செய்திகள்

பூங்காவில் சிறுமியை கடித்து குதறிய நாய்

வளர்ப்பு பிராணிகளுக்கு லைசென்ஸ் கட்டாயம்: கமிஷனர் அறிவிப்பு

சென்னை, மே 6–

சென்னை ஆயிரம் விளக்கு பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் வளர்ப்பு பிராணிகளுக்கு லைசென்ஸ் கட்டாயம் என்று மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி அருகே பூங்கா ஒன்று செயல்பட்டு வரும் நிலையில் அந்தப் பூங்காவின் பராமரிப்பு பணிகளை காவலாளி ரகு குடும்பத்துடன் அங்கேயே தங்கி இருந்து கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் காவலாளி வெளியூருக்கு சென்ற நிலையில் அவரது மனைவி சோனியா மற்றும் மகள் சுபிக்ஷா ஆகியோர் பூங்காவிலேயே இருந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு அதே பகுதியைச் சேர்ந்த புகழேந்தி என்பவர் தான் வளர்க்கும் ராட்வீலர் வகை நாய்களுடன் பூங்காவுக்கு நடை பயிற்சிக்கு வந்துள்ளார். அப்போது புகழேந்திடமிருந்து பாய்ந்து சென்ற இரு நாய்களும், அங்கு விளையாடிக் கொண்டிருந்த சுபிக்ஷாவை கடித்து குதறியது. மிகக் கொடூரமாக சுபிக்ஷா நாய்களால் கடிபட்ட நிலையில் அவரது பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை அடுத்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த சோனியாவையும் நாய்கள் கடித்து குதறியதாக கூறப்படுகிறது.

நாய்கள் கடித்ததால் தலையில் படுகாயங்களுடன் சிறுமி சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.இந்நிலையில் நாய்களை பூங்காவுக்குள் அழைத்து வந்த உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அருகில் இருந்தோர் நாய்களை விரட்ட முயன்றும் அது முடியாமல் போனது. அதே நேரத்தில் நாய்கள் கடிப்பதை புகழேந்தி தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாய் உரிமையாளர்

குடும்பம் கைது

இந்த விவகாரம் தொடர்பாக நாயின் உரிமையாளர் புகழேந்தி, அவரது மனைவி தனலட்சுமி, மகன் வெங்கடேசன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். 3 பேர் மீதும், 2 பிரிவுகளின் கீழ் ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல் நிலைய ஜாமினில் விடுவிக்க உள்ள பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சிறுமியின் சிகிச்சை செலவை ஏற்பதாக நாய்களின் உரிமையாளர் புகழேந்தி கூறினார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணண் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:–-

சென்னை ஆயிரம் விளக்கில் நாய்கள் கடித்து சிறுமி படுகாயம் அடைந்த விவகாரத்தில் ஏற்கனவே உரிமையாளர் புகழேந்தி கைதான நிலையில், அவரது மனைவி தனலட்சுமி, மகன் வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மத்திய அரசு தடை செய்துள்ள 23 வகை நாய்களில், ராட்வீலர் வகையும் ஒன்றாகும். ராட்வீலர் வகை நாய்களை இனப்பெருக்கம் செய்யக்கூடாது என்ற தடையும் உள்ளது. நாய்களின் உரிமையாளருக்கு இன்று காலை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மாநகராட்சியை பொருத்தவரை எந்த வளர்ப்பு பிராணியாக இருந்தாலும் லைசென்ஸ் பெற வேண்டும். நாய்களுக்கு, அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக கால்நடைத் துறையுடன் சேர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *