ஐதராபாத், ஜன. 7–
புஷ்பா பட கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனை நடிகர் அல்லு அர்ஜூன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கடந்த 4ம் தேதி ஐதராபாத்தில் உள்ள தியேட்டர் ஒன்றில் பிரபல நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 படம் வெளியானது. அப்போது அந்த தியேட்டருக்கு அல்லு அர்ஜூன் படக்குழுவினருடன் சென்றார். அவரின் வருகையை அறிந்து பலர் ஒன்றுகூட கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதில் ரேவதி என்ற பெண் பலியானார். அவரது மகன் ஸ்ரீதேஜ் படுகாயம் அடைந்தார். இது தொடர்பான வழக்கில் சிறை சென்ற அல்லு அர்ஜூன் ஜாமீனில் வெளிவந்தார்.
இந்த நிலையில், செகந்திராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிசிக்சை பெற்று வரும் சிறுவன் ஸ்ரீதேஜை அல்லு அர்ஜூன் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூவும் உடன் இருந்தார்.
முன்னெச்சரிக்கையாக, மருத்துவமனை வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. முன்னதாக, கூட்ட நெரிசலில் பலியான பெண் குடும்பத்துக்கு புஷ்பா படக்குழு ரூ.2 கோடி நிதி உதவி அளித்தது குறிப்பிடத்தக்கது.