சென்னை, மார்ச் 27–
பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, தமிழ்நாட்டில் சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் உள்ள 5 இடங்களில் இன்று என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
கடந்த மார்ச் 1ஆம் தேதி பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும், இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் தேடப்பட்டு வரும் பழைய குற்றவாளிகள் இருவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, அந்த 2 நபர்களும் இக்குண்டு வெடிப்பு நிகழ்வதற்கு முன்பாக, சுமார் ஒரு மாத காலம் சென்னையில் தங்கியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் சென்னையில் இந்த நபர்கள் எங்கெல்லாம் தங்கி இருந்தார்கள்? எனவும், யாருடைய உதவியில் தங்கி இருந்தார்கள்? எனவும், யாரையெல்லாம் சந்தித்தார்கள்? எனவும் பல்வேறு கோணங்களில் என்ஐஏ அதிகாரிகள் விவரங்களை சேகரித்து வந்தனர். இந்த நிலையில், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இரண்டு மாநிலங்களிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் ஒருபகுதியாக இன்று தமிழ்நாட்டில், 5 இடங்களில் சோதனை நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. சென்னையில் மூன்று இடங்களிலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு இடங்களிலும் இந்த சோதனை நடத்தப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பெங்களூரைச் சேர்ந்த சிறையில் இருக்கும் குற்றவாளி மெகபூப் பாஷா, பீகார் சிறையில் இருக்கும் குற்றவாளி காஜா மொய்தீன் இவர்களின் கூட்டாளிகள் உதவியுடன் தான் பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முன்பாக இருவரும் சென்னையில் தங்கி இருக்கலாம் என்ற கோணத்திலும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, சென்னை மண்ணடி மூட்டைக்காரன் தெருவில் உள்ள அப்துல்லா என்பவர் வீட்டிலும், முத்தியால்பேட்டை விநாயகர் கோயில் தெருவில் உள்ள ஒருவரின் வீட்டிலும் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. மெகபூப் பாஷா, காஜா மொய்தீன் ஆகியோர் திருவல்லிக்கேணி பகுதியில் தங்கி இருந்த விடுதிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.