சென்னை, மார்ச் 20–
பூந்தமல்லி பணிமனை முதல் கோடம்பாக்கம் மின் நிலையப்
பிரிவு வரை உயர் வழித்தடம் 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் என்று சட்டசபையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
பட்ஜெட்டில் அவர் கூறியதாவது:–
பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, நம் மாநிலத்தின் போக்குவரத்து அமைப்பில் இரயில்வே துறையின் பங்கு மிகவும் குறைவாகவே உள்ளது. இந்நிலையைச் சரிசெய்ய, இந்திய இரயில்வே துறையுடன் ஒருங்கிணைந்து, மாநிலத்தில் புதிய இரயில் திட்டங்களைக் கண்டறிந்து செயல்படுத்திட, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்துடன் (டிட்கோ) இணைந்து ஒரு சிறப்பு நிறுவனத்தை அரசு உருவாக்கும்.
இம்மதிப்பீடுகளில் போக்குவரத்துத் துறைக்கு 8,056 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மெட்ரோ இரயில்
சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகள் 63,246 கோடி ரூபாய் செலவில் 119 கி.மீ. தூரத்திற்கு மூன்று வழித்தடங்களில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் முதல் வழித்தடமாக, பூந்தமல்லி பணிமனை முதல் கோடம்பாக்கம் மின் நிலையப் பிரிவு வரையிலான உயர் வழித்தடம் 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரவு–செலவுத் திட்டத்தில்,
சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.