பொசுக்கென்று கோபம் வரும் போதெல்லாம் பூங்குன்றன் ஓடி ஒளிந்து கொள்வது பூஜையறையில் தான் . சாமி படங்களுக்குத் தீபஆராதனை செய்து பூக்கள் வைத்து அர்ச்சனை செய்கிறாேராே இல்லையோ? தன்னுடைய கோபத்தைக் குறைத்துக் கொள்வதற்கு அவர் பதுங்குமிடம் பூஜையறை தான் சாமி படங்கள் முன்னால் அமர்ந்து தன்னுடைய கோபதாபங்களை எல்லாம் தண்ணியாக கரைக்கும் இடம் பூஜையறை என்று அவர் மனதில் தீர்க்கமாகப் பதிந்து கொண்டதால் குடும்பத்தில் மனைவியிடம் பிள்ளைகளிடம் ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் ஓடிச் சென்றஅமர்ந்து கொள்வார். யாராவது அவரைத் தேடி வந்தாலோ அல்லது ஏதாவது கேட்க வேண்டுமென்றாலோ பூஜை அறையில் இருந்து அவர் வெளியே வந்த பிறகு தான் கேட்க முடியும். அதற்கு முன்னால் அவரைப் போய் கேட்டால் முகத்தில் இருக்கும் கோபம் மூளையில் முகாமிட்டு, அது கண்கள் வழியாக கங்காய் கக்கும். அதனால் யாரும் அவரைத் தொந்தரவு செய்வதில்லை. மனைவியுடன் சண்டை போடுவதோ குழந்தைகளுடன் கடிந்து கொள்வதோ அவருக்கு பொருத்தமாக இல்லாமல் இருப்பதால், தன் கோபத்தைத் தானே அடக்கிக் கொண்டு பூஜை அறையில் அமர்ந்து தியானத்தில் ஈடுபடுவார். மொத்த கோபத்தையும் நெற்றிப் பொட்டில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாகக் கீழே இறக்கிய பிறகு சாந்தமாக வெளியே வரும்போது அவர் முகம் பிரகாசமாக இருக்கும் .அதனால் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் அவரைத் தொந்தரவு செய்வதில்லை .
அன்றும் வழக்கம் போல மனைவி குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருந்தார்.
” அப்பா எனக்கு ஃ பீஸ் கட்டணும் இன்னைக்கு கடைசி தேதி ” என்று கல்லூரியில் படிக்கும் மகள் பிரியங்கா சொல்லவும், வந்தது பார் பூங்குன்றவனுக்கு கோபம்
” இவ்வளவு நாள் என்ன பண்ணிட்டு இருந்த ? கடைசி நாள் அன்னைக்குத் தான் ஃபீஸ் கட்டணம்னு சொல்லுவியா ? உங்க அப்பன் என்ன பீரோவில பணமா வச்சிருக்கான். நீ சொன்னதும் டக்குனு எடுத்துக் கொடுக்கிறதுக்கு. முன்னாடியே சொல்ல வேண்டாமா? என்று பிரியங்காவைத் திட்ட
“இல்லப்பா அம்மாகிட்ட சொல்லிட்டேன் .அவங்க தான் உங்ககிட்ட சொல்லல போல ” என்று அம்மாவை மாட்டி விட்டாள் பிரியங்கா .எதுவும் பேசாமல் இருந்த மனைவி சகுந்தலா, கணவனை ஒரு மாதிரியாக பார்த்தாள். அவர் பார்க்கும் பார்வையே அதில் ஆயிரம் கோபம் அடங்கி இருப்பதாகச் சகுந்தலா சமையலறைக்கு ஓடினாள்
என்ன செய்வது என்று தெரியாமல் கோபம் தலைக்கேறிய பூங்குன்றன் விறுவிறுவென பூஜை அறைக்குள் போய் அமர்ந்து கொண்டார். ஒளிர்ந்து எரிந்து கொண்டிருந்த தீபம் காலையில் அலங்கரிக்கப்பட்ட பூக்கள், சன்னமாக எரிந்து கொண்டிருக்கும் ஊதுபத்தி அந்த அறையை சுகந்தமாக வைத்திருந்தது. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியபடியே கோபம் தலைக்கேற அமர்ந்திருந்த பூங்குன்றனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவர் மனதிற்குள்ளேயே மகள் பிரியங்கா இன்று கடைசி நாள் ஃபீஸ் கட்ட வேண்டும் என்ற வார்த்தையே திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது. அவரால் மனதை ஒருமுகப்படுத்த முடியவில்லை. இந்தக் கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி? கோபத்தை கட்டுப்படுத்தினால் மட்டும் மகள் கல்லூரிக்கு பணம் கட்டும் ஃபீஸ் வந்துவிடுமா? என்ன என்று அவர் மனதுக்குள்ளேயே ஒரு போராட்டம் நடந்து கொண்டிருந்தது. முன்னாடி சொல்லாமல் , இன்று கடைசி நாள் சொல்கிறாளே? என்று வருத்தப்பட்டு ஒரு திரும்பி பார்த்தபோது, அவரால் மனதை ஒருமுகப்படுத்த வே முடியவில்லை எவ்வளவோ முயன்று பார்த்தார். மேலும் கீழும் மூச்சு வாங்கியது. அவரால் அந்த பூஜை அறையில் மனதை ஒருமுகப்படுத்தி அமர முடியவில்லை. இதற்கு முன்பெல்லாம் எப்படிக் கோபம் வந்தாலும் பூஜை அறைக்குள் நுழைந்தால் பொசுக்கென்று போய்விடும் இன்று தணியாமல் இருந்தது. என்ன பிள்ளை இவள் இத்தனை நாள் சொல்லாமல் இன்று சொல்கிறாளே? என்று பூங்குன்றன் வருத்தப்பட்டு திரும்பிப் பார்த்தபோது, சாமி படத்தின் கீழே ஒரு உண்டியல் இருந்தது. தினம் தினம் சேர்த்து வைக்கும் பணமது .அவர் மனதில் மகிழ்ச்சி துளிர்விட்டது உண்டியலை எடுத்துப் பார்த்தார். அது பணத்தால் நிரம்பி வழிந்தது. அதுவரை இல்லாத ஒரு மகிழ்ச்சி பூங்குன்றன் மனதில் திளைத்தது. அந்த உண்டியலை எடுத்தார் .கீழே தட்டினார். அவ்வளவும் பணம்.
” பிரியங்கா சகுந்தலா என்று சந்தோஷத்தில் கூப்பிட்டார்.
” நீ இன்னைக்கு பீஸ் கட்டலாம் “என்று பணத்தை எடுத்துக்கொடுத்தார். மகள் பிரியங்கா கேட்டது போக மீதப் பணமும் இருந்தது. பூஜை அறையைத் திரும்பி பார்த்தார். தீபத்தின் ஒளியில் ஒளிர்ந்து கொண்டிருந்தது தெய்வம்.
#சிறுகதை