சென்னை, பிப்.6-
புற்றுநோய் சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன் 5 நாள் பயணமாக ஜப்பான் சென்றார்.
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 5 நாட்கள் அரசுமுறை பயணமாக ஜப்பான் நாட்டுக்கு சென்றார். முன்னதாக சென்னையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
உலகளவில் புற்றுநோய் மிகப்பெரிய தொற்றாநோயாக உருவெடுத்து வருகிறது. தமிழ்நாட்டிலும் ஆண்டுதோறும் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை புற்றுநோயாளிகள் கண்டறியப்படுகிறார்கள். புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால் முற்றிலுமாக குணமாக்க முடியும்.
உலகளவில் புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் ஜப்பான் முன்னோடியாக திகழ்கிறது.
இந்த நிலையில், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையானது அந்நாட்டில் செயல்படுத்தப்படும் புற்றுநோய் கொள்கைகள் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்வதற்கு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரின்கீழ் ஒரு குழுவை அங்கு அனுப்ப கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரை தலைமையாக கொண்டு மருத்துவத்துறையின் அரசு முதன்மைச்செயலாளர், தேசிய நலவாழ்வு குழும இயக்குனர், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர், புற்றுநோய்க்கான சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர் டாக்டர் சரவணன், பேராசிரியர் டாக்டர் ஆறுமுகம், உதவி பேராசிரியர் டாக்டர் பிரசன்னா அடங்கிய குழுவை ஜப்பான் நாட்டுக்கு அனுப்ப ஆணையிட்டுள்ளார்.
மேலும் இந்த குழுவினர் விரிவாக ஆராய்ந்து பரிந்துரையை தமிழ்நாடு அரசுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 5 நாள் அரசுமுறை பயணமாக ஜப்பான் சென்று அங்கு ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை தலைமையகத்தில் உயர் அலுவர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்த உள்ளோம்.
ஜப்பான் நட்டு மருத்துவம் மற்றும் தொழிலாளர் நல மந்திரி தலைமையிலான குழுவை சந்தித்து கலந்துரையாடுவதுடன், புற்றுநோய் மருத்துவ கட்டமைப்பு வசதிகளை பார்வையிடுகிறோம்.
ஜப்பான் நாட்டு புற்றுநோய் கொள்கை செயல்பாடுகளில் உள்ள சிறப்பம்சங்களை தமிழ்நாட்டில் உள்ள சிகிச்சை முறைகளில் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய்ந்து ஒரு செயல்திட்டத்தை முதலமைச்சரிடம் சமர்ப்பிப்பதுதான் ஜப்பான் பயணத்தின் நோக்கம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.