தலையங்கம்
கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும் பெங்களூருவை இந்தியாவின் ஐடி தலைநகரமாக மாற்றிய ஆற்றல்மிக்க தலைவருமான எஸ்.எம். கிருஷ்ணா பழத்த பழமாக தமது 91வது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார். தமிழகத்தையும் கர்நாடகாவையும் இணைக்கும் பல முயற்சியை முடுக்கிவிட்டவர், அதற்காக பல முன்னோடி முயற்சிகளை எடுத்த நல்ல தலைவரும் ஆவார்.
கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த எஸ்.எம். கிருஷ்ணா பின்னர் அமெரிக்காவில் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் சட்டத்தை பயின்ற போது கணினி தொழில்நுட்பத்துடன் பரிச்சயமும் பெற்றார்.
1999-ல் முதல்வராக பொறுப்பேற்ற எஸ்.எம். கிருஷ்ணா, “கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் தான் கர்நாடகாவை முன்னனி மாநிலமாக மாற்றும் ஆயுதங்கள்” எனக் கூறினார். அவரது முன்னோடித் திட்டங்களால் பெங்களூரு கணினி உலகின் தொழில்நுட்ப நகரமாக உருவாகியது.
அவரது ஆட்சியில் அமைக்கப்பட்ட பெங்களூர் அஜெண்டா டாஸ்க் ஃபோர்ஸ் (BATF) மற்றும் விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி, இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி ஆகிய தொழில்துறையினரின் ஒத்துழைப்பால் பெங்களூருவை கணினி நகரமாக அதிவேகத்தில் வளர்ந்தது.
பெங்களூருவை மட்டும் அல்லாமல் கர்நாடகாவின் அனைத்து பகுதிகளிலும் தொழில்நுட்பத்தை கொண்டு சென்று விவசாயம், சுகாதாரம் மற்றும் நிர்வாகத்தில் மாறுபட்ட மாற்றங்களை மேற்கொண்டார். 1999-ல் தனது ஆட்சியின் முதல் இரண்டு மாதங்களில் அவர் வீடியோ கான்பரன்சிங் வசதியை அறிமுகப்படுத்தினார்.
கர்நாடகாவின் முதல்வராக அவரது ஆட்சி 2004-ல் முடிவடைந்த பிறகு கிருஷ்ணா இந்தியாவின் வெளிஉறவுத்துறை அமைச்சராகவும் பணி அமர்த்தப்பட்ட போதும் பல முக்கிய திட்டங்களை செயல்படுத்தி உலக நாடுகளின் மத்தியில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டினார்.
கிருஷ்ணாவின் மறைவை அறிந்து பல துறைகளில் தலைமைவகிக்கும் பலரும் தங்களுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இன்போசிஸ் நிறுவனத்தின் நாராயண மூர்த்தி, “அவர் ஒரு முன்னோடி அரசியல்வாதியும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட தலைவர்” என்று மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
எஸ்.எம். கிருஷ்ணா என்ற பெயர், தொழில்நுட்ப மாற்றங்களுக்கும் பெங்களூருவின் உன்னத வளர்ச்சிகளுக்கும் பின்னிப்பிணைந்து இருக்கும் அவரின் சீரிய பங்களிப்புகள் அதை நிறவேற்ற அவர் எடுத்துக்கொண்ட அரும்பாடுகள் கர்நாடகாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் என்றும் நினைவுகளாக வாழ்ந்து கொண்டிருக்கும்..