செய்திகள் வாழ்வியல்

பூராட நட்சத்திரக்காரர்களின் பரிகாரத்திற்கு கடுவெளி ஆகாசபுரீஸ்வரர் திருக்கோவில்!

Spread the love

நட்சத்திரக்கோவில் வரிசையில், சென்றவாரம் மூலம் நட்சத்திரக்காரர்களுக்கான பரிகாரக் கோவிலைப் பார்த்தோம். இந்த வாரம் பூராட நட்சத்திரக்காரர்களுக்கான பரிகாரக்கோவில் ஆன அருள்மிகு கடுவெளி ஆகாசபுரீஸ்வரர் திருக்கோவில், கடுவெளியைப்பற்றி பார்ப்போம்.

இந்தக்கோவில், ஏறத்தாழ 2500 ஆண்டுகள் பழைமையான கோவில் ஆகும். ஆகாய வெளியில் உள்ள அனைத்து தேவதைகளும், கட்டிடங்களுக்கு வாழ்வு தருகின்ற வாஸ்து பகவானும், பூராட நட்சத்திரத்து அன்று இத்தலத்து இறைவன் ஆகாச புரீஸ்வரரிடம் வந்து பூஜை செய்து அவரது ஆசி பெற்று செல்வதால் மிகவும் சக்தி வாய்ந்த தலம் ஆக விளங்குகிறது.

பஞ்ச பூதங்களில் ஆகாயத்து அதிபதி ஆக இவர் விளங்குவதால், இவர் ஆகாச புரீஸ்வரர் என்ற பெயர் பெற்றார். கடு வெளி என்பதன் பொருள் “பரந்த , ஆகாய வெளி” ஆகும். கடுவெளிச் சித்தர் என்ற ஒரு மகா சித்தர் அவதரித்து-வாழ்ந்த தலம் இதுவாகும். ஆனால் இவர் கடைசியில் சமாதியான இடம் காஞ்சீபுரம்.

இவர் இறையாற்றல் பெற்ற மகாசித்தர். இவரது உபதேசம், இங்குள்ள மக்களைக் கவர்ந்து இழுத்தது. சுற்றி உள்ள ஊர்களிலும் இவரது பெயர் பிரசித்தமாயிற்று. இந்த நேரத்தில், இவர் சிவபெருமானைக் காண வேண்டி கடுமையான தவம் செய்யலானார். இவரது தவத்தின் கடுமையை உணர்ந்து, சிவபெருமான் நோில் தோன்றி, அருள் புரிந்து ஆசி வழங்கினார்.

அப்பொழுது சிவபெருமானிடம், தான் சித்துக்கலைகளில் மேன்மை அடைய வரம் வேண்டினார். அதன்படியே, சிவபெருமான் அருளினார். இந்த தலத்தில் பலகாலம் வாழ்ந்து, இங்குள்ள மக்களுக்கு நன்மைகளை உபதேசித்து பின்னர் அவரது கடைசி காலத்தில் காஞ்சீபுரம் சென்றடைந்தார். இந்த சித்தருக்கு காட்சி தரும்பொழுது, நந்தி இங்கிருந்து விலகி கோவிலுக்கு வெளியே சென்று காவல் புரிந்தார்.

ஆகவே, அனைத்து சிவ தலங்களிலும் உள்ளே பிரகாரத்தின் எதிரில் அமர்ந்திருக்கும் நந்தீஸ்வரர் இங்கு கோபுரத்திற்கு வெளியே அமர்ந்து இருப்பது சிறப்பு என்பதும் அவரே காவல் தெய்வமாக இருந்து காப்பதாகவும் ஐதீகம்.

அவரது பெருமைகளை அறிந்த சோழ மன்னர், அவரது வேண்டுதலின்படி சிவபெருமானுக்கு ஒரு கோவில் எழுப்பி, அந்த சிவபெருமானுக்கும், இவரது பெயரைச்சேர்த்து கடுவெளி ஆகாசபுரீஸ்வரர் என்று அழைக்கும்படி செய்தார். இந்த கோவில் 3 அடுக்குகளைக்கொண்ட அற்புதமான கோவில்.

பஞ்சபூதங்களில் ஒன்றான ஆகாயவெளிக்கு அதிபதியாக இந்த ஈஸ்வரன் இருப்பதால், இங்கு உயரமான கட்டிடங்களைக் கட்டுபவர்கள் முதலில் இவரை வணங்கி, வாஸ்து பூஜை செய்து பின்பு கடைக்கால் செய்கிறார்கள். மேலும் பூராட நட்சத்திரத்திற்கு அதிபதியாக விளங்குவதால், பூராட நட்சத்திரக்காரர்களுக்கான பரிகாரக்கோவில் ஆக இது விளங்குகிறது.

தங்கள் பிறந்த நாளிலோ அல்லது பூராட நட்சத்திரத்து அன்றோ இங்கு வந்து, சாம்பிராணி புகை போட்டு, புனுகு, ஜவ்வாது சாத்தி, கேசரி நைவேத்தியம் படைத்து பூஜை செய்து வணங்க அனைத்து தோஷங்களும் நீங்கி, புனர் ஜன்மம் பெற்று, செல்வாக்கான வாழ்க்கை கிட்டும் என்பது ஐதீகம்.

திருமணத்தடை நீங்கி, நல்ல மனைவி/கணவன் கிடைக்கப்பெற்று, நன்மக்களைப் பெற்று சுக வாழ்வு பெறுவர். மங்களகரமான வாழ்க்கை தருபவள் என்பதால், இத்தல அம்மனுக்கு மங்களாம்பிகை என்பது ஆகும்.

பொதுவாகவே, பூராட நட்சத்திரக்காரர்கள் கொண்டுள்ள குணநலன்கள்:

இவர்கள் சுகபோகிகளாயிருப்பர். கடமையில் ஆர்வம் உள்ளவர்கள். வாக்குவாதத்தில் ஈடுபடுவர். பிடிவாத குணம் உண்டு. செல்வாக்கு உள்ளவர்களாயிருப்பர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இக்கோவிலை சீரமைத்த பொழுது கடுவெளி சித்தரின் சிலை ஒன்று கிடைக்கப்பெற்றது. அது இப்பொழுது பிரகாரத்தில் வைக்கப்பட்டுள்ளது. சித்தர்களிடம் ஈடு பாடு உள்ளவர்கள் பலர் இங்கு வந்து வணங்கி ஆத்ம திருப்தியுடன் பல உண்மைகளை உணர்ந்து செல்வதாக கூறப்படுகிறது.

இது ஒரு சிறிய கிராமம். சுமார் 250 குடும்பங்கள் இங்கு உள்ளன. முக்கிய தொழில் விவசாயம். காவோி, கொள்ளிடத்திற்கு நடுவில் அமைந்துள்ளது.திருவையாறு-திருக்காட்டுப்பள்ளி செல்லும் வழியில் உள்ளது. தஞ்சையிலிருந்து 13,23, 5 ம் எண் பஸ் மூலம் இங்கு வரலாம்.

கோவில் காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், பூராட நட்சத்திரத்து அன்று

காலை 8 மணி முதல் மாலை 1 மணிவரையும் திறந்து இருக்கும்.

அருள்மிகு கடுவெளி ஆகாசபுரீஸ்வரர் திருக்கோவில்,கடுவெளி,

திருவையாறு தாலுக்கா, தஞ்சை மாவட்டம்.

தொலை பேசி எண்:

04434 47826, 96267 65472

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *