தலையங்கம்
உலகம் முழுவதும் புற்றுநோய் அதிகரித்து வரும் நிலையில் புதிய சிகிச்சை முறைகளை கண்டுபிடிப்பது அவசியமாகிறது.
மருந்து எதிர்ப்பு சக்தி மற்றும் கடுமையான பக்க விளைவுகள் போன்ற சவால்களால் பாரம்பரிய சிகிச்சைகள், குறிப்பாக கீமோதெரபி நோயாளிகளுக்கு பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. இதை சமாளிக்க நவீன விஞ்ஞானிகள் புதிய சிகிச்சை முறைகளை ஆராய்ந்து வருகின்றனர். இதற்கான முக்கியமான கண்டுபிடிப்பை மோகாலியில் உள்ள நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன (INST) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அவர்கள் உருவாக்கிய புதிய சிகிச்சை முறை, மிகச் சிறிய காந்த நானோ துகள்களை மற்றும் HSP90 எனும் வெப்பத்தை எதிர்கொள்ளும் புரதத்தை தடுக்கும் 17-DMAG என்ற மருந்தை இணைக்கிறது. இதை காந்த அதிதவிப்பு புற்றுநோய் சிகிச்சை (Magnetic Hyperthermia) என்று அழைக்கின்றனர். இவ்வகை ஹைபர்தெர்மியா சிகிச்சை முறையில் உடல் திசுக்களை 40-45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைத்துக் குணப்படுத்துகின்றனர். இந்த அளவிற்கு மேலான வெப்பநிலையில் புற்றுநோய் செல்களை அழிக்க இயலும்.
சிறிய காந்த நானோ துகள்களை புற்றுநோய் பகுதிகளில் செலுத்தி மாற்று காந்தத் துறையின் (AMF) மூலம் சூடாக்கி புற்றுநோய் செல்களை அழிக்க இந்த முறையைப் பயன்படுத்துகின்றனர். அதே நேரத்தில், HSP90 எனும் வெப்பத்தை தாங்கி விடும் புரதத்தை 17-DMAG மருந்து மூலம் தடுப்பதன் மூலம் நோய்த் திசுக்களின் வெப்பத்தை சரிசெய்யும் திறனை குறைத்து செல்களின் அழிவை அதிகரிக்கின்றனர்.
மண்டைபுற்று கொண்ட எலிகளின் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த முறையின் மூலம் 65% முதல் 53% வரை புற்றுநோய் வளர்ச்சியை குறைக்க முடிந்தது. மேலும் இது வெறும் 8 நாட்களில் கிட்டத்தட்ட புற்றுநோயை கட்டுப்படுத்தியது.
இந்த சிகிச்சை முறை கடுமையான கீமோதெரபி மற்றும் மருந்து எதிர்ப்பு சக்தி போன்ற பக்கவிளைவுகளைக் குறைத்து, நெகிழ்வான சிகிச்சையை வழங்குகிறது. அதிக மருந்துகள் தேவைப்படாமை சிகிச்சையை எளிதாக்கி நோயாளிகளுக்கு சிரமமின்றி மேம்பட்ட சிகிச்சை அனுபவத்தை தருகிறது. முக்கியமாக இந்த முறையால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்பட்டு இயற்கையாகவே புற்றுநோயை எதிர்க்க உடல் சக்தி பெறுகிறது.
மருத்துவ உலகில் புதிய சவால்களை எதிர்கொள்வதற்காக புதுப்புது சிகிச்சை, வழிமுறைகளை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கையில் இந்த புதுவைத்திய முறை அறிவிக்கப்பட்டுள்ளது,
மருத்துவமனைகளில் அன்றாட பயன்பாட்டுக்குக் கொண்டு வர மேலும் தீவிர ஆய்வுகள் தேவைப்படுகிறது, இது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பல லட்சம் பேருக்கு புது நம்பிக்கையை அளிக்கிறது.