செய்திகள்

பெங்களூருவில் 5 ஆண்டுகளுக்கு அபார்ட்மென்டுகள் கட்டத் தடை

பெங்களூரு, ஜூன் 28–

பெங்களூருவில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அப்பார்ட்மென்டுகள் கட்ட அனுமதி வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மழை பொய்த்து போனதாலும், நிலத்தடி நீர்வளம் வறண்டு போனதாலும் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைக்களை எடுத்த போதிலும், மக்களுக்கு தண்ணீர் போய் சேரவில்லை. இதனால் மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அதே போல், கர்நாடகா அரசு திறக்க வேண்டிய காவிரி நீரை திறக்காததும் முக்கிய காரணமாக உள்ளது. கர்நாடகாவிலும் பெங்களூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அபார்ட்மெண்டுக்கு தடை

இந்நிலையில் கர்நாடகாவின் தலைநகரான பெங்களுருவில், தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க, அம்மாநில அரசு புதிய திட்டம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், இது குறித்து பேசிய கர்நாடக மாநில துணை முதல்வர் பரமேஸ்வரா, அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு பெங்களூருவில் அபார்ட்மெண்ட்கள் கட்டுவதற்கு அனுமதியில்லை’ என்ற கருத்தை முன்மொழிந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ‘பெங்களூரு நகரத்தில் ஏராளமான அபார்ட்மெண்ட்கள் இருக்கின்றன. அந்த அபார்ட்மெண்டை விற்கும் போது, அடிப்படைத் தேவையான குடிநீருக்கு உத்தரவாதம் அளிப்பதில்லை. தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக தனியார் லாரிகளில் தண்ணீர் வாங்க வேண்டிய அவசியம் உள்ளது.

அது அவர்களுக்கு தோல் வியாதிகள் வருவதற்கு காரணமாக அமைகிறது. அதனால், அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு, அபார்ட்மெண்ட்கள் கட்டுவதற்கு அனுமதியில்லை என்ற கருத்தை முன்மொழிகிறேன். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பல்வேறு திட்டங்களின் மூலம் பெங்களூரு தேவையான தண்ணீர் பெறுவதற்கான வழிகள் ஏற்படுத்தப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடக அரசு அறிவிப்பு காரணமாக கட்டுமான நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் நிலத்தடி நீர்வளம் அதிகரிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *