செய்திகள் முழு தகவல்

பூமிதான இயக்கம் மூலம் நிலத்தை பகிர்ந்தளித்து உற்பத்தி பெருக்கத்துக்கு வித்திட்ட வினோபா வே!


இந்திய விடுதலையின் 75 வது ஆண்டு நிறைவு!


மா. இளஞ்செழியன்


காந்தியம் என்பது சாத்தியமான நடைமுறையே என்பதை நிரூபித்துக் காட்டியவர்களில் முதன்மையானவர் ‘பூமிதான இயக்கத்தின் தந்தை வினோபா பாவே. “காந்தியத்தை என்னைவிட நன்கு புரிந்துகொண்டவர்” என்று காந்தியாலேயே பாராட்டப்பட்டவர் வினோபா வே.

வினோபா பாவே, மகாராஷ்டிரத்தின் கொலாபா மாவட்டத்தில் ககோடா என்ற ஊரில் 1895 ஆம் ஆண்டு 9 வது மாதம் 11 ந்தேதி பிறந்தார். பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் விநாயக். இளம் வயதிலேயே மகாராஷ்டிர சித்தர்கள், சிந்தனாவாதிகளின் நூல்களைப் படித்து அறிவைப் பெருக்கிக்கொண்ட விநாயக்குக்குக் கணிதம் மிகவும் பிடிக்கும். ஆனால், கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது நாட்டின் நிலையை எண்ணி மன அமைதியை இழந்து, சாமியாராவதற்காக காசிக்குச் சென்றார்.

ஒரு நாள், செய்தித்தாளை வாங்கிப் பார்த்தால், காசி இந்து சர்வகலாசாலையில் காந்தி ஆற்றிய உரை கண்ணில்படுகிறது. வாசிக்க வாசிக்க அவருக்கு வழி புரிந்துவிட்டது. காசியும் இல்லை, கல்கத்தாவும் இல்லை. இனி நாம் போக வேண்டிய இடம் அண்ணலின் திருவடி நோக்கி என்று முடிவெடுத்து காந்தியாரிடம் 1916 ஆண்டு ஜூன் 7 ந்தேதி அடைக்கலம் புகுந்தார்.

காந்தி ஆசிரமத்தில் தங்கி சேவை செய்தார். காந்தியின் கட்டளையை ஏற்று வார்தா ஆசிரமப் பொறுப்பை 1921 ஆம் ஆண்டு ஏப்ரலில் ஏற்றார். கதர் தயாரிப்பு, கிராமத் தொழில்வளர்ச்சி, புதிய கல்வி, கிராம சுகாதாரம் ஆகியவற்றில் பயிற்சி எடுத்துக்கொண்டு, மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்தார். 1940-ல் தனிநபர் சத்தியாகிரகத்துக்கு வினோபாவைத்தான் காந்தி முதலில் தேர்வுசெய்து அனுப்பினார்.

வேலூர் சிறையில்…

‘வெள்ளையனே வெளியேறு’இயக்கத்தில் 1942-ல் பங்கேற்றபோது கைதுசெய்யப்பட்டு வேலூர், சியோனி ஆகிய ஊர்களில் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைகளில் இருந்தபோது ‘ஸ்வராஜ்ய சாஸ்திரம்’, ‘ஈஷாவாஸ்ய விருத்தி’, ‘ஸ்திதப்பிரக்ஞன் தரிசனம்’ போன்ற முக்கியமான நூல்களையும் எழுதினார். வேலூர் சிறையில் இருந்தபோது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளையும் கற்றார். லோக நாகரி என்ற எழுத்து வடிவத்தையும் உருவாக்கினார்.

1948 மார்ச்சில் காந்திஜியின் சீடர்கள் சேவாகிராமத்தில் ஒன்றுகூடி ‘சர்வோதய சமாஜம்’ என்ற அமைப்பை உருவாக்கினார்கள். தேசப் பிரிவினையால் புண்பட்ட மக்களின் மனப் புண்களை ஆற்றவும் மக்களுக்குத் தேவைப்படும் கல்வி, தொழில், சுகாதாரம் ஆகியவற்றை அளிக்கவும் சர்வோதயத் தொண்டர்கள் புறப்பட்டனர். தங்கம், பணம் ஆகியவற்றைச் சம்பாதிக்கும் ஆசையை மக்கள் துறக்க வேண்டும் என்பதற்காக ‘காஞ்சன் முக்தி’என்ற இயக்கத்தை வினோபா பாவே 1950-ல் தொடங்கினார்.

பூமிதான இயக்கம்

1950 நெருக்கத்தில் தெலுங்கானா பகுதிகளில் இந்திய பொதுவுடமைக் கட்சி ஆயுதமேந்திய கிளர்ச்சி ஒன்றை நடத்திக்கொண்டிருந்தது. நிலமற்ற ஏழை விவசாயிகளின் ஆதரவு இந்த கிளர்ச்சிக்கு பெருவாரியாக இருந்தது. இந்தப் புரட்சியை அடக்க மாநில மற்றும் நடுவண் அரசாங்கங்கள் கடுமையான முறைகளைக் கையாண்டன. அப்போது வினோபா பாவே, நிலமின்மையால் தான் மக்கள் ஆயுதமேந்திப் போராடும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள், அரசிடமிருந்து இவர்களுக்கு நிலம் கிடைக்கவில்லை என்பதை அறிந்தார்.

1951-ல் தெலங்கானா பகுதியில் போச்சம்பள்ளியில் அவருடைய பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வந்த தாழ்த்தப்பட்ட மக்களிடம், அவர்களின் முக்கியத் தேவை என்ன என்று வினோபாவே கேட்டார். விவசாயம் செய்யத் தங்களுக்கு 80 ஏக்கர் நிலம் வேண்டும் என்றார்கள். இச்சிக்கலைத் தீர்க்க, நிலமுடையவர்களே முன்வந்து நிலங்களை கொடையளிக்க வேண்டுமென்று வேண்டினார்.

“என்னுடைய 100 ஏக்கர் நிலத்தைத் தருகிறேன்” என்று ராமச்சந்திர ரெட்டி என்ற நிலச்சுவான்தார் அறிவித்தார். இதை ஒப்புக்கொண்டு பலரும் நிலம் தானம் செய்ய முனவரவே, இது ஒரு பெரிய இயக்கமாக உருவானது. வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்ந்த வினோபா பாவே, ‘பூமிதான இயக்க’த்தைத் தொடங்கினார். எதிர்பாராத வகையில், அன்றாடம் 200 ஏக்கர் முதல் 300 ஏக்கர் வரையிலான நிலங்கள் தானமாகக் கிடைத்தன. உத்தரப் பிரதேசத்தின் மங்ராத் என்ற கிராம மக்கள் தங்களுடைய முழு கிராமத்தையே ஊர் தானமாகக் கொடுத்தனர்.

கம்யூனிசத்தின் அகிம்சை வடிவம்

வினோபா பாவே இந்தியாவெங்கும் பயணம் செய்து நிலக்கொடை இயக்கத்துக்காக பிரச்சாரம் செய்தார். அவருடைய் சர்வோதயா ஆசிரமம் இவ்வியக்கத்தை ஒருங்கிணைத்து நடத்தியது. இந்த பூமி தான இயக்கத்தின் மூலம் 41,94,271 ஏக்கர் நிலங்களைத் தானமாகப் பெற்றார். அதில் 12,85,738 ஏக்கர் நிலங்கள் ஏழைகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டன.

18,57,398 எதற்கும் பயன்படாத களர் நிலங்களாக இருந்தன. எஞ்சியவை மீது தானம் கொடுத்தவர்களின் வாரிசுகள் வழக்கு போட்டதால் முடிவு காணப்படாமல் போய்விட்டது. இதனால் எதிர்பார்த்த இலக்கை இவ்வியக்கத்தால் அடைய முடியவில்லை. மேலும் இவ்வாறு சேகரிக்கப்பட்ட நிலங்கள், தற்காலம் வரை முழுவதுமாக நிலமற்றவர்களுக்கு பிரித்தளிக்கப்படவில்லை.

காற்று, தண்ணீர், வானம், சூரிய ஒளி போல நிலமும் இயற்கையின் கொடை. அதைத் தனிப்பட்ட நபர்கள் பேரில் சொந்த சொத்தாக அனுபவிப்பது கூடாது என்ற உயரிய நோக்கத்தை ‘பூமிதானம்’ வலியுறுத்தியது. ‘காந்தியம்’ என்பது கம்யூனிசத்தின் அகிம்சை வடிவம் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு.

சம்பல் பள்ளத்தாக்குக் கொள்ளையர்கள்கூட வினோபா பாவேவை நடைப்பயணத்தின்போது சந்தித்து, தங்களுடைய ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டுச் சரண் அடைந்தார்கள். சிறையில் தண்டனையை அனுபவித்துவிட்டு வந்து, ஆசிரமத்தில் தங்களுக்கிடும் பணியைச் செய்வதாகக் கூறிச் சென்றார்கள். காந்தியத்தின் வலிமை இதுதான். சத்தியத்தின் முன் எந்த ஆயுதமும் செயலிழந்துதான் போகும்!


Leave a Reply

Your email address will not be published.