ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகிறது
மணிக்கு 90 கி.மீ. வேகத்தி்ல் காற்று வீசும்
வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை, நவ. 29–
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று, நாளை புதுச்சேரி அருகே கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன முதல் மிக கனமழை பெய்யும்.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுகிறது. தற்போது சென்னைக்கு தென்கிழக்கு திசையில் 380 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 340 கி.மீ. தொலைவிலும், நாகையில் இருந்து 300 கி.மீ தொலைவிலும் வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. தற்போது மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. அடுத்த 6 மணி நேரத்தில் ‘பெங்கல்’ புயல் உருவாகிறது. நாளை மதியம் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை பெங்கல் புயல் கடக்கிறது.
இந்த புயலானது கரையை கடக்கும்போது மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்திலும், அவ்வப்போது 90 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
இதன் காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டத்தில் மழை பொழிவு அதிகம் இருக்கும். முன்னதாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அது புயலாக மாறும் என தெரிவித்துள்ளது.
ரெட் அலர்ட் எச்சரிக்கை
இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் சில இடங்களில் கன முதல் மிக கனமழை வரையும், சில இடங்களில் அதி கனமழை (ரெட் அலர்ட்) பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் சில இடங்களில் இன்று மிக கனமழை பெய்யக் கூடும். ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கன முதல் மிக கனமழை வரையும், சில இடங்களில் அதி கனமழை (ரெட் அலர்ட்) பெய்யக்கூடும்.
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் மிக கனமழை பெய்யக் கூடும். திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
கடலில் வீசி வரும் பலத்த சூறைக்காற்றால் டிசம்பர் 2ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
சென்னையில்
6 செ.மீ. மழை
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு வருமாறு:–
கத்திவாக்கம், சென்னை கலெக்டர் அலுவலகம், சென்னை டிஜிபி அலுவலகம் தலா 6 செ.மீ., தண்டையார்பேட்டை, பேசின் பிரிட்ஜ், அண்ணா பல்கலைக்கழகம், நந்தனம், திருவொற்றியூர் தலா 5 செ.மீ., தரமணி, ஐஸ் ஹவுஸ், மாதவரம், எண்ணூர், சென்னை சென்ட்ரல், கொளத்தூர், மணலி, ராயபுரம், பெரம்பூர் தலா செ.மீ., அண்ணா நகர் மேற்கு, ஆலந்தூர், மீனம்பாக்கம், கோடம்பாக்கம், அடையார், பள்ளிகரணை, அயனாவரம், திருவிக நகர், சோழிங்கநல்லூர், வடபழனி, அமைந்தகரை, மடிப்பாக்கம், எம்.ஜி.ஆர். நகர், அம்பத்தூர், ராஜா அண்ணாமலைபுரம், பொன்னேரி, தண்டையார்பேட்டை தலா 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
கடலூர், விழுப்புரத்தில்
விடுமுறை
அதி கனமழை மற்றும் மிக கனமழை எச்சரிக்கையின் எதிரொலியாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
இன்று நடைபெற இருந்த அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அது குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் இன்றும், நாளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.