ஆர்.முத்துக்குமார்
ஐந்து மாதங்களுக்கு முன்பு எங்கேனும் ஒரு செய்தி மட்டுமே செயற்கை நுண்ணறிவு பற்றி ஊடகங்களில் இருந்தது! ஆனால் கடந்த மூன்று மாதங்களாக பரவலாக எல்லா ஊடகங்களிலும் ஏதேனும் ஒரு செய்தி செயற்கை நுண்ணறிவு சார்ந்ததாகவே இருப்பது, அதன் வளர்ச்சியின் வேகத்தையும் அதன் வீச்சையும் நமக்கு உணர்த்துகிறது.
டைனமைட் வெடி குண்டை வடிவமைத்த ஆல்பிரெட் நோபலும் அணுகுண்டை உருவாக்கிய ராபர்ட் ஓபன் ஹைமர் ஆகிய இருவரும் பிற்காலத்தில் புலம்பியது ‘உலக அழிவுக்கு வித்திட்டு விட்டோமே என்று தான்.
இன்று இந்த செயற்கை நுண்ணறிவு கூகுல் தேடலை பன் மடங்கு உயர்த்தித் தேடிய தகவலைக் கொண்டு கவிதையையும் கட்டுரைகளையும் வடிக்கிறது. Chat GPT கதையையே எழுகிறது!
விரைவில் கூகுல் தனது நுண்ணறிவு சேவையை ஊதியத்திற்கு விடப் போவதாகவே கூறி வருகிறார்கள். அதாவது முன்பு ஒரு பணியாளர் தேடி தகவல் சேகரித்து செய்த வேலைகளை இது போன்ற சேட் பாட்டுகள் செய்து விடுமாம்!
கூகுல் இது பற்றி அமெரிக்க ஊடகங்களுடன் பேசியும் வருகிறது. அவர்களது ‘ஜெனிசஸ்’ என்ற திட்டத்தின் ஒரு கட்டமாக விரைவில் பல பத்திரிக்கையாளர்களின் பணியை கூகுல் தரப்பில் சேட்பாட்டே செய்து தர புதுயுக ஊழியர்கள் படையை உருவாக்கிட இருக்கிறார்கள்.
பெரிய பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு பத்து பேரின் வேலையை இப்படி ஒரே ஒரு சேட்பாட் செய்து முடித்து விட்டால் நல்லது என எண்ணத் துவங்கி விட்டார்கள். செயற்கை நுண்ணறிவின் மைல்கல்லாகக் கருதப்படும் ‘சாட்ஜிபிடி’ (ChatGPT), 2022–ன் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு இந்தத் தொழில்நுட்பம் மனித மூளையை விஞ்சும் நுண்ணறிவாகவே பார்க்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், நுண்ணறிவின் இருப்பிடமான மூளை, மனதின் செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தை பார்ப்பது அவசியம்.
செயற்கை நுண்ணறிவால் மனித அறிவுக்கு எட்டாத செயல்பாடுகளைக் கூடச் செய்ய வைக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டு வருவது உண்மைதான், ஆனால், மனித மூளைக்கே உரித்தான அனுதாப உணர்வு (Empathy), கருணை, அனுபவங்கள் மூலம் கற்றுக் கொண்டதை வைத்து சூழ்நிலைகளை அணுகும் சமயோசித புத்தி போன்றவற்றை செயற்கையாக உருவாக்குவது சாத்தியமில்லை என்றே விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
நுண்ணறிவு, அறிவுத்தின் உள்பட மூளையைப் பயன்படுத்திச் செய்ய வேண்டிய பல செயல்பாடுகளுக்கு செயற்கை நுண்ணறிவை சார்ந்து மனிதர்கள் இருக்க நேர்ந்தால், உபயோகிக்கப்படாத உடல் உறுப்புகள் சிறுத்துப்போவது போல மூளைச் சுருக்கமும் ஏற்பட்டு பலவிதமான நரம்பியல், மனநலப் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும்.
ஆல்பிரெட் நோபல் டைனமைட் வெடி மருந்தை உலகுக்கு அறிமுகப்படுத்தும் போது அது மனித குலத்துக்குக் பேராபத்தை விளைவிக்கப் போகிறது என்பதை அறிந்திருக்கவில்லை. ஆனால் செயற்கை நுண்ணறிவின் ஞானத் தந்தையான ஜெஃப்ரி ஹிண்டன் இதை சீக்கிரமே உணர்ந்துவிட்டதை அவரது அறிக்கை தெரிவிக்கிறது.
செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை வரைமுறைப் படுத்தாவிட்டால் மனிதகுலமும் மனித மனங்களும் பேராபத்தை சந்திக்கும் என உறுதியாகச் சொல்லலாம். செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்ப நிபுணர்கள், தொழில் நிறுவனங்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், மனநல நிபுணர்கள், கல்வியாளர்கள், ஆட்சியாளர்கள் என அனைவரும் இணைந்துதான் இந்தத் தொழில்நுட்பப் பூனைக்கு மணி கட்ட வேண்டும்.
அணுகுண்டும் டைனமைட் வெடி குண்டும் வீசப்பட்டவர்களை கொன்று குவித்தது, ஆனால் செயற்கை நுண்ணறிவோ மனித இனத்தையே அழித்து புது அவதாரத்தை உருவாக்கும் வல்லமை கொண்டது என்பதை மறந்து விடக்கூடாது.