சிறுகதை

பூனைகள் – ராஜா செல்லமுத்து

ரத்தினம் வீட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிறைய பூனைகள் நடமாடிக் கொண்டிருக்கும். ஒன்றுக்கொன்று விளையாடுவது. குதிப்பது என்று அந்த வீடு முழுக்கப் பூனைகளின் ராஜ்ஜியமாக இருக்கும்.

‘அங்க போகாத. இங்க உட்காரு. அப்படி எல்லாம் தாவக் கூடாது’ என்று மனிதர்களிடம் பேசுவது போல அந்தப் பூனைகளிடம் பேசுவார் ரத்தினம்.

தினம் காலையில் கருவாடு, மதியம் கருவாடு, மாலை கருவாடு கொடுத்து தன் பிள்ளைகளைப் பார்ப்பது போல் பூனைகளைப் பாதுகாத்து வளர்த்து வந்தார்.

பூனை என்றால் அவருக்கு உயிர். வெளியிலிருந்து வருபவர்கள் கூட ‘ஏன் இப்படி பூனைகள வளத்திட்டு இருக்கிங்க? இது ஆகாது. பூனை முடி சாப்பாட்டுல விழுந்தா ஆஸ்துமா வரும். உடம்புக்கு நல்லதில்ல’ என்று எத்தனையோ பேர் ரத்தினத்திற்கு அறிவுரை சொல்லிப் பார்ப்பார்கள்.

‘இல்லைங்க. அது பாவம் இருந்துட்டு போகட்டுமே?’ என்று ரத்தினம் பூனைகளுக்கு ஆதரவாகப் பேசுவார்.

பூனைகள் எங்கிருந்தாலும் ரத்தினம் கூப்பிட்டால் ஓடி ஓடி வரும்.

‘பூச்சா இங்கே வாங்க’ என்று சொன்னால் அத்தனை பூனைகளும் ரத்தினம் காலைச் சுற்றியே கிடக்கும். அதனால் ரத்தினத்திற்கு அந்தப் பூனைகள் எல்லாம் உடன்பிறவா சகோதரர்கள் போல இருந்தார்கள்.

அதற்கு சாப்பாடு வைப்பது. அது சாப்பிடுவதை ரசிப்பது என்று ரத்தினம் அந்தப் பூனைகள் மேல் உயிராக இருந்தார்.

இது ஒரு சிலருக்கு எரிச்சலை வரவழைத்தது. பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட ரத்தினத்தை ரொம்பவே தப்பாகப் பேசினார்கள்.

‘இங்க பாருங்க…. நீங்க பூன வளக்குறதா இருந்தா உங்க வீட்டுல வளங்க. அதுக எங்க வீட்டுக்குள்ள வருது. இன்னொரு தடவ வந்தா பூனை அடிச்சுக் கொன்றுவேன்’ என்று பக்கத்து வீட்டுக்காரர்கள் சொன்னார்கள்.

‘ஏங்க அது வாயில்லா ஜீவன். ஏதோ வந்துட்டு போகட்டுமே? அத எப்படி கொலை வெறியுடன் பேசுறீங்க? எனக்கும் இந்தப் பூனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்க. நான் இந்த வீட்டுக்கு வரும் போதிருந்து இந்தப் பூனைகள் எல்லாம் வருது பாவம். அதுக்கு யார் இருக்கா? நம்ம சாப்பிடற எச்சத்தைக் கொடுத்தாலே போதும் சாப்பிடும். நாம தனியா சாப்பாடு கொடுக்கணும்னு அவசியமில்ல. நீங்க சாப்பிட்டுட்டு கீழ போடுற எலும்ப அதுகளுக்கு குடுங்க சாப்பிடும். நீங்க சாப்பிட்டது போக மிச்சம் கொஞ்சம் சோறு போடுங்க. இல்ல கொஞ்சம் பால் வையுங்க சாப்பிடும்.

இத பாத்தா நம்ம மனசு பாரம் குறையும். அது விளையாடுறதைப் பாருங்க. உங்களுக்கு இருக்கிற மன அழுத்தம். ரத்த அழுத்தம் குறைஞ்து போகும். மனுசங்களையே பார்த்துட்டு இருந்தா வெறுப்பு தான். ஒவ்வொரு மனுஷனுக்கும் வெவ்வேறு விதமான குணங்கள். ஆனால் விலங்குகள் , பறவைகள் அப்படி இல்ல. அதுகளுக்கு ஒரே புத்திதான். ஒரே சொல்லு தான். நீங்க அதுக்கு அன்பு காட்டுங்க. அது உங்க காலையே சுத்திக்கிட்டு இருக்கும்.

எனக்குக் கூட இந்தப் பூனைகளை எல்லாம் தெரியாது. இங்க வந்த பிறகு இரண்டு கருவாடு வாங்கி போட்டேன். ஆனா என்னையே சுத்திட்டு இருக்கு பாருங்க. எங்க இருந்தாலும் பூச்சா வான்னு கூபிட்டா வந்துருது. என் மனசுல அவ்வளவு சந்தோசமா இருக்குதுன்னு தெரியுமா? சாப்பிடும்போது மனுஷங்கள தாண்டி மற்ற உயிர்களையும் யோசிச்சு பாருங்க. அதுகளோட பாசம் உங்களுக்கு புரியும்’ என்று ரத்தினம் சொன்னார்.

பக்கத்து வீட்டுக்காரருக்குப் புரியாமல் இருந்தது.

பூனை வந்தால் அடித்து துரத்துவது கல்லடி தருவது துன்புறுத்துவது என்று செய்து கொண்டிருந்தார். ரத்தினம் பேசிய பிறகு அவர் மனதில் சுருக்கென்று தைத்தது.

ஒரு நாள் வீட்டுக்கு வந்த பூனையைக் கூப்பிட்டார் . எப்போதும் விரட்டிவிடும் மனநிலையைக் கொண்டவரைப் பார்த்து மிரண்டு ஓடிய பூனைகள் மெல்ல கூப்பிட்டவரிடம் வந்தன.

இரண்டு கருவாடு, மீன் வைத்தார். சாப்பிட்டது அவர் நம்மை விரட்டிவிடுபவர் என்று தெரிந்தும் வாலை வாலை ஆட்டியது. பின் இரண்டு நாள் தொடர்ந்து அதற்கு உணவு கொடுத்தார்.

பக்கத்து வீட்டுக்காரரிடம் பாசமாக இருந்தன பூனைகள். அவருக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அதுவரையில் எதற்கெடுத்தாலும் யாரையும் வெடுக்கென்று சண்டை போட்டுக் கொண்டிருக்கும் பக்கத்து வீட்டுக்காரர் பூனைகளுக்கு சோறு வைத்து அதைப் பராமரிக்கும் போது அவருக்கு ஒரு அன்பு மேலிட்டது.

ஏதோ இனம் புரியாத சந்தோசம் அவருக்குள் துளிர்விட்டது. ரத்தினம் சொன்னது உண்மைதான். ஏதோ ஒரு நம்ம மாற்றம் ஏற்படுது என்று நினைத்த அவர் தினமும் பூனைகளுக்கு உணவு வைக்க ஆரம்பித்தார்.

அதுவரையில் இல்லாத ஒரு மன நிலை அவருக்கு ஏற்பட்டது. பக்கத்து வீட்டுக்காரர்கள், அடுத்த வீட்டுக்காரர்கள் எங்கு சென்றாலும் வம்பு வழக்கு இழுத்துக் கொண்டிருக்கும் அந்த நபர் இப்போதெல்லாம் ரொம்பவே சாந்தமாக இருந்தார்.

இது மற்றவர்களுக்கு வியப்பாக இருந்தது.

இவ்வளவு சாந்தம் ஆகிட்டாரே? எப்படி ?

என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள் .

அவர் பூனைக்கு உணவு வாங்கிக் கொண்டு தனக்குத்தானே பேசிக் கொண்டு மாடிப்படிகளில் ஏறி வந்தார்.

அவர் வருகையை எதிர்பார்த்து எத்தனையோ பூனைகள் ‘மியாவ் மியாவ்’ என்று கத்தியது. அந்தப் பூனைகள் உடன் மனிதர்களோடு பேசுவது போல பேசிக்கொண்டு இருந்தார் .

இதைப் பார்த்த ரத்தினத்திற்கு ரொம்பவே சந்தோஷம் ஏற்பட்டது. ஒரு மனிதனைத் திருத்தி சந்தோஷப்பட வைத்து விட்டோம். ஒவ்வொரு மனிதனும் இப்படி மாறிவிட்டால் இந்த உலகத்தில் சண்டை என்பதே கிடையாது என்பதை உணர்ந்த ரத்தினம் அவர் வீட்டுக்குச் சென்றார்.

பூனைகள் பக்கத்து வீட்டுக்காரர் வைத்த உணவைச் சாப்பிட்டுவிட்டு, ரத்தினம் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *