செய்திகள்

புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளது: மக்கள் பதற்றம் அடைய வேண்டாம்

தமிழக அரசு வேண்டுகோள்

சென்னை, டிச.7–

மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழைக்கு இடையே புழல் ஏரியின் கரை உடையும் அபாயத்தில் இருப்பதாக வெளியான தகவலுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஏரி பாதுகாப்பாக உள்ளது, மக்கள் பதற்றம் அடைய தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக நீர்வளத்துறை செயற்பொறியாளர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில், புழல் ஏரியானது சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வரும் மிக முக்கியமான ஏரியாகும். இந்த ஏரியானது திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீர் பரப்பு பகுதி 20.27 ச.கி.மீட்டர் ஆகும். இந்த ஏரியின் முழு உயரம் 2,120 அடியாகும். இந்த ஏரியின் முழு கொள்ளளவு 3,300 மி.க. அடியாகும். ஏரியின் கரையின் நீளம் 7,090 மீட்டர் ஆகும்.

இன்று காலை 6 மணி நிலவரப்படி 20 அடி நீர் இருப்பு உள்ளது. ஏரியின் கொள்ளளவு 3012 மி.க. அடியாக உள்ளது. நீர்வரத்து 550 கனஅடியாக உள்ளது. தற்போது ஏரியிலிருந்து வினாடிக்கு 100 கனஅடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக மிக்ஜாம் புயலினால் அதிக அளவு கனமழை பெய்ததினால் ஏரிக்கு நீர்வர்த்து கூடுதலாக வந்து கொண்டிருந்ததால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்த நிலையில் ஏரியில் இருந்து ரெகுலேட்டர் வழியாக உபரிநீர் வினாடிக்கு 5500 கன அடி வெளியேற்றப்பட்டு வந்தது. அப்போது ஏற்பட்ட கடுமையான சூறாவளி காற்றினால் ஏரியில் மிக கடுமையான அளவில் அலைகள் ஏற்பட்டு கலங்களின் மேல் தண்ணீர் வெளியேறியது. இதனால் காவல்துறை பாதுகாப்பு அறை பின்பகுதியில் கரையில் உள்ள பக்கவாட்டு தாங்குச் சுவரின் பக்கத்தில் அடுக்கி வைத்திருந்த கருங்கல்லால் ஆன சுற்றுசுவர் சரிந்து மண் அரிப்பு ஏற்பட்டது.

இது ஏரியின் எப்டிஎல்ஐ விட 2 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இதன் வழியாக தண்ணீர் வெளியேறவில்லை. மேலும் கலங்கல் வழியாக அலைகளால் தண்ணீர் வெளியேறியதால் சாலையில் அரிப்பு ஏற்பட்டது. தற்போது மண் அரிப்பு ஏற்பட்ட சாலை பகுதிகளில் கிராவல் மண் கொட்டி மட்டப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளது. எனவே மக்கள் எந்த விதத்திலும் பதற்றம் அடைய தேவையில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் நேரில் சென்று புழல் ஏரியை பார்வையிட்டனர். ஏரியின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்து அதிகாரிகளிடமும் நிலைமை குறித்து கேட்டறிந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *