போஸ்டர் செய்தி

புத்தாண்டு: தமிழகம் முழுவதும் தயார் நிலையில் ‘108’ ஆம்புலன்ஸ்கள்

சென்னை, டிச.31–

புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது அசாதாரண நிகழ்வுகள் மூலம் ஏற்படும் விபத்துகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ‘‘108 ஆம்புலன்ஸ்”, இருசக்கர ஊர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் கூறினார்.இதுகுறித்து அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் கூறியதாவது:–

2019 ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது அசாதாரண நிகழ்வுகள் மூலம் பாதிக்கப்படக்கூடிய நபர்களின் உயிர்களை காப்பாற்றுவதற்காக அம்மாவின் அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

விபத்து மற்றும் ஆபத்து காலங்களில் சிக்கியவர்களுக்கு Golden Hour என்பது ஒரு முக்கியமான தருணமாகும். இத்தருணத்திற்குள் விபத்தில் சிக்கியவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து உயிர்களை காப்பாற்றுவதில் 108 ஆம்புலன்ஸ் உன்னத சேவை ஆற்றி வருகிறது. விபத்து ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் 936 எண்ணிக்கையிலான 108 ஆம்புலன்ஸ்களும் 41 இருசக்கர ஊர்திகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

புத்தாண்டு கொண்டாட்டம் அதிகம் நடைபெறும் இடங்களான உழைப்பாளர் சிலை, கண்ணகி சிலை, காந்தி சிலை, கலங்கரை விளக்கம், சாந்தோம் சாலை, பட்டினப்பாக்கம் என சென்னை மெரினா கடற்கரை மற்றும் அதை இணைக்கும் முக்கிய சாலைகள்–சந்திப்புகள், பெசன்ட் நகர் கடற்கரை மற்றும் அதை இணைக்கும் முக்கிய சாலைகள்–சந்திப்புகள் என அனைத்து பகுதிகளிலும் 38 ஆம்புலன்சுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

உடனடி மற்றும் தங்கு தடையில்லா தகவல் தொடர்பிற்காக 108 ஆம்புலன்ஸ் ஊர்திகளுக்கு வயர்லெஸ் கருவியும் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பொழுதுபோக்கு இடங்கள், வழிபாட்டு தலங்கள் ஆகிய இடங்களிலும் 108 அவசரகால ஊர்திகள் தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 108 அவசரகால சேவையின் மையக்கட்டுப்பாடு அறையிலும் அதிக அழைப்புகளின் கொள்திறனை கருத்தில் கொண்டு கூடுதல் பணியாளர்களுடன் செயல்படவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளிலும் கூடுதல் ஏற்பாடு

முக்கிய சந்திப்புகளில் 13 இருசக்கர அவசரகால ஊர்திகள் நள்ளிரவு முழுவதும், விடியற்காலை 2 மணிவரை செயல்படவும் ஏற்பாடு செய்யப்பட்டுளள்து. சென்னையின் வடபகுதியில் பாடியநல்லூரிலும், தென் பகுதியில் தாம்பரத்திலும், கிழக்கு கடற்கரை சாலையில் ஈஞ்சம்பாக்கத்திலும், மாமல்லபுரத்திலும் 24 மணிநேர அவசரகால சிகிச்சை மையமும் மருத்துவர் மற்றும் செவிலியர்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் இராயப்பேட்டை அரசு மருத்துவமனை கூடுதல் பளுவை எதிர் கொள்ள தயார் நிலையில் இருக்கும்படி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

அம்மா அரசு எப்பொழுதும் மக்களை பாதுகாப்பதில் முனைப்புடன் தொடர்ந்து செயல்பட்டு வருவதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்று அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *