சென்னை, நவ. 10–
வரத்து குறைவு காரணமாக பூண்டு விலை உயர்ந்து கிலோ ரூ.500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோயம்பேடு மார்க் கெட்டுக்கு ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து அதிகளவில் பூண்டு விற்பனைக்கு வருகிறது. தினசரி 150 டன் அளவிலான பூண்டு விற்பனைக்கு வருவது வழக்கம்.ஆனால் தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து 25 டன் பூண்டு மட்டுமே விற்பனைக்கு வருகிறது. இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டு கடந்த சில நாட்களாகவே பூண்டு விலை தொடர்ந்து அதிக ரித்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.300-க்கு விற்ற முதல் ரக பூண்டு தற்போது ரூ.350ஆக அதிகரித்துள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விற்பனை கடைகளில் ரகத்தை பொறுத்து ஒரு கிலோ பூண்டு ரூ.220 முதல் ரூ.350 வரையிலும், சில்லரை விற்பனையில் ஒரு கிலோ பூண்டு ரூ.300 முதல் ரூ.400 வரையிலும் விற்கப்படுகிறது.இதனால் வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் ஒரு கிலோ பூண்டு ரூ.450 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சமையலுக்கு தினசரி பயன்படுத்தப்படும் வெங்காயம் விலை ஏற்கனவே ஒரு கிலோ ரூ.100-யை எட்டி உள்ள நிலையில் தற்போது பூண்டு விலையும் அதிகரித்து வருவது இல்லத்தரசிகளை பெரிதும் கவலை அடைய செய்துள்ளது.
இதுகுறித்து பூண்டு மொத்த வியாபாரி ஒருவர் கூறும்போது, கோயம்பேடு சந்தைக்கு மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து தான் அதிக அளவில் பூண்டு விற்பனைக்கு வரும். இந்த மாநிலங்களில் தற்போது பூண்டு சீசன் முடியும் தருவாயில் உள்ளது. இதனால் வரத்து குறைந்து விலை அதிகரித்து வருகிறது. இனி வரும் நாட்களில் பூண்டின் விலை மேலும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. ஜனவரி மாத இறுதியில் மீண்டும் வரத்து அதிகரித்து பூண்டு விலை படிப்படியாக குறையும் என்றார்.