சிறுகதை

புரிதலற்றது காதல் – ராஜா செல்லமுத்து

சிவன் ஒரு கார் டிரைவர். டிரைவிங் தொழிலைக் கற்றுக்கொண்டு அவன் முறையாக யார் வீட்டிலும் வேலை செய்யப் பிடிக்காமல் பிரீலன்சராக யார் கூப்பிட்டாலும் காரோட்டும் வேலைக்கு சென்று கொண்டிருப்பான்.

அவனுக்கு மாதச் சம்பளம் என்ற கட்டுப்பாட்டுக்குள் அடைந்து கிடப்பது அறவே பிடிக்காது. அதனால் யார் தன்னை கூப்பிடுகிறார்களாே அவர்களுக்கு கார் ஓட்டும் தொழிலை செய்து கொண்டிருந்தான் சிவன்.

இப்படி யார் கூப்பிட்டாலும் கார் ஓட்டிக் கொண்டிருக்கும் சிவனுக்கு ஒருநாள் ஒரு அழைப்பு வந்தது.

அவனுடைய செல்போனுக்கு வசந்தா என்ற பெண் அழைத்தாள்.

‘ஹலோ யார் வேணும்?’ என்று சிவன் கேட்க

‘நீங்க கார் டிரைவர் சிவனா?’ என்று எதிர் திசையிலிருந்து ஒரு நடுத்தர வயதுப்பெண் பேசினாள்.

‘ஆமா…. நான் தான்’ என்று பதில் சொன்னான் சிவன்.

‘இல்ல பிரீலன்ஸரா தான் நீங்க கார் ஓட்டுறீங்களா?’ என்று கேட்க,

‘நான் பிரீலன்சர் தான் எங்க போகணும்? எங்க வரணும்?’ என்று கேள்விகள் கேட்டான் சிவன்.

‘வளசரவாக்கம் வாங்க’ என்று கூறிய வசந்தா தன் முகவரியைக் கொடுத்தாள்,

தன்னுடைய இருசக்கர வாகனத்தைக் குதிரையை விட வேகமாக ஓட்டிக்கொண்டு வசந்தா சொன்ன அட்ரசில் போய் நின்றான் சிவன்.

அது ஒரு விரிந்து பரந்த வீடு. பெரிய இரும்புக் கம்பி போட்ட கதவு என்று பார்ப்பதற்கே கொஞ்சம் வசதி படைத்த போலிருந்தது. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன் பெயிண்ட் அடித்த வீடாகவும் இருந்தது. தான் வந்துவிட்டதை வசந்தாவிற்கு செல்போனில் தகவல் சொன்னான் சிவன்.

‘சரி அங்கேயே இருங்க. நான் வந்துடறேன்’ என்று வசந்தா சொல்ல. சிறிது நேரத்திற்கெல்லாம் நைட்டியில் வெளியே வந்தாள் வசந்தா.

‘வாங்க’ என்று வீட்டிற்குள் அழைத்தாள்.

‘இதுதான் நீங்க ஓட்ட போற கார்’ என்று ஒரு சாம்பல் நிற காரைக் காட்டினாள்.

‘ஓகே’ என்று அந்த காரை வாஞ்சையோடு தொட்டுப் பார்த்தான் சிவா.

‘சரி கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’ என்று சொன்ன வசந்தா வீட்டிற்குள் நுழைந்தாள்.

‘யார் வர போறாங்க? யாருக்கு நாம கார் ஓட்டணும்?’ என்று குழப்பத்தில் நின்று கொண்டிருந்தான் சிவன்.

நமக்கு போன் பண்ண இந்தம்மா கார்ல வரப் போறாங்களா? இல்ல வீட்ல இருக்குற பழைய கிழவன் கிழவி யாரும் வரப் போறாங்களா? இவங்க எங்க போறாங்க? எதற்காக நம்மளக் கூப்பிடு இருக்காங்க? என்ற குழப்பத்திலேயே நின்று கொண்டிருந்தான் சிவன்.

அது ஒரு அதிகாலை நேரம் என்பதால் வீட்டைச் சுற்றியிருந்த மரங்களில் பறவைகளின் சத்தம் ரொம்பவே ரம்மியமாக இருந்தது. அவன் நின்று கொண்டு இருக்கும் இடத்தில் பூக்கள் பூத்த மரங்கள் பூக்களை சிந்திக் கொண்டிருந்தன. அந்தப் பூக்களின் நறுமணம் அவன் நாசியில் ஏறி மூளையில் முகாமிட்டிருந்தது.

சுற்று முற்றும் பார்த்துக் கொண்டிருந்தான் 20 நிமிடங்களுக்கு மேலானது. யாரும் வருவதாகத் தெரியவில்லை.

எதுக்காக நம்மக் கூப்பிட்டாங்க? யார் வரப்போறாங்க.? ஒன்னும் தெரியலையே? இங்கிருந்து போய் விடலாமா? என்று கூட அவனுக்குத் தோன்றியது .

சரி பரவாயில்லை வந்துட்டோம் என்னன்னு பார்த்துட்டு தான் போகலாமே? என்று காரின் அருகிலேயே நின்று கொண்டிருந்தான்.

தன் இரு சக்கர வாகனத்தை வீட்டின் வெளியே நிறுத்தி இருந்ததை ஒருமுறை பார்த்துக் கொண்டான். அது அந்த இடத்தில் இருக்கலாம் என்று அவன் மனதுக்கு தோன்றியது.

சிறிது நேரத்திற்கெல்லாம் வீட்டின் வாசலில் இருந்து ஒரு வெள்ளைத் தேவதை வெளியே வந்தாள். அவளைப் பார்த்த போது சிவனின் கண்கள் படபடத்தன. இதயம் இருமடங்காக துடித்தது. அவனை கேட்காமலே அனிச்சையாக கால்கள் இடம் பெயர்ந்தன.

மருத்துவ உடையணிந்த அந்த மயில், அன்னம் போல மெல்ல மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தாள்.

அவள் பின்னே நைட்டியில் இருந்த வசந்தா

‘தம்பி இதுதான் என்னோட பொண்ணு. சந்தனம். இவள தான் நீங்க காலேஜுக்கு கூட்டிட்டு போகணும்’ என்று சிவனுக்கு வசந்தா அறிமுகப்படுத்தியபோது,

சிவன் அந்த தேவதைக்கு எதுவும் சொல்லாமலேயே காரை திறந்து கொண்டு உள்ளே அமரச் சாென்னான்.

‘ஓகே…. நன்றி’ என்றாள் சந்தனம்.

சிவன் தன் இருக்கையில் அமர்ந்து தன் முன்னே இருக்கும் கண்ணாடியை சரி செய்தான்.

அந்தக் கண்ணாடி முழுவதும் அவளின் பிம்பம் பட்டு தெறித்தது. ‘எங்க போகணும்?’ என்றபோது,

‘எஸ்.ஆர்.எம். காட்டாங்குளத்தூர்’ என்றாள் அந்த தேவதை.

இதழ் திறந்து பேசிய மாதுளை, மதுரக் குரலில் அவள் பேசியது சிவனுக்கு ஒரு மயக்கத்தை ஏற்படுத்தியது.

கிளட்சை அழுத்தி ஸ்டியரிங்கைத் திருப்பினான். கார் பறந்தது.

அவன் மனதுக்குள் ஆயிரம் பறவைகள் படபடவென சிறகடித்து பறந்தன. அவள் பூசியிருந்த அத்தர் அந்த இடத்தையே ரம்மியம் ஆக்கிக் கொண்டிருந்தது.

என்ன இது இவ்வளவு வாசனையா சென்ட் போட்டிருக்காங்க. ஓ பணக்காரங்க போல என்று தனக்கு தானே பேசியே சிவன் தனக்கு மேல் இருந்த கண்ணாடியில் அவளைப் பார்ப்பதும் மனதுக்குள் புன்னகை போவதுமாய் காரை ஓட்டிக் கொண்டே சென்றான்.

அந்த வெள்ளை தேவதை அடிக்கடி அவனை பார்த்துக் கொண்டாள். இதுவரை சந்திக்காத ஒரு உணர்வை அவளின் பார்வை கொடுத்தது.

இதுநாள் வரை எத்தனையோ பேர்களுக்கு பிரீலன்சர் ஆக காரோட்டி இருக்கிறான் சிவன்.

ஆனால் ஒரு ஆள் கூட அவன் மனதை பாதித்ததில்லை. ஆனால் இன்று சந்தனம் அவன் நெஞ்சில் சந்தனம் பூசி இருந்தாள்.

யாருக்கும் அடிமையில்லை; யாருடனும் இரண்டு நாட்களுக்கு மேல் இருப்பதில்லை என்று பிரீலன்சர் ஆக பணியாற்றிக் கொண்டிருந்த சிவன் இதோ என்று சந்தன வீட்டிற்கு சென்றானோ அன்றிலிருந்து இன்றுவரை அவர்கள் வீட்டில் மாத சம்பளம் வாங்காத ஒரு ஊழியனாக இன்றும் டிரைவராக பணிபுரிந்து கொண்டிருக்கிறான்.

அதற்கு காரணம் என்பது அவனுக்கு தெரியவில்லை. சந்தனம் அவன் நெஞ்சில் சந்தனம் அப்பி இருக்கிறாள்.

அது அவனுக்கு குளிர்ச்சியைத் தருகிறது. ஒரு கிளர்ச்சியைத் தருகிறது. அது எப்போது முடியும்? என்பது அவனுக்கு தெரியாது. ஆனால் இப்போது அவளுக்கு படிப்பு முடிகிறது. இதுவரை அவன் சந்தித்திராத ஒரு பிரச்சனை அவன் மனதிற்குள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

எப்பவும் போல நாம பிரீலன்ஸராகவே இருந்திருக்கலாம். இங்க இவ்வளவு நாள் நாம ஓட்டி இருப்பது நம்ம எதோ பண்ணுது? என்று நினைத்த சிவன் இன்றும் காரை ஓட்டிப் போய்க் கொண்டுதான் இருக்கிறான்.

சந்தனத்திடம் ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை. அவளும் இவனிடம் ஒரு வார்த்தை பேசுவதில்லை.

சக்கரங்கள் தான் உருண்டு கொண்டிருக்கின்றன. இருவரின் மனதிற்குள்ளும் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. அதுவரையில் இவன் ஓட்டுநர். அவள் பயணி என்று பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றும் கார் ஓடிக் கொண்டிருக்கிறது.

சிவன் காரை ஓட்டிக் கொண்டிருக்கிறான். சந்தனம் அமர்ந்திருக்கிறாள்.

ஆனால் அவன் பணிக்குச் சேர்ந்து இன்றோடு வருடம் ஒன்றைத் தொட்டு நிற்கிறது.

Leave a Reply

Your email address will not be published.