டிசம்பர் மாதம் ரெயில் சேவை தொடங்கும் : மேலாண்மை இயக்குநர் சித்திக் தகவல்
சென்னை, ஏப். 29–
பூந்தமல்லி முதல் போரூர் வரை 9.1 கி.மீ. டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
டிசம்பர் மாதம் ரெயில் சேவை தொடங்கப்படும் என்று மேலாண்மை இயக்குநர் சித்திக் கூறினார்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட மெட்ரோ ரெயில் சேவை மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது நீலம், பச்சை என இரண்டு வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கம் செய்யும் பணிகள் விறுவிறுவென நடந்து வருகின்றன. இரண்டாம் கட்டத் திட்டத்தில் ஊதா, காவி, சிவப்பு என மூன்று வழித்தடங்களில் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு 63,246 கோடி ரூபாய் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை ஒவ்வொரு கட்டமாக பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டமானது 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் முக்கியமான வழித்தடமான கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பால பாதையாகவும் அமைகிறது.
இதில் பூந்தமல்லி புறவழிச்சாலை, பூவிருந்தவல்லி, முல்லைத்தோட்டம், கரையான் சாவடி, குமணன் சாவடி, காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், தெள்ளியரகரம், போரூர் புறவழிச்சாலை, போரூர் சந்திப்பு என 10 ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், 2ம் கட்ட திட்டத்தில் ஓட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கென தலா 3 ரெயில் பெட்டிகளை கொண்ட 70 மெட்ரோ ரெயில்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கான ஒப்பந்தம் BEML நிறுவனத்திற்கு ரூ.3,657.53 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.
இதில் பூந்தமல்லி – போரூர் இடையே பல இடங்களில் ரெயில் பாதை அமைக்கும் பணி, பொறியியல் கட்டுமானப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. பூந்தமல்லி- போரூர் இடையே வரும் டிசம்பரில் சேவை தொடங்குகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பூந்தமல்லி பணிமனை – – முல்லை தோட்டம் இடையே சுமார் 2.5 கி.மீ. தூரத்திற்கு முதற்கட்ட சோதனை ஓட்டம், மார்ச் 20-ந் தேதி 15 கிலோ மீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில் பூந்தமல்லி முதல் போரூர் வரை 9.1 கி.மீ. தொலைவுக்கு டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், நிதி இயக்குநர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, அமைப்புகள் மற்றும் இயக்கத்தின் இயக்குநர் மனோஜ் கோயல், தலைமைப் பொது மேலாளர்கள் ஏ.ஆர்.ராஜேந்திரன் (மெட்ரோ இரயில், சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு), எஸ்.அசோக் குமார் (வழித்தடம் மற்றும் உயர்மட்ட கட்டுமானம்), ஆலோசகர் எஸ்.ராமசுப்பு (மெட்ரோ இரயில் இயக்கம்), சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், பொது ஆலோசகர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த சோதனை ஓட்டம் குறித்து மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் கூறியதாவது:
இன்று நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் மெட்ரோ இரயில் திட்டத்தின் முன்னேற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். 2ம் கட்ட திட்டத்தில் ஓட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. தொடக்கத்தில் டிரைவரின் கண்காணிப்புடன் ரெயில்கள் இயக்கப்படும். ஓராண்டுக்கு பின்னர் முழு அளவில் டிரைவர் இல்லாமல் இயக்கப்படும். முதலில் 3 பெட்டிகளுடன் இயக்கப்படும்.
முதற்கட்ட சோதனையில் 25 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்கப்பட்ட நிலையில், தற்போது அதிகபட்சமாக 35 முதல் 45 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டது. இது படிப்படியாக உயர்த்தப்பட்டு 80 கி.மீ. வேகத்தில் ரெயில் சோதனை ஓட்டம் நடைபெறும். ரெயில் நிலையங்கள் கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. விரைவில் பணிகள் முடிவடையும். அதன்பின் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்வதற்கான சோதனைகளுக்கு உட்படுத்தப்படும். பூந்தமல்லி – போரூர் வரை டிசம்பர் மாதம் ரெயில் சேவை தொடங்கப்படும். அடுத்த ஆண்டு இது நீட்டிக்கப்பட்டு வடபழனி வரை செயல்பாட்டுக்கு வரும். அப்போது ஏராளமான மக்கள் பயனடைவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.