போஸ்டர் செய்தி

புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு

நாகை,நவ.18–
கஜா புயலால் தமிழகத்தில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து புயல் பாதித்த நாகைப் பகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:–
புயல் பாதித்த பகுதிகளில் ஓரிரு நாட்களில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புயலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. சேத விவரங்களை கணக்கிட்டு மத்திய அரசிடம் நிதி கேட்கப்படும். பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்.
நாளை தலைமைச் செயலகத்தில் முதல்வருடன் ஆய்வுக்கூட்டம் நடத்தி முழு நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். புயல் பாதித்த மாவட்டங்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் அனுப்ப தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. மின்சாரம் இல்லாததால் ஜெனரேட்டர்கள் மூலம் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பாடப்புத்தகங்கள் சேதமடைந்திருந்தால் புதிய புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது. தேவையான அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய் வழங்க உரிய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. குடும்பத்திற்கு 5 கிலோ அரிசி வழங்கப்படும். நிவாரணப் பணிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10,820 லிட்டர் பால் வழங்கப்படுகிறது. 3 மெட்ரிக் டன் பால் பவுடர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நிவாரண முகாம்களில் உணவு, படுக்கை உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது.
18,000 மின் கம்பங்கள் பழுதாகி உள்ளதில் 7,958 கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. அனைத்து துறை அரசு அதிகாரிகள் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போக்குவரத்தைச் சரி செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மக்கள் ஒத்துழைப்போடு, அரசு இணைந்து செயல்படும் பட்சத்தில் விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *