சென்னை, டிச. 13–
புஷ்பா 2 படம் பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் கடந்த 5-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. படம் வெளியான 6 நாட்களில் ரூ.1000 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 4ம் தேதி ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ‘புஷ்பா–2’ படத்தை பார்க்க நடிகர் அல்லு அர்ஜூன் காரில் வருகை தந்ததால், அவரை நோக்கி கூட்டம் சென்றது. அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவருடைய 8 வயது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தியேட்டர் உரிமையாளர், மேலாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் மீது 105, 118 (1) என்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ஐதராபாத் போலீசார், அவரை கைது செய்து சிக்கட்பாளி போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அல்லு அர்ஜுன் உயிரிழந்த பெண் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் அளிப்பதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.