செய்திகள்

புற உலக சிந்தனையற்ற குழந்தைகளுக்கான ஆரம்ப நிலைப் பயிற்சி மையம்: திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி திறந்து வைத்தார்

Spread the love

திருவள்ளூர், ஜூன் 19–

புற உலக சிந்தனையற்ற குழந்தைகளுக்கான ஆரம்ப நிலைப் பயிற்சி மையத்தினை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.

திருவள்ளுர் மாவட்டம், பூவிருந்தவல்லி அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக புற உலக சிந்தனையற்ற குழந்தைகளுக்கான ஆரம்ப நிலைப் பயிற்சி மையத்தினை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் குத்து விளக்கேற்றி திறந்து வைத்து, பார்வையிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது :

முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, தமிழக அரசின் வாயிலாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் புற உலக சிந்தனையற்ற குழந்தைகளுக்கு (ஆட்டிசம்) பாதிப்புக்குள்ளான 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கண்டறிந்து, அவர்களுக்கு பல்வேறு சிறப்பு பயிற்சிகள் மூலமாக குணமடைய செய்ய மாநிலத்தில் 14 மாவட்டங்களில் புற உலக சிந்தனையற்ற குழந்தைகளுக்கான ஆரம்ப பயிற்சி மையங்களை தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது. இன்று திருவள்ளுர் மாவட்டத்தில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரு மையம் துவங்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் குழந்தைகளுக்கு பயிற்சி வழங்க 5 சிறப்பு நபர்கள் நியமிக்கப்பட்டு, இவர்களில் 3 சிறப்பு ஆசிரியர்களும், ஒரு தொழில்முறை பயிற்சியாளர், ஒரு பேச்சுப் பயிற்சியாளர் மற்றும் 3 காப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இச்சிறப்பு பள்ளியில் மாணவர்கள் வந்துச் செல்வது, இயல்பான சூழ்நிலையில் வந்து செல்வதைப் போல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவர்களின் தனித்திறமைகளை அறிந்து, அவர்களுக்கேற்றவாறு பயிற்சிகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப நிலை சிறப்பு பயிற்சி மையம் ஹோப் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலமாக செயல்படவுள்ளது. இத்தொண்டு நிறுவனத்தில் 18 வருடங்களுக்குமேல் அனுபவம் உள்ள ஆசிரியர்கள் திறன் வளர்ப்பு பயிற்சியினை மாணவர்களுக்கு வழங்கவுள்ளனர். திருவள்ளுர் மாவட்டத்தில் 46 புற உலக சிந்தனையற்ற (ஆட்டிசம்) குறைபாடுடைய மாணவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள், பெற்றோர்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், புற உலக சிந்தனையற்ற மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு, தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு மாற்றுத்திறனாளி மாணவருக்கு ரூ. 74,500 மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலியினையும், பார்வையற்ற 10 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ. 35,110 மதிப்பிலான நவீன ஔிரும் மடக்கு குச்சி மற்றும் கறுப்பு கண் கண்ணாடிகள் ஆக மொத்தம் ரூ. 1,09,610 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் த.இராஜேந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆர்.பாலாஜி, உதவி இயக்குநர் (பேரூராட்சி) கனகராஜ், நகராட்சி நிர்வாக மண்டல பொறியாளர் ஈ.முருகேசன், நகராட்சி ஆணையர்கள் டிட்டோ (பூவிருந்தவல்லி), சித்ரா (திருவேற்காடு), திருமழிசை பேரூராட்சி செயல் அலுவலர் பிரேமா, பூவிருந்தவல்லி நகராட்சி பொறியாளர் முத்துகுமார், பூவிருந்தவல்லி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுதேவன் (வ.ஊ.), லட்சுமணன் (கி.ஊ.) தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *