செய்திகள்

பூண்டு விலை மீண்டும் உயர்வு: ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனை

ஏலக்காய் விலையும் உயர்ந்தது

சென்னை, மே.12-

பூண்டு விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அன்றாட சமையலில் பூண்டுக்கு பிரதான இடம் உண்டு. வாயு தொல்லைக்கு தீர்வு, கொழுப்பை கரைத்தல் போன்ற மருத்துவ குணங்களும் பூண்டில் நிறைந்திருப்பதால் அதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் பூண்டின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு வரத்து வெகுவாக குறைந்ததால் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு கிலோ பூண்டு ரூ.500 கடந்து அதிர்ச்சி அளித்தது. ஏறுமுகத்தில் சென்ற பூண்டின் விலை பின்னர், படிப்படியாக குறைந்தது. மொத்த விற்பனையில் கடந்த வாரம் ஒரு கிலோ பூண்டு (முதல் தரம்) ரூ.180-க்கும், (2-ம் தரம்) – ரூ.150-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் சந்தைக்கு பூண்டு வரத்து மீண்டும் குறைந்துள்ளது. இதன் காரணமாக அதன் விலை மீண்டும் ஏறுமுகத்தில் சென்றுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் முதல் ரக பூண்டு விலை ரூ.120 அதிகரித்து ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2-வது ரக பூண்டு ரூ.100 விலை அதிகரித்து ஒரு கிலோ ரூ.250-க்கும், 3-வது ரக பூண்டு 230-க்கும் விற்பனையாகிறது. சில்லரை விற்பனையில் ரூ.20 முதல் ரூ.30 வரையில் கூடுதலாக விலை வைத்து விற்கப்படுகிறது.

ஏலக்காய் விலை

உயர்வு

பிரியாணி போன்ற உணவுகளில் கமகம வாசனைக்கு நறுமண பயிரான ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது. கடந்த ரம்ஜான் பண்டிகையின்போது வெளிநாடுகளுக்கு ஏலக்காய் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டது. அந்த சமயத்தில் ரூ.500 விலை அதிகரித்து ஒரு கிலோ ஏலக்காய் ரூ.2,100 கடந்தது.

இந்த நிலையில் ஏலக்காய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக ஏலக்காய் விலை ரூ.300 அதிகரித்து ஒரு கிலோ ரூ.2,400-க்கு விற்பனையாகிறது. முதல் ரக ஏலக்காய் ஏற்கனவே ரூ.3 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மளிகை பொருட்களில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு ஆகியவற்றின் விலை கிலோவுக்கு ரூ.5 அதிகரித்துள்ளது. ரீபைண்ட் ஆயில் லிட்டருக்கு ரூ.6 விலை உயர்ந்துள்ளது. காய்கறி வகைகளை பொறுத்தவரையில் பெரிய வெங்காயம், ஊட்டி கேரட், பீன்ஸ், இஞ்சி, அவரைக்காய், ஆகியவற்றின் விலைகள் கடந்த ஒரு வாரத்தில் கிலோவுக்கு ரூ.10 அதிகரித்துள்ளது. கத்திரிக்காய், வெண்டைக்காய், காராமணி, சுரக்காய் ஆகிய காய்கறிகள் விலை கிலோவுக்கு ரூ.5 குறைந்துள்ளது. வறட்சி காரணமாக காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விலை மேலும் உயரக்கூடும் என்று வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால் அண்டை மாநிலங்களில் இருந்து மீன்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. எனவே மீன்கள் விலை உச்சத்தில் இருக்கிறது. ஒரு கிலோ பெரிய வஞ்சிரம் மீன் ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. தடை காலம் முடிந்த பின்னர், மீன்கள் விலை இறங்குமுகத்தில் இருக்கும் என்று மீன் வியாபாரிகள் கூறுகிறார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *