சிறுகதை

பூங்கொத்து-ஆர்.எஸ்.மனோகரன்

அந்தப் பல்கலைக் கழக சிண்டிகேட் ஹால் வெளியே உள்ள வெயிட்டிங் ஹாலில் முரளி மனோகர் தன்னுடைய முறைக்காக காத்திருந்தார்.

அங்கு பொருளாதாரத் துறையில் ஒரு பேராசிரியர் காலியிடம் நிரப்ப விண்ணப்பித்த 18 பேரில் 2 பேரை தெரிவு செய்து நேர்முகத்தேர்வுக்கு அழைத்திருந்தார்கள்.

முரளி மனோகர் பேராசிரியர் பதவிக்கான அனைத்து கல்வித் தகுதிகளையும் அனுபவத்தையும் பெற்றிருந்தார்.

முரளி மனோகர், இந்த ஊர்க்காரரும் தன் நண்பருமான பிரகாஷ்காக காத்திருந்தார். அவர்கள் இருவரும் இங்கேயே சந்தித்துக் கொள்வதாக ஏற்பாடு.

அவசர அவசரமாக அங்கே வந்த பிரகாஷ் முக மலர்ச்சியுடன் முரளி மனோகரை நெருங்க இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டனர்.

இத்தனை வருடங்கள் கழித்து ஒன்றாக படித்த நண்பர்கள் சந்திப்பது என்றால் மகிழ்ச்சிக்கு அளவு ஏது ?. அருகருகே அமர்ந்து கொண்டு இருவரும் பரஸ்பரம் விசாரித்துக் கொண்டனர்.

பிரகாஷ் தாவரவியலில் எம்எஸ்சி,எம்.எட், எம்.பில் முடித்துவிட்டு ஒரு அரசுப்பள்ளியில் தாவரவியல் ஆசிரியராக பணிபுரிகிறார்.

சகல தாவரங்களும் அவருக்கு அத்துப்படி.

நேர்முகத் தேர்வு நடத்த துணைவேந்தர் வருவதில் காலதாமதம் ஆகிறது என்று ஒரு அலுவலர் வந்து சொல்ல பிரகாஷுக்கு போரடிக்க ஆரம்பித்தது.

அப்போது ஒருவர் பரபரப்பாக உள்ளே நுழைந்து நேர்முகத்தேர்வு நடைபெறும் அறை குறித்து விசாரித்துக் கொண்டிருந்தார்.

அவருக்குப் பின்னே ஒருவர் பவ்வியமாக கையில் ஒரு பொக்கேவை பத்திரமாக கவனமாக பிடித்துக் கொண்டிருந்தார். பிரகாஷ் சுற்றிலும் பார்வையை சுழல விட்டார்.

அவருடைய மைக்ரோஸ்கோப் கண்ணுக்கு அந்த நபர் கையில் வைத்திருந்த பொக்கே ஜூம் ஆனது.

இதென்ன, பொக்கே பிளாஸ்டிக் காகிதத்தால் சுற்றாமல் பூக்களும் இலைகளும் வெளியே தெரியிற மாதிரி இருக்கே என யோசித்தார்.

பலவிதமான வாசனைகளுடன் ஒரு குறிப்பிட்ட வாசனையும் பிரகாஷ் நாசிக்கு வந்து அவரை உறுத்தியது.உற்றுப் பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். அதில் கலர் கலராக டேலியா மற்றும் சிறு சிறு வெள்ளைப் பூக்களுடன் மரிக்கொழுந்து, கொத்துமல்லி போன்ற தோற்றத்துடன் இலைகள்,பூக்களுடன் வைக்கப்பட்டிருந்தது.

அதிலே இருக்கிறது என்ன, பார்த்தீனியம் தானே என பொறி தட்ட, திடீரென்று அவரது மூளை செல்கள் பரபரப்பாக அவரது நினைவுகள் ஒரு வாரத்திற்கு முன்பு ஆலம்பட்டி சென்று ஒரு அதிர்ச்சி தரும் பிரச்சினையை சந்தித்து விட்டு வந்தது மனதில் ஓடியது.

ஆலம்பட்டி.. கொத்துமல்லி, மரிக் கொழுந்து பயிரிடுவதற்கான ஈரப்பதத்துடன் கூடிய மண்ணை கொண்ட பூமி அது. விவசாயம் ஒன்றையே உயிர் மூச்சாகக் கொண்டு உழைக்கும் மக்கள் நிறைந்த அந்த பூமியில் ஒருசில படித்தவர்களும் கிராமத்தை விட்டு நகரத்தை நோக்கி சென்றுவிட அனுபவ விவசாயத்தை மட்டுமே நம்பி கிராமம் இருந்தது.

பிரகாஷ் அந்த கிராமத்தில் விவசாயம் பார்த்து வந்த தன்னுடைய மாமாவை பார்க்க அவர் வீட்டுக்கு போயிருந்தார். அந்த மாலை வேளையில் கிராமத்தில் ஒரே பரபரப்புடன் எங்கு பார்த்தாலும் கூக்குரல்கள் எழுந்தன. பலருக்கு உடலெங்கும் தடித்து சிவந்து போய் அரிப்புடன் மண்ணில் விழுந்து புரண்டு கொண்டிருந்தனர். அதில் பிரகாஷின் மாமாவும் ஒருவர்.

சிலர் ஓடிப்போய் வேப்பிலையை பறித்து அரைத்து அரிப்புடன் அவதிப்பட்டவர்கள் உடலில் தடவிக் கொண்டு இருந்தனர். ஒன்றும் புரியாமல் பிரகாஷ் விழித்த போது, ஒருவர் ஒண்ணும் இல்லை தம்பி, இவங்க எல்லாரும் மரிக்கொழுந்து, கொத்துமல்லி தோட்டத்திலே வேலை பார்த்துகிட்டு இருந்தாங்க; திடீர்னு உடம்பெல்லாம் அரிச்சு வீங்க ஆரம்பிக்கவும் தலைதெறிக்க ஓடி மண்ணில் விழுந்து புரண்டு கொண்டு இருக்காங்க; என்னன்னு தெரியல என்று புலம்பினார்.

பிரகாஷ் உடன் ஒருவரை கூட்டிக்கொண்டு அந்த மரிக்கொழுந்து தோட்டத்திற்கு விரைந்து ஓடினார். கையில் சில கம்புகளுடன் தோட்டத்தில் இறங்கியதுமே எல்லாம் அவருக்கு விளங்கியது.

மரிக்கொழுந்து மற்றும் பக்கத்திலிருந்த கொத்தமல்லி தோட்டத்தில் அந்தச் செடிகளுக்கு ஈடாக பார்த்தீனியம் என்ற களைச்செடிகள் ஓங்கி வளர்ந்து பூக்களுடன் காணப்பட்டன.

வரப்பில் ஏறி ஒரு மரத்தடியில் நின்று ஆசுவாசப் பட்டார் பிரகாஷ். உடன் வந்தவர்கள் என்ன விஷயம் என்று கேட்க அவர் விளக்க ஆரம்பித்தார்.

அந்தக் காலத்தில் இந்தியா அதிலும் தமிழ்நாட்டில் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடிய போது அமெரிக்காவிலிருந்து கோதுமை இறக்குமதி ஆனது. அந்த கோதுமையோடு சேர்ந்து இங்கே பரவியது தான் இந்த பார்த்தீனியம். இது ஒரு விஷச் செடி. இதோட இலை, தண்டு, பூக்கள் எல்லாத்திலும் பார்த்தீனின், அம்புரோசின் என்கிற நச்சுப் பொருள் இருக்கு; அது அந்தச் செடியை தொட்டாலோ அல்லது பூக்களை முகர்ந்தாலோ அல்லது காற்றில் இந்தப் பூக்களின் மகரந்தத் தூள் பரவினாலோ அது பெரும்பாலானோருக்கு உடலில் அரிப்பையும் வீக்கத்தையும் உருவாக்கி மிகுந்த சிரமத்துக்கு உள்ளாக்கும். சொறி சிரங்கு எல்லாம் வரும்; பலருக்கு ஆஸ்துமாவை உண்டாக்கும். இந்த செடியை உண்ணும் பசுமாடு கறக்கும் பால் கசப்பாக இருக்கும். ஆக இதை ஒழிக்க வேண்டியது ரொம்ப ரொம்ப முக்கியம் என்றார் பிரகாஷ்.

‘என்ன தம்பி இப்படி சொல்றீங்க ?’ படபடப்புடன் பேசினார் ஒருவர்.

ஆமாங்க, இதனை களை எடுத்து வேறு எங்கும் போட்டாலும் பூக்களில் உள்ள மகரந்த தூள் அல்லது விதைகள் மூலமாக இவை கடுமையான வேகத்தில் பரவி ஒரு தோட்டத்தையே அழித்துவிடும். ஒரே ஒரு செடி 5000 விதைகளை உருவாக்கும். இந்த விதைகள் 20 ஆண்டுகள் வரையிலும் உறக்கத்திலிருந்து பின்னர் முளைச்சுடும்னா பார்த்துக்குங்களேன். இந்தியாவில் 42 மில்லியன் ஹெக்டேர் விளைநிலங்களில் இந்த செடிங்க பரவி இருக்கு.

பார்த்தீனியம் வளரும் நிலங்களில் இது வேறு எதையும் வளர விடுவதில்லை; மண்ணின் சத்தை அழிச்சு பாதியளவு விளைச்சலை குறைக்கிறது.இந்த செடிங்க கார்பன் டை ஆக்ஸைடை அதிகம் வெளிவிடறதாலே தான் அதை சுவாசிச்ச மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுதுன்னு தெரியுமா உங்களுக்கு என அவர் கேட்க மக்கள் பீதியில் உறைந்து போனார்கள்.

ஒன்றரை மீட்டர் அளவுக்கு மேலாக வளர்ந்து பரவி சர்வ நாசத்தை உண்டாக்கும் இவைகளை அழிப்பது ரொம்ப முக்கியம். காலத்தின் கட்டாயம் கூட,. என பெருமூச்சு விட்டார் பிரகாஷ்.

ஒரு பெரிய விபரீதத்தை மடியில் கட்டிக் கொண்டு இருந்ததை எண்ணி தோட்டக்காரர்கள் ஒருவித கிலியில் இருந்தனர்.

அது சரி தம்பி, இந்த களைச் செடியை எப்படி ஒழிப்பது என்று ஒருவர் கேட்டார்.

உப்பையும் சோப்பு எண்ணெயையும் கலந்து இந்தச் செடிகள் மீது ஸ்பிரே செய்தால் ஒழிக்கலாம்; அப்புறம் இந்த களைச் செடிகளை வேரோடு பிடுங்கி தனியாக ஒரு மேட்டில் போட்டு சுத்தமாக எரித்துவிட வேண்டும். இப்படி செய்தால் இதை ஒழித்து விடலாம். வேலிகாத்தான் செடியை ஒழிக்க அரசு சார்பில் தீவிர இயக்கம் நடத்திய மாதிரி இதற்கும் ஒரு தீவிர முயற்சி வேணுமென்று பிரகாஷ் சொன்னார். அடுத்த ஒரு சில நாட்களில் அவர் சொன்னபடி செய்ய அந்த விஷச் செடியின் ஆளுமை பெருமளவிற்கு குறைந்தது.

நினைவுகளில் இருந்து மீண்ட பிரகாஷ் கண்ட காட்சி அவரை மேலும் பரபரப்புக்கு உள்ளாக்கியது. அந்த மற்றொரு போட்டியாளர் முருகன், முரளிமனோகர் முன் நோக்கி நகர்ந்து அவர் கைகளை குலுக்கி நீங்கள்தான் மற்றொரு போட்டியாளரா எனக்கேட்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பின்பக்கம் திரும்பி உடன் வந்த நபரிடமிருந்து அந்த பொக்கேவை வாங்கி முரளி மனோகரிடம் நீட்ட, வேகமாக புகுந்த பிரகாஷ் லாவகமாக அதை தட்டி விட்டார். முரளி மனோகரையும் ஒதுங்கிப் போகச் செய்தார். அந்த பொக்கே இப்போது அந்த முருகனின் உடையில் விழுந்து தெறித்தது. ஏன் இப்படி செய்தீர்கள் பிரகாஷ் என கேட்டார்.

முரளி மனோகருக்கு ஒரு அர்த்தமுள்ள பார்வையால் பதிலளித்து நேர்முகத் தேர்வு நடக்கும் அறைக்குள் அவரை அனுப்பி வைத்தார்.

நேர்முகத் தேர்வு முடிந்து வெற்றி புன்னகையுடன் வெளியே வந்தார் முரளி மனோகர்.

அடுத்து கைகால்கள் எல்லாம் அரிப்பு எடுக்க கலவரத்துடன் உள்ளே நுழைந்தார் மற்றொரு போட்டியாளரான முருகன்.

என்ன பிரச்சனை என்று முரளி மனோகர் கேட்க பின்னாடி தனியே சொல்றேன் என்று அவரை நகர்த்திக்கொண்டு சென்றார் பிரகாஷ்.

Leave a Reply

Your email address will not be published.