செய்திகள்

புயல், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம்: தமிழக அரசு நடவடிக்கை

Makkal Kural Official

சென்னை, டிச.2-–

புயல், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பேரிடர் மற்றும் வடகிழக்கு பருவமழை தொடர்பாக ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 27-ந்தேதி தலைமைச் செயலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மறுநாளில் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 14 மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கலெக்டர்களுடன் காணொலிக்காட்சி மூலம் ஆய்வு செய்தார்.

அதன் தொடர்ச்சியாக நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வடகிழக்கு பருவமழை, குறிப்பாக தித்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் பெய்துள்ள கனமழை மற்றும் பிற மாவட்டங்களில் பரவலாக பெய்து வரும் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் பயிர்சேதம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தற்போது பெய்துவரும் மழையால் வேளாண் பயிர்கள் குறிப்பாக நெற்பயிர் சேதம், இதர பயிர்கள் சேதம் குறித்தும், தோட்டக்கலைப் பயிர்கள் சேதம் குறித்தும் கணக்கெடுப்பு பணிகளை தொடங்கி, அதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் தேங்கியுள்ள வெள்ள நீர் வடிவதற்கான அனைத்து பணிகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

கடந்த அக்டோபர் மாதம் பெய்த மழையால் ஏற்பட்ட பயிர்பாதிப்பு களுக்கான கணக்கெடுப்புப்பணிகள் முடிவடைந்து 33 சதவீதத்துக்கும் மேல் பாதிக்கப்பட்ட 4,235 ஹெக்டேர் வேளாண் பயிர்களுக்கும், 345 ஹெக்டேர் தோட்டக்கலைப் பயிர்களுக்கும் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

‘தித்வா’ புயல் காரணமாக குடிசை வீடுகள் மற்றும் இதர வீடுகளின் சேதங்கள், மனித உயிரிழப்புகள், கால்நடை உயிரிழப்புகள் போன்றவற்றுக்கு இழப்பீடுகளை கலெக்டர்கள் விரைந்து வழங்க வேண்டும்.

கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் 39 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான குடிநீர், உணவு, மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்துதர வேண்டும். இப்பணிகளை தேவைப்படும் காலம்வரை தொடர்ந்து செய்துதர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முருகானந்தம், வருவாய் நிர்வாக ஆணையர் சாய்குமார், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா, பேரிடர் மேலாண்மை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் செயலாளர் தட்சிணாமூர்த்தி, வேளாண்மை இயக்குனர் முருகேஷ், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் குமரவேல் பாண்டியன், கலந்து கொண்டனர்.

இதற்கிடையே ‘தித்வா’ புயலால் தொடர் மழை பெய்து வருவதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு வருமாறு:-

‘தித்வா’ புயல் தொடர் மழையால் கூடுதல் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் டெல்டா உழவர்களை காப்போம். அக்டோபர் தொடங்கி, தற்போது வரையிலான வடகிழக்குப் பருவமழை, கனமழையினால் சேதம் அடைந்துள்ள நெற்பயிர்கள் உள்ளிட்ட வேளாண் பயிர்கள், வீடுகள், மனித உயிரிழப்புகள், கால்நடை பலி ஆகியவற்றுக்கு உடனடியாக மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

வெள்ளப் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் அனைத்து இடங்களிலும் நீரை வடிய வைக்கும் பணிகளை தொடர்ந்து நேரடியாக கண்காணித்து வருகிறேன். முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் தேவைப்படும் காலம் வரை நமது அரசு வழங்கும், மக்களைக் காக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *