செய்திகள்

புழல் அருகே பெட்ரோல் டீசல் திருட்டு ; 9 பேர் கைது : 12 டேங்கர் லாரிகள் பறிமுதல்

சென்னை, ஆக.7 –

இந்திய எண்ணை நிறுவனத்தில் இருந்து சீலிட்டு அனுப்பப்பட்ட டேங்கர் லாரிகளின் சீலை உடைக்காமல் பெட்ரோல் டீசல் திருடிக்கொண்டு அதற்கு பதிலாக கலப்பட எண்ணையை ஊற்றி அனுப்பியதாக 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 12 டேங்கர் லாரிகளையையும் 1200 லிட்டர் பெட்ரோல் டீசலையும் பல லிட்டர் கலப்பட எண்ணையையும் பறிமுதல் செய்தனர்.

புழல் மகளிர் சிறை அருகே அம்பத்தூர் சாலையில் வரதன் என்பவர் டேங்கர் லாரிகள் வைத்துக்கொண்டு ஆயில் ஏற்றி இறக்கும் ஒப்பந்த நிறுவனம் நடத்திவருகிறார்.

இந்திய எண்ணை நிறுவனத்தில் இருந்து பெட்ரோல் டீசல் டேங்கர் லாரிகளில் ஏற்றி சீலிட்டு அனுப்புவார்கள். அதை காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு , திருவள்ளூர் மாவட்டங்களில் வரதனின் டேங்கர் லாரிகள் சப்ளை செய்வது வழக்கம். அப்படி ஆயில் கொண்டு செல்லும் போது வரதன் கம்பனியில் நிறுத்தி பெட்ரோல் டீசல் திருடிக்கொண்டு அதற்கு பதிலாக கலப்பட எண்ணையை ஊற்றி அனுப்பி விடுவார்களாம்.

இதுபற்றி புகார் வந்ததை அடுத்து போலீசார் அதிரடி விசாரணை நடத்தினர். டேங்கர் லாரிகளில் டிரைவர்களாக வேலை பார்த்துவந்த பெரியசாமி வயது 41, பார்த்திபன் வயது 35 ஆகியோர் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 12 டேங்கர் லாரிகளையையும் 1200 லிட்டர் பெட்ரோல் டீசலையும் கலப்பட எண்ணையையும் பறிமுதல் செய்தனர். வரதன் தப்பி ஓடிவிட்டார். அவரைப் போலீசார் தேடிவருகிறார்கள்.

புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *