செய்திகள்

புளூடூத்’ பயன்படுத்தி சுங்கத்தேர்வு எழுதிய 30 வடமாநில இளைஞர்கள் பிடிபட்டனர்

சென்னை போலீசார் விசாரணை

சென்னை, அக.15-

சென்னையில் நடைபெற்ற சுங்கத்துறை பணிக்கான எழுத்து தேர்வில் ‘புளூடூத்’ பயன்படுத்திய வடமாநிலத்தைச் சேர்ந்த 30 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசின் சுங்கத்துறையில் காலியாக உள்ள கேண்டீன் உதவியாளர், கிளர்க், சமையலர், எழுத்தர், கார் டிரைவர்கள் என 17 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக சுங்கத்துறை இணையத்தில் முறையான அறிவிப்பு வெளியானது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்து 600 பேர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு, சென்னை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத்துறை தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

தேர்வு தொடங்கிய 15 நிமிடத்தில் சுங்கத்துறை தேர்வு குழு அதிகாரிகளுக்கு திடீரென ஏற்பட்ட சந்தேகத்தால் தேர்வர்களை சோதனை செய்தனர். அப்போது சிலர், காதின் உள்புறமாக ‘புளூடூத்’ பொருத்தி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து சுங்கத்துறை தேர்வு மைய அதிகாரிகள், ஒவ்வொருவராக சோதனையிட்டனர். அதில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த 28 பேரும், உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த 2 பேரும் என மொத்தம் 30 பேர் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.

இந்த எலக்ட்ரானிக் சாதனங்களை பொருத்தியபடி தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்களுக்கு, சுங்கத்துறை அலுவலக வளாகத்தில் இருந்து, ‘சிங்க்’ என்ற செயலி மூலம் இவர்களை தொடர்பு கொண்டு கேள்விக்கான பதிலை அளித்தவர்கள் யார்? என்பதை அறிய, சுங்கத்துறை சார்பில் வடக்கு கடற்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, 30 பேரையும் போலீசில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகளிடம் துணை கமிஷனர் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதுபோன்ற தேர்வு நடைபெறுவது பற்றி அப்பகுதியில் உள்ள காவல்துறைக்கு ஏன் தகவல் தெரிவிக்கவில்லை? முறையான சோதனைக்கு பின்னர் தேர்வு எழுதுபவர்களை அனுமதிக்காதது ஏன்? என்பன போன்ற கேள்விகளை கேட்டு அதற்குண்டான விளக்கம் பெற்றனர்.

இது தொடர்பாக உதவி கமிஷனர் வீரகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் இந்த புகார் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சட்டநிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறார்கள். அதன்பிறகு இதுபற்றி வழக்குப்பதிவு செய்து பிடிபட்டவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கமலஹாசன்

சினிமா பாணியில்

நடிகர் கமலஹாசன் நடித்த ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.’ என்ற திரைப்படத்தில் இதுபோல் ‘புளூடூத்’ பயன்படுத்தி தேர்வு எழுதுவதுபோல் காட்சி இடம் பெற்றிருக்கும். அதே பாணியில் வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் இந்த நூதன முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே இதுபோல் சென்னையை அடுத்த பரங்கிமலையில் நடைபெற்ற ராணுவ தேர்விலும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள், இதே பாணியில் தேர்வு எழுதி 100-க்கும் மேற்பட்டவர்கள் பிடிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அரியானா மாநிலத்தைச் சேர்ந்த சுதர்சிங் என்பவருக்கு பதிலாக அவரது அடையாள அட்டையுடன் அவரது நண்பர் ஒருவர் ஆள்மாறாட்டம் செய்து இந்த தேர்வை எழுதினார். தேர்வு மையத்தில் அவரை கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள், சோதனை செய்தனர்.

அப்போதுதான் அவர் காதில் ‘புளூடூத்’ மாட்டிக்கொண்டு அங்கு தேர்வு எழுதி மற்றவர்களுக்கும் ‘புளூடூத்’ மூலம் கேள்விகளுக்கான விடையை கூறி முறைகேட்டில் ஈடுபட்டது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *