புதுடெல்லி, ஜன.7–
உத்ராகண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரம் கொஞ்சம் கொஞ்சமாக பூமிக்கு அடியில் “புதைந்து கொண்டிருக்கிறது”. வீடுகள் மற்றும் கட்டமைப்புகளின் சுவர்களில் பெரிய அளவில் விரிசல்கள் காணப்படுகின்றன.
இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள உத்ராகண்ட் நகரமான ஜோஷிமத், கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏனெனில் உத்ராகண்ட் ஜோஷிமத் நகரம் கொஞ்சம் கொஞ்சமாக “புதைந்து கொண்டிருக்கிறது”. வீடுகள் மற்றும் கட்டமைப்புகளின் சுவர்களில் பெரிய அளவில் விரிசல்கள் காணப்படுகின்றன. ஜோஷிமத்தில் உள்ள 500க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல்கள் உண்டாகியுள்ளன. சில வீடுகள் இடிந்து பூமியில் தரைமட்டமானதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.
ஜோஷிமத்தின் நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், ஜோஷிமத் நகரை ஆய்வு செய்வதற்காக நிபுணர்கள் குழு அனுப்பப்பட்டுள்ளதாக உத்ராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். ஜோஷிமத் பூமியில் புதைந்து பேரழிவு ஏற்படக் கூடும் என்பதற்கான எச்சரிக்கைகள் பல ஆண்டுகளாக நிலவி வருகிறது.
வாழ தகுதியற்ற நகரம்
இந்த நகரம் பழங்காலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் அமைந்துள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த நகரம் கடந்த 1976 முதல் வாழ்வதற்கு ஆபத்தான இடமாக உள்ளது.
ஜோஷிமத் பூமிக்கு அடியில் சில அங்குலம் மூழ்கியதற்கு முக்கிய காரணம் அந்த இடத்தின் புவியியல் அமைப்புதான். நிலச்சரிவினால் ஏற்பட்ட இடிபாடுகளின் மீது நகரம் அமைந்துள்ளதால், அந்த நிலம் குறைந்த அளவிலான் தாங்கும் திறன் கொண்டது. அதிக அளவு கட்டுமானம் மற்றும் மக்கள் தொகையை அதனால் தாங்க முடியாது.
நீர்மின் திட்டங்கள் போன்ற பல மிகப்பெரிய திட்டங்களின் கட்டுமானப் பணிகளாலும், தேசிய நெடுஞ்சாலையின் விரிவாக்கம் மற்றும் அதிகப்படியான மக்கள்தொகை காரணமாகவும் ஜோஷிமத் நிலம் நிலையற்றது என நிரூபிக்கப்பட்டுள்ளது. கட்டுமானம் மற்றும் பெருகிவரும் மக்கள் தொகை மட்டுமின்றி, விஷ்ணுபிரயாகில் இருந்து ஓடும் நீரோடைகள் காரணமாக ஜோஷிமத்தில் உள்ள பாறைகளை அரிப்பதால், நகரத்தில் பாறைகள் சிதறி, தளர்வான மண், பழைய நிலச்சரிவு இடிபாடுகளுடன் இணைந்துள்ளது.