சென்னை, மே 21-
‘‘ஆவாரம்பூவிற்கு சித்த மருத்துவத்தில் ‘கபால சாந்தி’ என்றொரு பெயர் உண்டு. கடும் வெயிலில் வெளியில் செல்வோர் தலைக்கு அணியும் தலைக்கவசம், தொப்பி இவற்றுக்குள் ஆவாரம்பூவை பரப்பி தலையில் அணிந்து கொள்ளலாம். இது தலைவலியையும், மயக்கத்தையும் தவிர்க்கும்’’ என்று அனுபவம் பேசினார் இளம் சித்த மருத்துவர் ச.இளஞ்செழியன்.
மூலிகை ஊறல் நீர் – கொதிக்க வைத்த இந்நீரை, புதிய மண்பாண்டத்தில் ஊற்றி அதில் சிறிதளவு வெட்டிவேர், சுத்தமான சந்தன மரக்கட்டை, தேற்றான்கொட்டை, நன்னாரி இவற்றில் ஏதேனும் ஒன்றையோ அல்லது அனைத்தையுமோ போட்டு 1 மணி நேரம் ஊற விட்டு இந்நீரை நாள் முழுக்க குடிநீராக பயன்படுத்தி வரலாம் என்று 2வது யோசனையைக் கூறினார்.
“மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார், கண் துஞ்சார், கருமமே கண்ணாயினார்”- என்று கடமையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருப்பவர்களை பற்றி சொல்வதுண்டு. இந்தப் பட்டியலில் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டிருக்கும் இளம் சித்த மருத்துவர் தான் இளஞ்செழியன். வயது 25. திருமணமாகாதவர். கோவூர் தண்டலத்தில் வசிப்பவர்.
கருமை நிறக் கண்ணனை ஒத்திருக்கும் நிறம், வசீகரப் புன்னகை, ஒரு நிமிடம் கூட ஒரே இடத்தில் பார்வையைப் பதிக்காமல், விவிஐபிக்களுக்கான மெய்க் காவலர்களைப் போல நாலா பக்கமும் சுழன்று கொண்டு இருக்கும் விழிகள், அதிகாரக் குரல் இல்லாமல்… அண்டி வரும் நோயாளிகளுக்கு இதமான வார்த்தைகளைப் பதமாய் சொல்லிடும் அன்புக் குரல் என்று வர்ணிக்கும் இடத்தில் இருப்பவர் தான் இளஞ்செழியன்.
“என் மண்ணுக்கும் மனசுக்கும் விரோதமான ஆங்கில மருத்துவத்தைப் படிக்க மாட்டேன்…” என்று பெற்றோர்களிடமும் – மற்றவர்களிடமும் சூளுரைத்து, சித்த மருத்துவம் தான் படித்தே ஆவேன் என்று பிடிவாதம் தலைக்கேறிய தமிழ் ஆர்வலர், அவர்.
‘‘சுட்டெரிக்கும்- – அனல் பறக்கும் அக்னி நட்சத்திரத்தின் கொடுமையில் இருந்து தப்பிப்பது எப்படி’’? என்று சித்த மருத்துவத்தின் சிகிச்சை வழி நின்று சொல்லுங்கள்… இது கேள்வி. மடை திறந்த வெள்ளமென வந்து விழுந்தன வார்த்தைகள்:
செரிக்கும் உணவை உட்கொள்வது அவசியம்…
‘‘சூரியன் வடக்கே செல்லும் காலமான பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் 3 பெரும் பொழுதுகளும் சித்த மருத்துவத்தில் ‘உரம் போக்கிக் காலம்’ என்று வழங்கப்படுகிறது. இக்காலக்கட்டத்தில் செரிமான ஆற்றலும் உடலின் இயற்கை வன்மையும் குறைந்து நோய் உண்டாக ஏதுவாக இருப்பதால் எளிதில் செரிக்கும் உணவுகளை உட்கொள்வது அவசியம்.
* பானகம் : கருப்பட்டி (50 கிராம்), புளி (50 கிராம்), ஏலம் ((2.5 கிராம்), சுக்கு (2.5 கிராம்), எலுமிச்சம் பழம் (1/4 துண்டு), உப்பு (தேவையான அளவு) , நீர் (500 மில்லி) ஆகியவற்றை கலந்து இரு வேளை 100 மில்லி அளவு அருந்தி வர, சிறுநீர் கடுப்பு, தீராத தாகம், அதிக உஷ்ணம் ஆகியவை தீரும்.
* கரும்புச்சாறு : பித்தத்தை தனிப்பதில் கரும்புச்சாறுக்கு முக்கிய இடம் உண்டு. நீரிழிவு நோய் இல்லாதோர் இதை அவ்வப்போது கோடைக்காலத்தில் சிறிது இஞ்சி, எலுமிச்சை சாறு கலந்து அருந்தி வரலாம். * வெண்பூசணி சாறு: இதற்கு சித்த மருத்துவத்தில் ‘அக்கினி கட்டு’ என்று பெயர். இதன் தோல் மற்றும் விதைகளை நீக்கி சதை பகுதியை சாறாக்கி, சிறிது மிளகுத் தூள் சேர்த்து 1 டம்பளர் அளவு அருந்தலாம். சளி, காய்ச்சல், ஆஸ்துமா தொந்தரவு இருப்பவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.
* இளநீர் : கோடைக்காலத்தில் ஏற்படும் நீர் மற்றும் உப்புச்சத்து இழப்பை சரி செய்ய இளநீர் பெருமளவில் உதவும். இதனை வெறும் வயிற்றிலோ அல்லது காலை உணவுக்கு மாற்றகவோ அருந்தக் கூடாது. கரும்புச்சாறு, பூசணி சாறு, இளநீர் இவைகளை அருந்துவதாக இருந்தால் காலை 10 மணியிலிருந்து 2 மணிக்குள் அருந்துவதே உத்தமம்.
எண்ணெய்யில் பொறித்த உணவும் வேண்டாம்…
உடலில் வறட்சியையும், நீரின் தேவையை அதிகப்படுத்தும் தோசை, பூரி, பிற எண்ணெய்யில் பொறித்த உணதவுகள் ஆகியவற்றை முற்றிலும் தவிர்த்தல் நல்லது. நெய்பொறி கஞ்சி, கேழ்வரகு கூழ் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டியது.
சாமானியனும் சுலபத்தில் புரிந்து கொள்ளக் கூடிய விதத்தில் உருப்படியான டிப்ஸ்களை சொல்லி முடித்தார் இளஞ்செழியன் பின் தொடர்ந்தது பேட்டி:
தாத்தாவின் மரணத்தில் வலி: பாதை மாறியது
‘‘சித்த மருத்துவ ஆசை எப்படி எந்த வயதில் வந்தது?’’
‘‘2011ஆம் ஆண்டு எனது தாய்வழி தாத்தா தெய்வத்திரு கதிரேசன், புற்று நோயால் மரணமடைந்தது என்னை பெரிதளவில் பாதித்தது. புற்று நோய் உண்டாக்கக்கூடிய பழக்கவழக்கங்கள் ஏதும் இல்லாமல் புற்று நோய் உண்டானதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 81 வயதில் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து மறைந்த என் தாத்தாவின் இழப்பு இவ்வளவு வலி தரக்கூடியதாக இருக்குமேயானால், வாலிப வயதிலும், குழந்தைப் பருவத்திலும் புற்று நோய்க்கு இரையானவர்களின் குடும்பத்தின் வலி, பொருளாதார இழப்பு என்னால் கற்பனையும் செய்ய முடியாததாக இருந்தது.
இவர்களின் துயர் தீர்க்க ஒரு புற்று நோய் மருத்துவராக உருவாக வேண்டும் என என் மருத்துவக்கனவை தொடங்கினேன். அவ்வப்போது புற்று நோய் பற்றி இணையத்தில் படித்துக் கொண்டும் வந்தேன். 11ஆம் வகுப்பு படித்து கொண்டு இருக்கும்பொழுது சித்த மருத்துவ மூலிகை சிலவும், சில பாடாண மருந்துகளும் புற்று நோயில் மிகக்குறைந்த பொருட்செலவில் பெரிதளவில் பயன் அளிப்பதாகவும் அவற்றை சார்ந்த ஆய்வுகள் நடைபெறுவதாகவும் கேள்வியுற நேர்ந்தது. இதுவே சித்த மருத்துவம் படிக்க வேண்டும் என்னும் என் ஆசையில் ஒரு முக்கிய முனை என்று சொல்லலாம்.
ஆங்கில மருத்துவம் மனசாட்சிக்கும் விரோதமா?
‘‘மண்ணுக்கும் மனசாட்சிக்கும் விரோதம் ஆங்கில மருத்துவம் என்பதை எதை வைத்து சொல்கிறீர்கள்?’’
‘‘11, 12ஆம் வகுப்பிலும், பொதுத்தேர்வுக்கு பின்னான விடுமுறை நாட்களிலும் சில புத்தகங்களை படிக்கும் வாய்ப்பமைந்தது, குறிப்பாக டாக்டர் கே.ஆர். சேதுராமனால் எழுதப்பட்டு, விகடன் பிரசுரத்தால் வெளியிடப்பட்ட போஸ்ட் மார்ட்டெம் என்னும் நூல் என்னை பெரிதும் பாதித்தது. அந்த வயதிற்க்கே உரிய ஒரு உணர்ச்சி பெருக்கு என்னை ஆங்கில மருத்துவத்தை ஒரு விரோதியாக, ஒரு அந்நிய மருத்துவ முறையாக கருத செய்தது. இன்று அந்த எண்ணம் வெகுவாக மாறியுள்ளது, மக்கள் நல்வாழ்வில் ஆங்கில மருத்துவத்தின் அத்தியாவசியத்தை உணர்ந்தவனாக, எல்லா மருத்துவ முறைக்கும் ஒரு தேவையும் அதே சமயம் ஒரு வரம்பும் உள்ளது என்று உணர்ந்து மருத்துவம் மேற்கொண்டு வருகின்றேன்.
தந்தை வழி தாத்தா நல்லாசிரியர் விருது
‘‘ தமிழ் ஆர்வலர் குடும்பம் என்றால் உங்கள் பின்னணியை சொல்லுங்கள்?’’
‘‘எனது தந்தையும், தாயும் தமிழை விரும்பிக்கற்ற ஆசிரியர்கள். தந்தை வழி தாத்தாவான தெய்வத்திரு எல்லப்பன் நல்லாசிரியர் விருது பெற்ற தமிழ் ஆசிரியர், திராவிட சித்தாந்தத்தில் ஊறி தீவிர கள செயல்பாட்டாளராக இருந்த அவர் இயல்பாகவே எங்களுக்கு தமிழ் ஆர்வத்தை ஊட்டினார். தாய்வழி முன்னோர்கள் சமய தீட்சை பெற்று பன்னிரு திருமுறைகளில் மூழ்கி தமிழின் அருஞ்சுவையை எனக்கு புகட்டினார்கள். இப்படி ஒரு புறம் சைவமும் மறுபுறம் திராவிடமும் சேர்ந்தே என் தமிழ் ஆர்வத்தை வளர்த்தெடுத்தது.
மாதவிடாய் கோளாறு, வயிற்று நோய்கள்
உளம் சார்ந்த நோய்கள், பெண்கள் மாதவிடாய் கோளாறுகள், வயிற்று நோய்கள், சிறுநீரக கல், தசை எலும்பு நோய்கள், தோல் நோய்கள், தொற்றா நோய்களான சர்க்கரை நோய், அதிகுருதி அழுத்தம் போன்ற நோய்களுக்கு மருந்துகளையும், சித்த மருத்துவத்தின் தனி சிறப்பான நாடி ஓட்டத்தை சீர் செய்யும் வர்ம மருத்துவத்தையும், தசைகளுக்கு வன்மை அளிக்கும் தொக்கணம் முறைகளையும் கொண்டு சிகிச்சை அளித்து வருகின்றேன். மேலும் நோய் தடுப்பு முறையான ஐம்பொறி காப்பு, கருத்தரிக்கும் முன்னர் செய்ய வேண்டிய உடல் சுத்தி முறைகள் பற்றிய ஆலோசனையும் வழங்கி வருகின்றேன்.
யாதும். உயிர் செயலி
“யாதும். உயிர் ” செயலி வடிவமைக்கும் எண்ணம்- எதனால் எப்படி வந்தது ,அதன் செயல்பாடு என்ன?
கொரோனா நோய் தொற்று காலத்தில் பலரின் உயிரை சித்த மருத்துவம் காப்பாற்றியது நாம் நன்கறிந்ததே. நோய்த்தொற்று காலத்திலும் சரி, மற்ற காலங்களிலும் சரி, பல லட்சம் உயிர் இழப்புகளுக்கு காரணமாக ‘கள்ள மௌனி’ ஆக இருக்கும் தொற்றா நோய் கூட்டங்களில் இருந்து மக்களை பாதுகாக்க சித்த மருத்துவ அடிப்படை தத்துவங்களை கொண்டு உருவாக்கப்பட்ட செயலியே யாதும்.உயிர் (Yaathum.life). இச்செயலியை கொண்டு சித்த மருத்துவத்தின் அடிப்படையில் ஒருவரின் உடல் இலக்கணம் (யாக்கை இலக்கணம்), அவருக்கு வருங்காலத்தில் ஏற்படக்கூடிய நோய்கள்,அவற்றை தவிர்க்கும் உணவியல் மற்றும் வாழ்வியல் பரிந்துரைகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.
தங்களின் குரு யார், சித்த மருத்துவத்தில்?
பல்வேறு ஆசிரியர்கள் என் சித்த மருத்துவ ஆர்வத்தை வளர்த்தெடுத்து எனக்கு போதித்து உள்ளார்கள்; இப்பொழுதும் போதித்து கொண்டே உள்ளார்கள். இவர்களுள் சித்த மருத்துவத்தின் அடிப்படை தத்துவத்தையும், வர்மத்தையும் எனக்கு உணர்த்தியவர் பால்பாண்டியன் அய்யா. மேலும், ஏறக்குறைய இரண்டரை ஆண்டுகள் எனக்கு சித்த மருத்துவத்தில் பயன்படுத்தும் மருந்துகளை பற்றிய நுண்ணறிவுடன் அன்னமும் பாளித்தவர் தெய்வத்திரு. பேரா. சொர்ணமாரியம்மாள். இவர்களே என் குருமார்கள்.
ஆலோசனை நேரிலா அல்லது இணைய வழியிலா?
நேரிலேயே பெரும்பாலும் ஆலோசனைகள் வழங்குகின்றேன். வெளியூரில் இருப்பவர்களுக்கு அந்த அந்த ஊரில் இருக்கும் சித்த மருத்துவரை அணுக வழிகாட்டியும் வருகின்றேன். என்னிடமே ஆலோசனை பெற வேண்டும் என்பவர்களுக்கு மட்டுமே இணைய வழியில் ஆலோசனை வழங்கிக் கொண்டு வருகின்றேன்.
குறைந்தபட்சக் கட்டணம் வசூல்
நடுத்தர ஏழை குடும்பங்களுக்கு கட்டுபடியாகும் கட்டணமா…?
நோய்க்கு தகுந்த கட்டணம் என்று பெறுவது இல்லை. என்னால் இயன்ற குறைந்தபட்ச ஆலோசனை கட்டணமே பெற்று வருகின்றேன்.
பொதுவாக அனைவரிடமும் ஒரே கட்டணமே பெற்று வருகின்றேன். இத்தொகையை வழங்கமுடியாதவர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளையும் செய்து வருகின்றேன்.
சிகிச்சை பெற்றவர்கள் தரப்பிலிருந்து சிகிச்சைக்குப் பின் வரும் கருத்துக்கள் எப்படி?
கற்ற குருவாக்கும் காதலித்த வாகடமும் பற்றுக்கோளென சிகிச்சை மேற்கொண்டு வருகின்றேன். மக்கள் துயர் தீர்க்கும் சிறுகருவியென என்னை நம்பி வருபவர்கள் என்னை உணர வைத்துக்கொண்டே உள்ளார்கள், இதுவும் குருவருளே.
மருத்துவ கிளினிக் செயல்படும் நேரம், நோயாளிகளை சந்திக்கும் நேரம்…
திங்கள் முதல் சனி வரை, மாலை 5.30 மணி முதல் 9.00 மணி வரை, போரூரில் உள்ள எஸ்ஆர்எம் சித்த நலமனையில் ஆலோசனை வழங்கி வருகின்றேன்.
பேட்டி நிறைவு பெற்றது.
‘குருவருள் துணை நிற்க, திருவருள் வழி நடத்தும்…’ என்று கூறிய அவரிடமிருந்து இரு கரம் கூற்றி விடை பெற்ற போது, குரு மீது அவருக்கும் இருக்கும் மதிப்பும் – மாண்பும், திருவருள் மீது அவருக்கு இருக்கும் பயமும் – பக்தியும் உணர முடிந்தது.
– வீ. ராம்ஜீ
Related Videos:
#siddha #cancertreatment #cancer #yaathum.life
It’s good to see young people with clear ideas. Kudos..keep doing