செய்திகள்

பெங்களூரில் கனமழைக்கு வாய்ப்பு: மஞ்சள் எச்சரிக்கை

பெங்களூரு, மே 8–

பெங்களூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பெங்களூருக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் கடந்த மாதம் முழுக்க வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்தது. 38 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாகவே வெப்பம் பதிவாகி வந்தது. இதனால் அங்கு இருப்பவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளானார்கள்.

இந்த நிலையில் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக ஆங்காங்கே மழை பெய்ததால், சற்று வெப்பம் குறைந்தது.

பெங்களூருவில் இன்று காலையில் பல இடங்களில் மழை பெய்தது. நகரின் பல்வேறு பகுதிகள் நீரில் தத்தளித்தன. போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் பெங்களூரு போக்குவரத்து காவல் துறையினர், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள முக்கிய பகுதிகள் குறித்து குடிமக்களுக்குத் தெரிவித்து வருகின்றனர்.

தொடர் மழையைத் தொடர்ந்து, பெங்களூருவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மஞ்சள் எச்சரிக்கையானது பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கான சாத்தியத்தை குறிக்கிறது.

இன்று 21 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை காணப்படும், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். நாளை வெப்பநிலை 22 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மே மாத காலத்தில் பெங்களூருவில் மழைப்பொழிவு சராசரியாக 128.7 மி.மீ. ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு சராசரி மழையை பெங்களூரு பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இன்று மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் மக்கள் தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதேபோல கர்நாடகா மாநிலத்தில் மேலும் 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி விஜயநகரம், தும்கூர், ஷிமோகா, ராமநகரா, மைசூரு, மாண்டியா, கோலார், குடகு, ஹாசன், சித்ரதுர்கா, தாவங்கரே, சாமராஜநகர், சிக்மகளூர், பெங்களூரு புறநநகர் – மாநகர், யாதகிரி, விஜயபுரா, ராய்ச்சூர், கலபுர்கி, பிதார், உடுப்பி மற்றும் தட்சிண கன்னடா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

நஞ்சன்கூடில் அதிக அளவு மழை பெய்துள்ளது. கிருஷ்ணராஜசாகர், ஹோனகெரே, மிடிகேஷி, கோலார், பெங்களூரு சர்வதேச விமான நிலையம், பாகமண்டல், தேவனஹள்ளி, கொள்ளேகலா, மாண்டியா ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *