செய்திகள்

பெங்களூரில் சர்வதேச விமான கண்காட்சி: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

இந்தியாவின் திறமைக்கு இதுவே சாட்சி என பேச்சு

பெங்களூர், பிப்.13–

பெங்களூரில் சர்வதேச விமான கண்காட்சியை துவக்கி வைத்து, விமானங்களின் சாகசத்தையும் பிரதமர் மோடி கண்டு ரசித்தார்.

பெங்களூர் எலகங்கா விமானப்படை தளத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி, 14-வது சர்வதேச விமான கண்காட்சி எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று கோலாகலமாக தொடங்கியது. இந்த கண்காட்சி 17-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த கண்காட்சியை பிரதமர் மோடி இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில்,

“புதிய இந்தியாவின் திறமைக்கு பெங்களூரின் இன்றைய வான்வெளியே சாட்சியாக உள்ளது. புதிய உயரங்களே புதிய இந்தியாவின் முகம் என்பதற்கு இது எடுத்துக்காட்டாக உள்ளது. தேசம் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. பெருகிவரும் இந்தியாவின் திறமைக்கு “ஏரோ இந்தியா 2023” ஓர் உதாரணமாகும். இந்த கண்காட்சியில் 100 நாடுகள் பங்கேற்று உள்ளன. இது உலகநாடுகள் மத்தியில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது. இந்தியா மற்றும் உலக நாடுகளில் இருந்து 700க்கும் அதிமான பங்கேற்பாளர்கள் கண்காட்சியில் பங்கேற்றுள்ளனர். இது கடந்த காலத்தின் அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது.

இந்த ஏரோ இந்தியா கண்காட்சி இந்தியாவின் புதிய அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது. கடந்த சில ஆண்டுகளாக இது வெறும் விமான கண்காட்சியாக மட்டுமே இருந்தது. இன்று இது வெறும் கண்காட்சி மட்டும் இல்லை. இது இந்தியாவின் பலம். இது இந்தியாவின் பாதுகாப்புத்துறை மற்றும் தன்னம்பிக்கையின் நோக்கங்களில் கவனம் செலுத்துகிறது.

பல ஆண்டுகளாக பாதுகாப்பு உபகரணங்களை இறக்குமதி செய்து வந்த இந்தியா தற்போது 75 நாடுகளுக்கு பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்கிறது. 2024–25க்குள் பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதியானது 5 பில்லியன் டாலராக இருக்கும்.

இவ்வாறு பிரதமர் பேசினார்.

மத்திய பாதுகாப்புத் துறை கடந்த 1996ம் ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘ஏரோ இந்தியா’ என்ற பெயரில் பெங்களூரில் சர்வதேச விமான கண்காட்சியை நடத்தி வருகிறது. ஆசியாவின் மிகப் பெரிய விமாமான கண்காட்சியான இதில் பல்வேறு வெளிநாடுகளின் போர் விமானங்கள் பங்கேற்று வானில் சாகசங்களில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் 14-வது ஏரோ இந்தியா சர்வதேச விமான கண்காட்சி பெங்களூரில் உள்ள‌ எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று தொடங்கியது. வருகிற 17ம் தேதி வரை 5 நாட்கள் இந்த கண்காட்சியில் இந்திய போர் விமானங்கள் மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஜெர்மன், ரஷ்யா, கனடா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த அதி நவீன போர் விமானங்களும் பங்கேற்கின்றன.

தேஜாஸ் போர் விமானம்

முதல் நாளான இன்று நாட்டின் இலகு ரக தேஜாஸ் போர் விமானம், ஹெச்டிடி-40 போன்ற உள்நாட்டு விமானங்கள் காட்சிப்படுத்தப்பட இருக்கின்றன. இதுதவிர அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் எம். ஹெச். ஹெலிகாப்டர், 60ஆர் ரோமியோ ஹெலிகாப்டர், இஸ்ரேலின் ஏரோஸ் உள்ளிட்ட விமானங்களும் சாகச‌த்தில் ஈடுபடுகின்றன.

இந்த கண்காட்சியில் மொத்தமாக 811 அரங்குகள் உள்ளன. மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் 701 இந்திய விமான நிறுவனங்களின் அரங்குகளும், 110 வெளிநாட்டு அரங்குகளும் இடம்பெறுகின்றன.

வட்ட மேஜை மாநாடு

ஏரோ இந்தியா விமான கண்காட்சியை முன்னிட்டு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் 500க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்கும் வட்டமேஜை மாநாடு இன்று மாலை நடைபெறுகிறது.

5 நாள் கண்காட்சியில் முதல் மூன்று நாட்கள் வியாபாரிகளுக்காக நடக்கிறது. கடைசி இரண்டு நாளில் பொதுமக்கள் விமான கண்காட்சியை பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *