சென்னை, ஜூலை.6-
தக்காளி, பருப்பு விலையை தொடர்ந்து பூண்டு விலையும் ஏறி உள்ளது. ஒரு கிலோ ரூ.180க்கு தற்போது விற்பனை ஆகிறது.
மராட்டிய மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு பூண்டின் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. அதிலும் நாளொன்றுக்கு சென்னைக்கு மட்டும் சுமார் 10 லாரிகளில் பூண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு வந்தது. ஆனால் சமீப நாட்களாக பூண்டு வரத்து குறைந்து விட்டதாகவும், இதன் காரணமாக விலை அதிரடியாக உயர்ந்து இருப்பதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
கடந்த மாதத்தில் ஒரு கிலோ பூண்டு ரூ.25 என்ற மலிவான விலையில் கிடைத்தது. நல்ல தரமான உயர்ரக பூண்டு ஒரு கிலோ ரூ.60-க்கு கிடைத்து வந்தது. ஆனால் தற்போது அது தலைகீழாக மாறிவிட்டது. ஒரு கிலோ பூண்டு ரூ.80 முதல் ரூ.180 வரை மொத்த விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விளைச்சல் பாதிப்பு ஒரு பக்கம் கூறப்பட்டாலும், மராட்டிய மாநிலத்தில் இருந்து உக்ரைன் நாட்டுக்கு பூண்டு ஏற்றுமதி செய்யப்படுவதும் வரத்து குறைவுக்கு ஒரு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.