செய்திகள்

பெங்களூருவில் 17, 18 ந்தேதி எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம்: 24 கட்சிகளுக்கு அழைப்பு

பெங்களூரு, ஜூலை 12–

17, 18 ந்தேதிகளில் பெங்களூருவில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு நடக்க உள்ள மக்களவை தேர்தலில், பாஜவை வீழ்த்த ஐக்கிய ஜனதா தள தலைவரும், பீகார் முதலமைச்சருமான நிதிஷ் குமார் ஏற்பாட்டின்படி, தலைநகர் பாட்னாவில் கடந்த மாதம் 23ம் தேதி எதிர்க்கட்சிகள் ஆலோசனைகள் கூட்டம் நடந்தது. அதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

24 கட்சிகளுக்கு அழைப்பு

இதில், மக்களவை தேர்தலில் பாஜவை எதிர்த்து ஓரணியில் போராடுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் பெங்களூருவில் வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் நடப்படுவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. முன்னதாக, வரும் 13, 14ம் தேதிகளில் பெங்களூருவில் அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டம் நடக்கும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவித்திருந்தார். ஆனால் அந்த தேதிகளில் சில மாநிலங்களில் சட்டப்பேரவை கூட்டம் நடப்பதால், தேதி மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் 17, 18 ந்தேதி பெங்களூருவில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க திமுகவின் தோழமை கட்சிகளான விசிக, மதிமுக-விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 17ந்தேதி நடக்கும் கூட்டத்தில் பங்கேற்கும் தலைவர்களுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இரவு விருந்தளிக்கிறார். பாட்னா கூட்டத்தில் ராகுல் பங்கேற்ற நிலையில், பெங்களூரு கூட்டத்தில் சோனியா பங்கேற்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *