செய்திகள்

பெசன்ட் நகரில் மாற்றுத்திறனாளிகள் கடல் அலையை ரசிக்கும் வகையில் மரப்பாதை: துணை முதல்-அமைச்சர் உதயநித

Makkal Kural Official

சென்னை, பிப்.12–-

சென்னை பெசன்ட் நகரில் மாற்றுத்திறனாளிக்கான மரப்பாதையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 61 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதையை பயன்பாட்டுக்கு கொண்டுவந்தார். அப்போது, மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக சக்கர நாற்காலியை தள்ளிச்சென்று அவர்கள் கடலில் கால்நனைத்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்தார். பின்னர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-–

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. அதன்படி, மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் கடல் அலையை ரசிக்க வசதிகள் ஏற்படுத்தித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து, மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று பிரத்யேக மரப்பாதை அமைக்கப்பட்டது.

மேலும், பெசன்ட் நகர் கடற்கரையிலும் பிரத்யேக மரப்பாதை அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது. அதன்படி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மரப்பாதை அமைக்கும் பணியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். ரூ.1 கோடியே 61 லட்சம் செலவில் இந்த மரப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மரப்பாதை 190 மீட்டர் நீளமும், 2.80 மீட்டர் அகலமும் கொண்டது.

மாற்றுத்திறனாளிகள் கடல் அருகே சென்று கடலின் அழகை ரசிக்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் திருவான்மியூர் கடற்கரையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதை அமைக்கப்பட உள்ளது. அடுத்த 5 மாதங்களில் பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வில், அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, நா.எழிலன் எம்.எல்.ஏ., துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *