செய்திகள்

புனித் ராஜ்குமார் உடலுக்கு அஞ்சலி: ரசிகர்களால் ஸ்தம்பித்த பெங்களூரு

பெங்களூரு, அக். 30–

மாரடைப்பால் நேற்று மரணமடைந்த புனித் ராஜ்குமார் உடலுக்கு, அஞ்சலி செலுத்த வந்த ரசிகர்களால் பெங்களுரு நகரமே ஸ்தம்பித்தது.

பவர்ஸ்டார் என்று கன்னடத் திரையுலகில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்த புனித் ராஜ்குமார், நேற்று காலையில் அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து பெங்களூருவில் உள்ள விக்ரம் என்ற தனியார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார்.

மாரடைப்பால் மரணம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு கன்னட திரையுலகில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய திரை உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 46 வயதில் மாரடைப்பால் அவர் மரணமடைந்தது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உடலை எப்போதும் பிட்டாக வைத்திருக்கும் நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் மரணம் அடைந்ததை அவரது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ரசிகர்களும் தங்களது உடலை பிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அடிக்கடி விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தவர் புனித் ராஜ்குமார். அதற்காகத்தான் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் அடிக்கடி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் திடீரென்று மரணம் அடைந்ததை அவரது ரசிகர்கள் தாங்கிக் கொள்ள முடியாமல் புனித் ராஜ்குமார் உடலை பார்க்க திரண்டு வருகின்றனர். ரசிகர்களின் அஞ்சலிக்காக பெங்களூரு கண்டிர்வா மைதானத்தில் புனித் ராஜ்குமாரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு விடிய விடிய இரவு முழுவதும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

5 கிலோ மீட்டருக்கு வரிசை

போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த தடியடியும் நடத்தி வருகிறார்கள். புனித் ராஜ்குமார் உடல் வைக்கப்பட்டிருக்கும் மைதானத்தின் வெளியே ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். மாநிலம் முழுவதிலும் இருந்து ரசிகர்கள் அஞ்சலி செலுத்த படையெடுத்து வருவதால் பெங்களூரு நகரம் ஸ்தம்பித்து போயிருக்கிறது. பெங்களூரு முழுவதும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இரவு முழுவதும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, அமைச்சர்கள் மற்றும் நடிகர்கள், நடிகைகள் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். மறைந்த புனித்திற்கு இரண்டு மகள்கள். அமெரிக்காவில் இருக்கும் மகள் அமெரிக்காவிலிருந்து இன்று இரவு வருகிறார். அவர் வந்த பின்னர் நாளை அரசு மரியாதையுடன் புனித் ராஜ்குமாரின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட இருக்கிறது.

மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் உடல் அருகிலேயே அவரது கடைசி மகன் புனித் ராஜ்குமாரின் உடலும் அடக்கம் செய்யப்பட இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *