அறைகள் சொல்லும் கதைகள்-26
அவ்வளவாகப் படிக்காத அர்ச்சனாவிற்கு படித்த மாப்பிள்ளையாக ராஜேந்திர பிரசாத் வந்து வாய்த்தார். இருவருக்கும் எப்போதும் இரண்டாம் பொருத்தமாகத் தான் இருக்கும். அவர் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்து குளித்துவிட்டு அலுவலகம் செல்வதற்குள் அர்ச்சனாவிடம் ஆயிரம் தடவை சண்டை போட வேண்டி இருக்கும். பற்றாக்குறைக்குப் பிள்ளைகளின் பிடுங்கல் வேறு.
” ஏன் இந்த அர்ச்சனாவைத் திருமணம் செய்து கொண்டோம் என்று சில நேரங்களில் தலையில் அடித்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவார் ராஜேந்திர பிரசாத் .
” எனக்குத் தகுந்த மாதிரி ஒரு புருஷன கட்டாம படிச்ச ஒரு கிறுக்கு பயலக் கட்டி நான் படுற பாடு இருக்கே யாத்தே சொல்லி மாளாது ” என்று ஒப்பாரி வைக்காத குறையாக அழுது புலம்புவாள் அர்ச்சனா
“நான் படிச்ச படிப்புக்கு எனக்குத் தகுந்த மாதிரி ஒரு படிச்சவள கல்யாணம் பண்ணி இருந்தா என் வாழ்க்கை ஓஹோன்னு இருந்திருக்கும். உன்னைய கட்டிட்டி நான் மாரடிக்கிறது தான் மிச்சம் என்று அலுத்துக் கொள்வார் ராஜேந்திர பிரசாத் .
இப்படிக் காலையில் தொடங்கும் இருவரின் பிரச்சனைகள் இரவு முடிந்து மறுநாள் காலையிலும் தொடரும். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகள்
“ஏப்பா இந்த படிக்காத அம்மாவ கட்டின ?அதோட பெரிய ரோதனையா இருக்கு? என்று அப்பாவிடமும்
“ஏம்மா படிச்சா இந்த அப்பாவ கட்டின ?அவரோட பெரிய இம்சையா இருக்கு எதுக்கெடுத்தாலும் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் பேசுறாரும்மா என்று அம்மாவிடமும் மாறி மாறிச் சொல்லித் தனக்கான விஷயங்களைச் சாதித்துக் கொள்வார்கள் குழந்தைகள்.
வீட்டில் எத்தனையோ அறைகள் இருந்தாலும் ராஜேந்திர பிரசாத் புத்தக அறையில் தான் எப்போதும் இருப்பார். இரண்டாயிரம் புத்தகங்களுக்கு மேல் வாங்கி அடுக்கி வைத்திருந்த புத்தக அறையில் தனக்குத் தேவையான எல்லா விஷயங்களும் அங்கே போய் சேகரித்துக் கொள்வார். கவிதையிலிருந்து கட்டுரை வரை எல்லா நூல்களும் அங்கே அடங்கி இருக்கும் .அந்தப் புத்தக அறைக்குள் நுழைந்து அவர் ஆழ்ந்து படித்துக் கொண்டிருக்கும் போதெல்லாம்,
” இவருக்கு வேற வேலையே இல்லை? எப்பப் பாத்தாலும் புத்தகம் படிச்சிட்டு இருக்காரு. அதான் படிச்சு வேலைக்கு போயாச்சுல்ல . திரும்பி என்ன புத்தகம் படிச்சிட்டு இருக்காரு ? அதான் பிள்ளைக படிக்க வந்துட்டாங்க . அத விட்டுட்டு இந்த மனுஷன்.இன்னும் படிச்சிட்டு இருக்கான் ” என்று கோபப்பட்டு கொள்வாள் அர்ச்சனா.
” என்னைக்காவது ஒரு நாள் இந்தப் புத்தகங்கள எல்லாம் தூக்கித் தூர போடுறேன் பாரு”
“ஏய் அர்ச்சனா அப்படியெல்லாம் தப்புப் பண்ணிராதம்மா . புத்தகத்தில எவ்வளவோ விஷயங்கள் இருக்குது. அதைத் தினமும் படிச்சு ஏதாவது ஒரு விஷயத்தை எழுதிட்டும் படிச்சிட்டு தான் இருக்கேன். நீ பேசாம ஏதாவது ஒன்னு செஞ்சுராத ? என்று ராஜேந்திர பிரசாத் சொன்னாலும் அசட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொள்வாள் அர்ச்சனா.
“அம்மா, அப்பா படிக்கிற புத்தகத்தத் தூக்கி எறி. எங்க புத்தகத்த தூக்கி எறிஞ்சுராத ? என்று குழந்தைகள் கதறினால்
” உங்க புத்தகத்த நான் தொட மாட்டேன்; அது படிக்கிற புத்தகம். உங்க அப்பன் படிக்கிற புத்தகம் பூராம் வேஸ்ட் புத்தகம். அது வீட்ட அடைச்சுக்கிட்டு இருக்கு . புத்தகம் இல்லாம அந்த ரூம் இருந்ததுன்னா இன்னும் நாம பொழங்குறதுக்கு வசதியாக இருக்கும் “
என்று அர்ச்சனா பிள்ளைகளிடம் பேசிக் கொண்டிருப்பாள்.
“எல்லாமே விலை உயர்ந்த புத்தகங்கள். போச்சுன்னா வாங்க முடியாது”
என்று ராஜேந்திர பிரசாத் சொன்னாலும் அதை ஒரு காதில் வாங்கி ஒரு காதில் விட்டு விடுவாள் அர்ச்சனா.
அலுவலகம் போய்த் திரும்பி வரும்போதெல்லாம் வீட்டுக்குள் நுழைந்ததும் ஒரு முறை புத்தக அறையை எட்டிப் பார்த்து விட்டு தான் செல்வார் ராஜேந்திர பிரசாத் .
“உங்க புத்தகத்த ஒன்னும் பண்ணல போங்க “
என்று அங்கேயே கணவனைச் சமாதானப்படுத்தி அனுப்புவாள் அர்ச்சனா .
அலுவல் விஷயமாக ராஜேந்திர பிரசாத் சில நாட்கள் வெளியூர் செல்ல வேண்டியிருந்தது.அவர் போன மறுநாளில் இருந்து மழை .கொட்டோ கொட்டென்று கொட்டிய மழையில் வெள்ளம் தரைத்தளத்தில் இருந்த வீடுகளை எல்லாம் நிறைத்தது. ஊர் முழுக்கத் தண்ணீர்.அத்தனை வீட்டுக்குள்ளும் புகுந்து அத்தனையும் நனைத்திருந்தது. திரும்பிய திசைகள் எல்லாம் தீவு போல் காட்சி அளித்தன தண்ணீர் தெருக்கள்.இதில் ராஜேந்திர பிரசாத்தின் வீடும் விதிவிலக்கல்ல. தண்ணீரில் மூழ்கி தத்தளித்தது.
அதுவும் அவரின் வீடு தரைத்தளம் என்பதால் அளவுக்கு அதிகமான தண்ணீர் நிரம்பி வழிந்தது. வீட்டில் இருந்த அத்தனை பொருட்களும் தண்ணீரில் நனைந்து சின்னா பின்னமாகி இருக்கும் என்று நினைத்தார் ராஜேந்திர பிரசாத். அவர் வீட்டை விட்டு சென்று இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டன. எப்படியும் நம்முடைய புத்தகங்கள் எல்லாம் தண்ணீரில் நனைந்து ஒன்றும் இல்லாமல் போயிருக்கும். அர்ச்சனாவிற்கு வேறு அந்தப் புத்தகங்கள் எல்லாம் பிடிக்காது. இதுதான் சமயம் என்று அத்தனையும் தூக்கி எறிந்திருப்பாள் ” என்று நினைத்துக் கொண்டிருந்தார் ராஜேந்திர பிரசாத்.
அடிக்கடி போன் செய்து தண்ணீர் வீட்டிலிருந்து வெளியேறும் நிலவரங்களைக் கேட்டு தெரிந்து கொண்டிருந்தார்.சீக்கிரம் வந்து விடுவதாக செல்போனில் பேசிய பிரசாத் அன்று வீட்டுக்கும் வந்து சேர்ந்தார் அவர் வீடு மட்டுமல்ல அந்த ஊரில் இருந்த அத்தனை வீடுகளும் தண்ணீரில் மிதந்து கிடந்தன. வீட்டுக்குள் நுழைந்து பார்த்தவர்களுக்கு பகீரென்றது.
கட்டில் , பீரோ, மெத்தை, டிவி அத்தனையும் நனைந்து ஒன்றும் இல்லாமல் தூக்கி வெளியே போட்டிருந்தாள் அர்ச்சனா. தன் புத்தகங்களை ஆவலாகத் தேடினார். ஒன்று கூட இல்லை.
“ஒன்னுல்ல எல்லாம் இயற்கை. நம்ம கையில எதுவும் இல்ல எல்லாம் போயிடுச்சு.வேற வாங்கிக்கலாம்” என்று சமாதானப்பட்டு வீட்டிற்குள் நுழைந்த ராஜேந்திர பிரசாத்துக்கு பகீரென்றது
” நீ படிக்காதவ தான் ஆனா புத்திசாலி. நீ பேசத் தெரியாதவ தான் ஆனா அறிவாளி. நான் படிச்சிருக்கேன் ஆனா நான் முட்டாள் ; என்னை மன்னிச்சிரு “
என்றார் ராஜேந்திர பிரசாத்
“அது இல்லைய்யா நீ எப்ப பாத்தாலும் இந்த புத்தகங்களத் தான் படிச்சிட்டு இருப்ப. பிள்ளைகளும் சொல்லுச்சுக. மத்தது போனா கூட திரும்ப வாங்கிக்கிரலாம் .ஆனா நீ சேர்த்து வச்சிருக்கிற இந்தப் பழைய புத்தகங்களை வாங்குறது கஷ்டம். அப்படின்னு நீ அடிக்கடி சொல்லிக்கிட்டு இருப்ப? அதனாலதான் எது போனாலும் போகட்டும் அப்படின்னு விட்டுட்டேன். புத்தகங்கள எல்லாம் தூக்கி மேல அலமாரியில வச்சிருக்கேன் பாரு”
என்றாள் அர்ச்சனா. அதற்குமேல் எதுவும் பேச முடியாத ராஜேந்திர பிரசாத், அர்ச்சனாவை வாரி அணைத்துக் கொண்டார்.
மறுபடியும் புத்தகங்களால் நிரம்பி வழிந்தது புத்தக அறை.
#சிறுகதை