செய்திகள்

பெங்களூருவில் சூறைக்காற்றுடன் கொட்டிய கனமழைக்கு 206 மரங்கள் வேரோடு சாய்ந்தன

Makkal Kural Official

பெங்களூரு, ஜூன்.4-–

பெங்களூருவில் சூறைக் காற்றுடன் கொட்டிய கனமழைக்கு 206 மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் வாகனங்களும் சேதம் அடைந்தன.

கர்நாடகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் சுட்டெரித்தது. இதனால் ஏப்ரல் மாத தொடக்கம் முதல் தலைநகர் பெங்களூரு உள்பட பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை கொட்டியது. இதற்கிடையே ஜூன் முதல் வாரம் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.

அதற்கு ஏற்றார்போல் ஜூன் 1-ந் தேதி முதல் பெங்களூருவில் கனமழை கொட்டி வருகிறது. பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் பொழிய தொடங்கும் மழை இரவு முழுவதும் இடைவிடாது கொட்டி வருகிறது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக பெங்களூரு வாசிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

சூறைக்காற்றுடன் கொட்டிய கனமழை

நேற்று முன்தினம் மாலையில் சுமார் 6 மணி அளவில் கனமழை பெய்ய தொடங்கியது. பெங்களூருவில் ராஜாஜிநகர், மாகடி ரோடு, சேஷாத்திரிபுரம், சாந்திநகர், மெஜஸ்டிக், சாம்ராஜ்நகர், ஜெயநகர், விஜயநகர், ஹெப்பால், சர்ஜாப்புரா, சிவாஜிநகர், அல்சூர், டிரினிட்டி சர்க்கிள் உள்பட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.

சூறைக்காற்றுடன் கொட்டிய கனமழையால் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் ஜெயநகர், விஜயநகர், ராஜாஜிநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மரக்கிளைகள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்தன.

பசவனகுடி பகுதியில் உடற்பயிற்சி மையம் ஒன்றின் முன்பு இருந்த ராட்சத மரம் முறிந்து விழுந்தது. அப்போது உடற்பயிற்சி மையத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. அப்போது அங்கு நிறுத்தப்பட்ட காரின் மேல் பகுதியில் அப்பளம்போல் நொறுங்கியது.

மரக்கிளை முறிந்து விழுந்து காந்தி பஜாரில் 2 கார்கள், கோரமங்களாவில் 3 கார்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன. இதேபோல் ஜெயநகர் 9-வது மற்றும் 4-வது கிராஸ் சாலைகளில் மரங்கள் வேருடன் சரிந்து விழுந்ததில் சாலையோரம் நிறுத்தப்பட்ட கார்கள், மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன.

மேலும் வீட்டின் மீது மரக்கிளை விழுந்ததால் வீட்டில் இருந்தவர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கினர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் சுமார் 14 மணி நேரத்திற்கு பிறகு தான் வந்து மரக்கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

வீட்டின் மீது விழுந்த மரம்

நேற்று காலையில் அந்த பகுதியில் வீட்டின் மீது விழுந்து கிடந்த மரக்கிளையை மாநகராட்சி ஊழியர்கள் வெட்டி அகற்றியபோது வாலிபர் ஒருவர் தலையில் மரக்கிளை விழுந்தது. இதில் அவரது தலையில் இருந்து ரத்தம் வடிந்தது.

இதையடுத்து அவருக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது. விஜயநகர் பைப்லைன் சாலையில் உள்ள பூங்காவில் இருந்த மரங்கள் ஆங்காங்கே முறிந்து விழுந்தன. அப்போது அருகில் நிறுத்தப்பட்டு இருந்த 2 கார்கள் சேதமடைந்தன.

இதேபோல் ராஜாஜிநகர், கிரிநகர், ரிச்மண்ட் சர்க்கிள், வில்சன் கார்டன், லால்பாக் உள்ளிட்ட பகுதிகளில் இரவு பெய்த கனமழைக்கு ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. அவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு 206 மரங்கள் வேருடன் சாய்ந்தன.

மேலும் 150-க்கும் மேற்பட்ட மரக்கிளைகள் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஜக்கூர் பகுதியில் நெடுஞ்சாலையை கடந்து செல்வதற்கு அமைக்கப்பட்டு இருந்த சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. இதுகுறித்து அறியாமல் சுரங்கச்சாலையில் ஸ்கூட்டரில் சென்ற பெண் உள்ளே சிக்கி கொண்டார். இதையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் இளம்பெண் மற்றும் அவரது ஸ்கூட்டரை மீட்டனர்.

பெங்களூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரலாறு காணாத மழை பெய்துள்ளது. அதாவது நேற்று அதிகபட்சமாக 111.1 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது ஜூன் மாத்தில் ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழையின் அளவாகும்.

இந்த நிலையில் நாளை வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அவ்வப்போது இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை (மஞ்சள் எச்சரிக்கை) விடுத்துள்ளது.

இதனிடையே, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைவில் சென்று ஆய்வு நடத்த உள்ளதாக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிகாரிகளுடன் கூட்டத்தை நடத்தி மழை தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்போம்” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *