ஸ்ரீதருக்கு அப்படி நடந்திருக்கக் கூடாது தான். அவன் கொஞ்சம் கூட இ்தை எதிர்பார்க்கவில்லை. இது யாருக்கும் நிகழ்ந்ததில்லை. இப்படி எல்லாம் நடந்தால் அபசகுனம் என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பேசிக் கொண்டார்கள். .
“அவன் என்ன பண்ணுவான்? அவன் பேசாம நடந்து போயிட்டு இருந்திருக்கான். தென்னை மரத்திலிருந்து தேங்காய் குலையோட அவன் தலையில விழுந்தா அதுக்கு யார் பொறுப்பு? நல்ல வேளை அவன் உயிர் பிழைச்சதே பெரிய விஷயம். இல்லன்னா அந்த இடத்திலேயே ஆள் காலியாகி இருப்பான் ” என்று ஸ்ரீதர் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்தவர்கள் பேசிக் கொண்டார்கள்.
தலையில் விழுகின்ற ரத்தத்தோடு அவனை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்த போது மருத்துவர் கூட ஆச்சரியப்பட்டார்.
” என்ன இது? இப்படி எல்லாம் நடக்குமா ? இதுவரைக்கும் இந்த மாதிரி நான் கேள்விப்படல . தென்ன மரம் எங்க இருக்கு?
என்று ஸ்ரீதரிடம் கேட்க
தலையிலிருந்து வழியும் ரத்தத்தை இடது கையில் துடைத்துக் கொண்டே வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற தென்ன மரம்” என்றான் ஸ்ரீதர்
“பாத்து வரக்கூடாதா? நல்ல வேள உங்க உயிருக்கு எதுவும் ஆபத்து வரல. இப்போ கட்டுப்போட்டு மருந்து தாரேன் .சாப்பிடுங்க. எல்லாம் சரியாப் போகும் “என்று மருத்துவர் சொல்ல
சரி
என்று ஸ்ரீதரும் அவன் குடும்பத்தாரும் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்தார்கள்.
” ஸ்ரீதர் இந்தத் தென்ன மரத்தை வச்சு ரொம்ப வருஷம் ஆச்சு. இதுவரைக்கும் ஒரு சின்ன மட்ட கூட யார் மேலயும் விழுந்தது இல்ல. ஆனா, இன்னைக்கு அது உன் தலைய பதம் பாத்து இருக்குன்னா, ஏதோ அபசகுனம் நடக்கப் போகுதுன்னு அர்த்தம். உனக்கு ஏதோ தோஷம் இருக்குன்னு நினைக்கிறேன் .அதனால நம்ம சாமியாரை போய் பார்த்துட்டு வந்தோம்னா நல்லா இருக்கும். பேய்க்கும் பாரு. நோய்க்கும் பாருன்னு சொன்ன மாதிரி டாக்டர்கிட்ட போயிட்டு வந்துட்டோம். எல்லாம் சரியா போச்சு. ஆனா, உன் தலையில இந்த தேங்காய் குலை எப்படி விழுந்துச்சுன்னு நம்ம சாமியார் கிட்ட குறி கேட்டா தான் சரியா இருக்கும் வா” என்று அழைத்தாள் அம்மா
” இல்லம்மா எனக்கு ரொம்ப வலிக்குது. நாளைக்கு போகலாம்
என்று ஸ்ரீதர் சொல்ல
“அப்படி எல்லாம் சொல்லக்கூடாது உடனுக்கு உடனே பாத்தா தான் பிரச்சனை என்னன்னு நமக்கு தெரியும்; கிளம்பு” என்று மொத்தக் குடும்பமும் சொல்ல சிறிது நேரத்திற்கெல்லாம் சாமியாரின் வீட்டின் முன்னால் அத்தனை பேரும் கூடினார்கள்
“தம்பிக்கு என்ன ஆச்சு?” என்று சாமியார் கேட்க
“எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்குற தென்ன மரத்திலிருந்து தேங்காய் குலையோட அவன் தலையில் விழுந்துருச்சு”
என்று ஸ்ரீதரின் அம்மா சொல்ல
” எப்பவுமே தேங்கா யார் தலையிலயும் விழாது. இது ரொம்ப அபசகுனமாச்சே .உக்காருங்க” என்று ஸ்ரீதரை அமர வைத்து கற்பூரம் பத்தி சூடம் காட்டி பூஜை செய்து ஏதோ மந்திரத்தை சொல்லி அருகில் இருந்த தேங்காயை எடுத்து அரிவாளால் உடைக்கப் போனார் அந்தச் சாமியார்
” என்னது இங்கயும் தேங்காயா? “
என்று அந்த இடத்தை விட்டு தலை தெறிக்க ஓடினான், ஸ்ரீதர்.