செய்திகள்

புயலை எதிர்கொள்ள மின்சார வாரிய ஊழியர்கள் செல்போனை ‘ஆப்’ செய்யக்கூடாது

Makkal Kural Official

அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை

சென்னை, டிச.1-–

புயலை எதிர்கொள்ள மின்சார வாரியம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பணியாளர்கள் அனைவரும் தமது செல்போனை எந்த காரணம் கொண்டும் ஆப் செய்து வைக்கக்கூடாது. இதனை மீறுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

‘பெஞ்ஜல்’ புயல்’ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு மின்சார வாரியம் எடுத்து வருகிறது. இந்தநிலையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்பட்டு வரும் பொதுமக்களுக்கான மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–-

புயலை எதிர்கொள்வதற்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மின்சார வாரியம் எடுத்துள்ளது. நேற்று (நேற்று முன்தினம்) இரவு முதல் கடுமையான மழை பெய்துள்ள ஒரு சில இடங்களில் மட்டும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மின்சார வினியோகம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

புயல் கரையினை கடக்கும்போது பலத்த காற்று வீசும் நேரங்களில் மட்டும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மின்சாரம் நிறுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய மின் பகிர்மான வட்டங்களில் செயற்பொறியாளர்கள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சுமார் 10 ஆயிரம் பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியாற்றும் வகையில் தயார் நிலையில் உள்ளனர்.

மின்வினியோகத்தில் தடங்கல் ஏதேனும் ஏற்பட்டால் முதல்கட்டமாக மருத்துவமனைகள், குடிநீர் இணைப்புகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் செல்போன் டவர்கள் அனைத்திற்கும் முன்னுரிமை அடிப்படையில் மின்சாரம் வழங்கப்படும். அனைத்து அலுவலர்களும் தமது செல்போனை எந்த காரணம் கொண்டும் ஆப்செய்து வைக்கக்கூடாது. இதனை மீறுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மின் சேவைகள் தொடர்பான புகார்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் மாநில மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தை 94987 94987 என்று எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் நந்தகுமார், இயக்குனர் (பகிர்மானம்) மாஸ்கர்னஸ் மற்றும் தொடர்புடைய தலைமைப் பொறியாளர்கள் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *