செய்திகள்

பூங்கொத்து, சால்வைகள் பதிலாக மகளிர் சுயஉதவிக்குழு உற்பத்தி பொருட்களை

மற்றொரு மாற்றத்தை தொடங்க வாய்ப்பு எனவும் தகவல்

சென்னை, டிச. 31–

என்னைச் சந்திக்க வரும் கழகத்தினர், இனி மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் அத்தியாவசியப் பொருட்களை அன்புப் பரிசாக வழங்கினால் ஆதரவற்ற குழந்தைகள், முதியோர் காப்பகங்களுக்கு வழங்கி உதவ முடியும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சியினருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

முதலமைச்சரான நமது கழகத் தலைவர், தன்னை சந்திக்க வருபவர்கள் புத்தகங்களை மட்டுமே அளிக்க வேண்டும், மலர்மாலை, பூங்கொத்து, பொன்னாடைகளைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு, அதன்படியே செயல்பட்டு வருகிறார். அப்படி அவருக்கு வழங்கப்பட்ட புத்தகங்கள், பல்வேறு நூலகங்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன.

இளைஞர் அணி செயலாளராகப் பொறுப்பேற்ற பின்னர், நானும் அப்படி அறிவித்து, எனக்கு அளிக்கப்பட்ட புத்தகங்களை, பல்வேறு அரசுப் பள்ளி நூலகங்களுக்கு அளித்துள்ளோம். அரியலூர் சென்றபோது தங்கை அனிதா பெயரில் இயங்கிவரும் நினைவு நூலகத்துக்குப் புத்தகங்களை வழங்கினோம். தற்போது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் அமைக்கப்படவுள்ள, நடமாடும் நூலகத்துக்கு சுமார் 2,000 புத்தகங்களை அளித்துள்ளோம். எனக்கு வரும் பரிசு-உணவுப் பொருட்களைத் தொகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அனுப்பி வருகிறோம்.

கைவினைப் பொருட்கள்

ஆனாலும், இந்த சால்வை அணிவிப்பதும் பூங்கொத்து கொடுப்பதும் தொடரத்தான் செய்கின்றன. ஒருவருக்கொருவர் சால்வை அணிவித்துக்கொள்வதற்கான தேவைகளை நாம் எட்டிவிட்டோம் என்றே நினைக்கிறேன். சமூகநீதி நோக்கத்தில் நாம் அடுத்த கட்டத்துக்குச் செல்ல, சில பழைய நடைமுறைகளைக் கைவிடலாம் என்பதே இதன் நோக்கம். நமது அன்பு பரிமாற்றத்தில் புத்தகங்கள் இடம்பெற்றதன் மூலம், நாம் அடுத்த கட்ட அறிவு இயக்கத்தைத் தொடங்கி இருக்கிறோம். அதேபோல இப்போது மற்றுமொரு மாற்றத்தை அன்பு இயக்கமாகத் தொடங்கலாம் என நினைக்கிறேன்.

குறிப்பாக, தமிழ்நாட்டில் மகளிர் மேம்பாட்டுக்கென அரசு பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கடன் அளித்து, தொழிற்பயிற்சி அளித்து, அவர்களின் வாழ்க்கையில் புதிய மாற்றங்களை நிகழ்த்தி வருகிறது. அந்த இயக்கத்தில் நாமும் பங்குபெற முடியும். தமிழ்நாடு முழுவதும் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள், பல்வேறு பொருட்களை தயாரித்து வருகின்றனர். சிறுதானியங்களில் மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள், மெழுகுவர்த்தி, அழகுக் கைவினைப் பொருட்கள், வெள்ளிக் கொலுசுகள், தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மைகள், மரச் சிற்பங்கள் எனப் பலவற்றைத் தயாரித்து கண்காட்சிகளில் விற்பனைக்கு வைக்கின்றனர்.

பெண்களின் பொருளாதாரம்

அமைச்சரான பிறகு அண்மையில் நான் திண்டுக்கல், சிவகங்கை, கோவை, திருச்சி மாவட்டங்களின் நிகழ்ச்சிகளுக்குச் சென்றபோது, அப்படியான தரமான, கலைநயமிக்க பொருட்கள், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து வியந்துபோனேன். அவற்றின் தரமும் மிகச் சிறப்பாக இருந்தது. அவற்றுக்கான விற்பனை வாய்ப்புகள் அதிகரிப்பதன் மூலம், அந்தப் பெண்களின் பொருளாதாரம் மேம்படும் என்பதை நாம் அறிவோம்.

ஆகவே, என்னைச் சந்திக்க வரும் கழகத்தினர் இனிமேல் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் அத்தியாவசியப் பொருட்களை அன்புப் பரிசாக வழங்கலாம். இவற்றை ஆதரவற்ற குழந்தைகள், முதியோர் காப்பகங்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். புத்தகங்கள், கழக வேட்டி-துண்டுகளை எப்போதும்போல் வழங்கலாம். ஆனால், பட்டு சால்வை, பூங்கொத்து போன்றவற்றை அறவே தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த முடிவால் வழங்கும் நீங்களும் மகிழ்வீர்கள், உங்கள் மூலம் பலன் பெறுபவர்களும் மகிழ்வார்கள். இவற்றை எண்ணி நானும் மகிழ்ச்சி கொள்வேன். இந்த எளிய வேண்டுகோள் – ஏற்றமிகு மாற்றங்களை ஏற்படுத்தும் என நம்புகிறேன்” என அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *