செய்திகள்

பூந்தமல்லி -– பரந்தூர் விமான நிலையம் இடையே மெட்ரோ ரெயில் திட்டம் நீட்டிப்பு

Makkal Kural Official

சென்னை, மார்ச்.13-–

பரந்தூரில் புதிய விமான நிலையம் வருவதன் எதிரொலியாக பூந்தமல்லி – – பரந்தூர் வரையில் ரூ.15 ஆயிரத்து 906 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரெயில் சேவையை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமர்பிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மெட்ரோ ரெயில்கள் விரைவான சேவைகளையும் வழங்கி வருகிறது.

சென்னை விமான நிலையம் – – விம்கோ நகர், சென்டிரல் – – பரங்கிமலை ஆகிய 2 வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் மெட்ரோ ரெயில் சேவையை 3 லட்சம் பேர் பயன்படுத்தி வருகிறார்கள். ஆரம்பம் முதலே மெட்ரோ ரெயில் சேவைக்கு பொதுமக்களிடம் வரவேற்பு இருந்தது.

இதனால் 118.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பீட்டில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகிறது. மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் இடையே 45.8 கிலோ மீட்டர் தொலைவுக்கும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பணிமனை வரையில் 26.1 கிலோ மீட்டர் தொலைவிற்கும், மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரையிலும் 47 கிலோ மீட்டர் தொலைவில் என 3 வழித்தடங்களில் சென்னை மெட்ரோ ரெயில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில், மாதவரம் – – சிறுசேரி சிப்காட் இடையே 3-வது வழித்தடத்தில் 19 உயர்மட்ட மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் 28 சுரங்கப்பாதை மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. கலங்கரை விளக்கம் – – பூந்தமல்லி பணிமனை வரையிலான 4-வது வழித்தடத்தில் 18 உயர்மட்ட நிலையங்களும், 9 சுரங்கப்பாதை மெட்ரோ ரெயில் நிலையங்களும், மாதவரம் – – சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில் 39 உயர்மட்ட மெட்ரோ ரெயில் நிலையங்களும், 6 சுரங்கப்பாதை மெட்ரோ ரெயில் நிலையங்களும் அமைய உள்ளன.

இதற்கிடையே மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளை புறநகர் பகுதிகளுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரையில் 21.76 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரெயில் திட்டம் நீட்டிக்கப்பட்டது. இதேபோல, கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பணிமனையுடன் முடியும் திட்டத்தில், பரந்தூர் (விமான நிலையம் அமையவுள்ளது) வரையில் 43 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரெயில் திட்டத்தை நீட்டிக்க ஆலோசிக்கப்பட்டது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

பரந்தூர் வரை

நீட்டிப்புக்கு ஒப்புதல்

இந்த சாத்தியக்கூறு அறிக்கையை தமிழக அரசு பரிசீலனை செய்து வழித்தடம் நீட்டிப்புக்கு ஒப்புதல் அளித்தது. தமிழக அரசின் ஒப்புதலை தொடர்ந்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் மெட்ரோ ரெயில் நிறுவனம் இறங்கியது.

பூந்தமல்லி- – பரந்தூர் வரையில் பெரும்பாலும் உயர்மட்ட பாதைகளாக அமைக்கவே முடிவு செய்யப்பட்டு அதற்கான கள ஆய்வுகள் செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே பூந்தமல்லி முதல் பரந்தூர் வரையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் மெட்ரோ ரெயில் நிறுவனம் சமர்பித்துள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் (11-ந்தேதி) சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சித்திக், தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை செயலாளர் கோபாலிடம் திட்ட அறிக்கையை சமர்ப்பித்தார். தமிழக அரசிடம் வழங்கியுள்ள திட்ட அறிக்கையில், பூந்தமல்லியில் இருந்து செம்பரம்பாக்கம், தண்டலம், இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் வழியாக பரந்தூர் விமான நிலையம் வரையில் வழித்தடம் அமைகிறது.

இந்த வழித்தடத்தின் மொத்தம் நீளம் 52.94 கிலோ மீட்டர் ஆகும். மொத்தம் 20 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைய உள்ளன. திட்டத்தின் மொத்த செலவு ரூ.15 ஆயிரத்து 906 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில், பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரையில் ரூ.8 ஆயிரத்து 779 கோடி மதிப்பீட்டில் 14 நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகளை வரும் 2028-ம் ஆண்டுக்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர இலக்கு நிர்ணயித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *