செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

பூந்தமல்லி – போரூர் இடையே ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரெயில் 3ம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றி

Makkal Kural Official

சென்னை, ஜூன் 7–

பூவிருந்தவல்லி –போரூர் இடையே ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரெயிலின் 3ம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு அடைந்துள்ளது. ஒரு மாதத்திற்குள் முழு வேகத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது என்றும் டிசம்பர் இறுதிக்குள் இந்த மெட்ரோ ரயில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குநர் சித்திக் கூறி உள்ளார்.

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டமானது 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பால பாதையாகவும் அமைகிறது.இதில் பூந்தமல்லி-போரூர் இடையே ரெயில் பாதை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

பூவிருந்தவல்லி – -போரூர் இடையேயான வழித்தடத்தில் 2.5 கிமீ தொலைவுக்கு முதல் கட்டமாக ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் மார்ச் 21–ந் தேதி நடைபெற்றது. 2ம் கட்ட சோதனை ஓட்டம் ஏப்ரல் 28–ந் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 3ம் கட்ட சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. கடந்த முறை அப் லைனில் சோதனை ஓட்டம் நடந்த நிலையில், இந்த முறை டவுன் லைனில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இந்த உயர்மட்ட வழித்தடம் போரூர் சந்திப்பு மெட்ரோ நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ நிலையம் வரை சுமார் 10 கி.மீ. நீளம் கொண்டது மற்றும் பூந்தமல்லி மெட்ரோ பணிமனையுடன் இணைக்கப்பட்டுள்ளது. தற்போதைய சோதனை மற்றும் செயல்பாட்டுக்கு, பூந்தமல்லி மெட்ரோ பணிமனை இந்த பகுதியின் மெட்ரோ ரெயிலுக்கான சோதனைகளை ஒருங்கிணைக்கும் மையமாக இருக்கும்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில் வழித்தட சோதனைகளுக்கு புதிய பிரிவுகளைச் சேர்க்கும், இதன் மூலம் முதற்கட்டமாக பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்வதற்கான சோதனைகளுக்கு உட்படுத்தப்படும். முதல் 2 கட்ட சோதனை ஓட்டங்கள், அப்லைனில் நடைபெற்ற நிலையில், 3ம் கட்ட சோதனை ஓட்டம் டவுன்லைனில் நடைபெற்றுள்ளது. ஒரு மாதத்திற்குள் முழு வேகத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது என்றும் டிசம்பர் இறுதிக்குள் இந்த மெட்ரோ ரயில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குநர் சித்திக் கூறி உள்ளார்.

துணை மின் நிலையம்

மேலும் பூந்தமல்லி புறவழிச்சாலை நிலையத்தின் துணை மின்நிலையத்திற்கு, பூந்தமல்லி பணிமனையில் உள்ள துணை மின்நிலையத்திலிருந்து 33 கே.வி. மின் விநியோக கேபிள் மூலம் வெற்றிகரமாகத் மின்சாரம் கொண்டு வரப்பட்டு, அது செயல்பாட்டிற்குத் தயார் செய்யப்பட்டுள்ளது. இதனை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அர்ச்சுனன், நிதி இயக்குநர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, அமைப்புகள் மற்றும் இயக்கத்தின் இயக்குநர் மனோஜ் கோயல், தலைமைப் பொது மேலாளர்கள் ஏ.ஆர்.ராஜேந்திரன், (மெட்ரோ இரயில், சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு), எஸ்.அசோக் குமார், (வழித்தடம் மற்றும் உயர்மட்ட கட்டுமானம்), ரேகா பிரகாஷ், (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), ஆலோசகர் எஸ்.ராமசுப்பு (மெட்ரோ இரயில் இயக்கம்), சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், பொது ஆலோசகர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *