சென்னை, அக்.28
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ரூ.1.61 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேக மரப்பலகை பாதை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, மாற்றுத்திறனாளிகளுடன் கலந்துரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:– சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் சிரமம் ஏதுமின்றி கடலை ரசிக்கவேண்டும். கடல் அலையில் தங்களுடைய கால்களை நனைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக பாதையை உருவாக்கித் தந்தார்.
சென்ற 2022–ம் ஆண்டு நவம்பர் மாதம் மாற்றுத்திறனாளிகளுக்கான 225 மீட்டர் தூர பிரத்யேக பாதை திறக்கப்பட்து. 1 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான அந்த பாதையில் இன்றைக்கு ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் தினமும் மெரினாவை ரசித்து வருகிறார்கள்.
மெரினாவில் கிடைத்து வரும் இந்த வரவேற்பை தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு கடற்கரைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த சிறப்பு பாதை அமைக்க மாற்றுத்திறனாளிகள் பலர் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்கள்.
குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினர் தீபக் நாதன் கோரிக்கை வைத்துள்ளார். அதன்படி பெசன்ட் நகர் கடற்கரையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை அமைக்க முதலமைச்சர் கடந்த ஆகஸ்ட் மாதம் அடிக்கல் நாட்டினார். இதன்படி 1 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக பாதை 189 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டு வருகின்றது.
40% பணி முடிந்தது
கிட்டத்தட்ட 40 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன. இந்த பணியை வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்து தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முன்பு மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. முழுவீச்சில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.
முதலமைச்சரின் உத்தரவின்படி இங்கு நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்துள்ளோம். இதனை விரைந்து முடித்து மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி இருக்கின்றோம்.
திருவான்மியூர் பீச்சிலும்…
மேலும் பல கோரிக்கைகளை மாற்றுத்திறனாளிகள் முன் வைத்துள்ளார்கள். அதன்படி பெசன்ட் நகரை தொடர்ந்து திருவான்மியூர் கடற்கரையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான இதேபோன்ற சிறப்பு பாதையை கழக அரசு விரைவில் அமைக்க உள்ளது. சென்னை மட்டுமின்றி நாகப்பட்டினம் வேளாங்கண்ணி கடற்கரையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை அமைக்கப்பட உள்ளது. ஒரு மாதத்தில் அந்த பணி ஆரம்பிக்கப்பட்டு நான்கைந்து மாதங்களில் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு துணை முதலமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் உள்பட அரசு உயர் அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.