ஐதராபாத், டிச.26-
புஷ்பா-2’ படத்தின் சிறப்பு காட்சியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு படக்குழு ரூ.2 கோடி ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது.
தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் கடந்த 4-ந் தேதி ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டபோது, நடிகர் அல்லு அர்ஜுன் திடீரென தியேட்டருக்கு வந்ததால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 35 வயது பெண் உயிரிழந்த நிலையில், அவரது 8 வயது மகன் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான்.
இதற்கிடையே, சிறுவன் ஸ்ரீதேஜ் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆஸ்பத்திரி நிர்வாகம் இத்தகவலை தெரிவித்ததாக அவனுடைய தந்தை பாஸ்கர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
ஸ்ரீதேஜ்க்கு அளிக்கப்பட்டு வந்த ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டு விட்டதாகவும், வென்டிலேட்டர் கருவி அகற்றப்பட்டு விட்டதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். இருப்பினும், முழுமையாக குணமடைய நாட்கள் ஆகும் என்று கூறினர்.
இது தொடர்பான வழக்கில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த விவகாரம் தொடர்பாக தெலுங்கானா சட்டசபையில் பேசிய முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி அல்லு அர்ஜுன் மீதும், திரைத்துறையினர் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இதனால் இந்த விவகாரம் மேலும் பூதாகரமாகியுள்ளது.
இந்த நிலையில் தெலுங்கானா மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் தலைவரும், முன்னணி தயாரிப்பாளருமான தில் ராஜு, அல்லு அர்ஜுனின் தந்தையும், மூத்த தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த் உள்ளிட்டோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற்று வரும் சிறுவனை நேரில் சென்று பார்த்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அல்லு அரவிந்த், “சிறுவன் குணமடைந்து வருகிறான். தானாக சுவாசிக்கிறான். சிறுவன் முழுமையாக குணமடைவான் என டாக்டர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
இந்நிலையில் சிறுவனின் குடும்பத்தை ஆதரிக்கும் விதமாக உயிர்இழந்த ரேவதியின் குடும்பத்திற்கு அல்லு அர்ஜுன், 1 கோடி ரூபாயும், திரைப்பட இயக்குனர் சுகுமார் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் தலா 50 லட்சம் ரூபாய் என மொத்தம் 2 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்க உள்ளதாக நேற்று அறிவித்துள்ளனர்.