சிறுகதை

புரிதல்! –இரா.இரவிக்குமார்

அம்மாவின் தங்கை வீட்டுக்காரர் திடீரென்று மாரடைப்பால் மரணமடைந்து விட்டார்.

அண்ணனும் நானும் எல்லாக் காரியங்களையும் நடத்த வேண்டிய பொறுப்புக்கு ஆளானோம். காரணம் சித்தியின் மூன்று பிள்ளைகளில் மூத்தவனுக்கே பன்னிரண்டு வயதுதான்!

சித்தப்பா இறந்து பதினாறாம் நாளன்று உத்தரக்கிரியை என்பதால் பதினைந்து பதினாறாம் நாட்களில் அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு உணவு தயாரிக்கத் தேவையான காய்கறிகளை வாங்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டேன்.

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் மொத்தமாக வாங்கினால் செலவு குறையும் என்று ஆட்டோவில் அங்குச் சென்றேன். நாற்பது கிலோ காய்கள் இரண்டாயிரத்து அறுநூறு ரூபாய்க்கு வாங்கி அவற்றை மூட்டையாக ஆட்டோ ஸ்டாண்டுக்கு தலையில் சுமந்து செல்ல ஆள் ஒருவனைத் தேடினேன்.

காய்கறி வாங்கிய கடைக்காரர் காட்டிய சுமை தூக்குபவனிடம் “கூலி எவ்வளவு வேணும்?” என்று கேட்டேன்.

“நாப்பது கிலோ! நூத்தம்பதுக்குக் குறைஞ்சு முடியாது!” என்றான் கறாராக.

அவனது முறைப்பும் அழுத்தமான பேச்சும் எனக்கு அவன் மீது கோபத்தை வரவழைத்தது.

அப்போதுதான் கிழிந்த அழுக்கு ஆடையுடன் மெலிந்த தேகத்திலிருந்த அந்த ஆள் வந்தான்.

“சாமி, சாப்பிட்டு நாலு நாள் ஆகுது, பசியில உயிர் போகுது!” என்று என்னிடம் காசு கேட்டான்.

அவனிடம் நான் ‘மூட்டையை ஆட்டோ ஸ்டாண்ட் வரை எடுத்து வருகிறாயா? அதற்கு ஐம்பது ரூபாய் தருகிறேன்!’ என்றதும் அவன் ஒப்புக் கொண்டான்.

தன் தலையில் மூட்டையை ஏற்றி வைக்க உதவிய என்னை அடுத்த விநாடியே விடுத்து வேகமாக நடையைக் கட்டினான் அவன். அவனை நான் பின் தொடர்வது கடினமாக இருந்தது. கூட்டத்தின் நடுவே வளைந்து நெளிந்து வேகமாகச் சென்றவன் சற்று நேரத்தில் என் பார்வையிலிருந்து மறைந்தான்.

‘சரி, எங்கே போய்விடப் போகிறான். ஆட்டோ ஸ்டாண்டில் மூட்டையை இறக்கி வைத்துவிட்டு எனக்காகக் காத்திருப்பான்’ என்ற எண்ணத்துடன் நான் மெதுவாகவே நடந்தேன்.

ஆட்டோ ஸ்டாண்டை அணுகிய நான் அவனை அங்கு எங்குத் தேடியும் அவன் என் கண்ணில் படவில்லை! சிறிது நேரம் காத்திருந்தேன். அவன் எப்படியும் வந்துவிடுவான் என்ற நம்பிக்கையுடன். ஆனால் அவன் வரவில்லை! பின்பு அவன் மூட்டையுடன் என்னை ஏமாற்றிவிட்டு ஓடிவிட்டானோ என்ற சந்தேகம் லேசாகத் தலை தூக்கியது.

மேலும் சிறிது நேரம் அங்கே அவனுக்கான தேடல் அவன் வருவான் என்ற நம்பிக்கை எல்லாம் குறைந்து, மறைந்து போக கடைசியாக காய்கறி வாங்கிய கடையில் அவன் என்னை இங்கே கண்டுபிடிக்க முடியாமல் அங்கே காத்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று கடையை நோக்கி நடையைக் கட்டினேன்.

அந்தக் கடையை நான் மீண்டும் சென்றடைந்தபோது அவன் அங்கும் இல்லை! வேறு வழியில்லாமல் அதே கடையில் அவரிடம் முன்பு வாங்கிய விலைப்பட்டியலைக் கொடுத்து அதிலுள்ள காய்கறிகளை மீண்டும் புதியதாக மூட்டை கட்டச் சொன்னேன்.

“என்ன சார், இப்படி ஏமாந்துட்டு வந்து நிக்கறியே!” என்று வாய் திறந்தே கடைக்காரர் சொல்ல, தூரத்தில் நின்று கொண்டிருந்த முன்பு நான் நிராகரித்த சுமை தூக்குபவன் என்னைப் பார்த்து இளக்காரமாகச் சிரித்தான்.

என்னை வெட்கம் பிடுங்கித் தின்றது!

அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது!

என் மூட்டையைத் தூக்கிக் கொண்டு ஓடியவனாகக் கருதப்பட்ட வறுமையினால் வயிற்றுப் பசியினால் ஓடாகியிருந்த அவனைக் கைத்தாங்கலாக ஒருவன் அழைத்து வர, மற்றொருவன் என் மூட்டையைத் தூக்கிக் கொண்டு கடையை நோக்கி அம்மூவரும் வந்து கொண்டிருந்தார்கள். என்னை இளக்காரமாகப் பார்த்தவன் முகத்தில் அசடு வழிந்தது. சற்று நேரத்திற்கு முன் என்னை ஏமாந்து நிற்கிறேனே என்று பரிதாபமாகப் பார்த்த கடைக்காரரின் கண்களில் ஆச்சரியக்குறி!

நடந்தது இதுதான். பசியின் கொடுமையால் சாப்பாட்டுக்கு எப்படியும் பணம் வேண்டுமென்பதால் தான் தூக்க முடியாத சுமையைக் குறைந்த கூலிக்குத் தூக்க ஒப்புக் கொண்டவன் வழியில் தடுக்கி விழுந்து மயக்கமுற்றிருக்கிறான்! பின்பு மயக்கம் தெளிந்தவன் அவனுக்கு உதவ முன்வந்தவர்களோடு ஆட்டோ ஸ்டாண்டில் என்னைத் தேடி அங்கே நான் அவன் கண்ணுக்குத் தட்டுப்படாததால் மீண்டும் இந்தக் கடைக்கு நான் அவனைத் தேடி வந்தது போல அவனும் என்னைத் தேடி வந்திருக்கிறான். வறுமையிலும் அவனது நேர்மை எனக்குப் பிடித்திருந்தது.

இதில் எனக்கு மற்றொரு உண்மையும் தெரிந்தது! பசியால் துடித்துக் கொண்டிருப்பவனுக்கு உணவோ பணமோ கொடுக்காமல் அவனிடம் ‘நீ பாக்கறதுக்கு நல்லாதானே இருக்கே உழைச்சுத் தின்னா என்ன?’ என்று நாம் கேள்வி கேட்பது அல்லது என்னைப் போல் இப்படி வேலை வாங்கிவிட்டுக் காசு கொடுக்க நினைப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் !

உண்மையான மனிதாபிமானம் பசித்தவனை முதலில் புசிக்க வைக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டேன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *