களை வலியுறுத்துதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
2024–-2025–ம் ஆண்டில், இதுவரை மொத்தம் 32 லட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டு, சுமார் 14 லட்சம் விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். இதில் சம்பா, தாளடி, பிசானம் நெற்பயிரில் மட்டும் இதுவரை மொத்தம் 8 லட்சம் விவசாயிகளை பதிவு செய்து 19 லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெஞ்சல் புயல், வடகிழக்கு பருவமழை மற்றும் பருவம் தவறிய மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், செங்கல்பட்டு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, சேலம், காஞ்சிபுரம், திருவள்ளுர், வேலூர், திருப்பத்தூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, மதுரை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் சம்பா நெற்பயிர் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் திட்ட விதிமுறைகளின்படி பயிர் அறுவடை பரிசோதனைகள் நடத்தி இழப்பீட்டுத் தொகையை விரைவில் கணக்கீடு செய்து விவசாயிகளுக்கு வழங்க அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி நடப்பு சம்பா பருவத்திற்கு 39,832 பயிர் அறுவடை பரிசோதனைகள் திட்டமிடப்பட்டு, இதுவரை 22,868 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இக்கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் வ.தட்சிணாமூர்த்தி, பொருளியல் துறை ஆணையர் ஆர்.ஜெயா, வேளாண்மை இயக்குநர் பா.முருகேஷ், மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் மண்டல மேலாளர்கள் கலந்து கொண்டனர்.