சென்னை, ஆக. 12–
புதையலில் கிடைத்ததாக கூறி ரூ.5 லட்சத்திற்கு போலி நகைகளை விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் குமாரசுவாமி (59) என்பவர் சிறிய மளிகைக் கடை ஒன்றை நடத்தி வருவதுடன் இட்லி மாவு அரைத்து விற்பனையும் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 14-ம் தேதி, மதியம் அவரது கடைக்கு வந்த கிஷோர் என்ற நபர் தேங்காய் எண்ணெய் மற்றும் சோப்பு ஆகியவற்றை வாங்கிவிட்டு அதற்கு பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுக்கும் போது சில்லறைகளுடன் சில வெள்ளி நாணயங்களையும் கொடுத்துள்ளார்.
வெள்ளி நாணயங்களை கண்ட குமாரசுவாமி அதுகுறித்து கேட்டபோது அந்த நபர், தான் கூலி வேலை செய்து வருவதாகவும் வேலை செய்யும் இடத்தில் பள்ளம் தோண்டும்போது தனக்கு வெள்ளி நாணயம், கொஞ்சம் தங்க நகைகள் புதையலாக கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தனக்கு 2 தங்கைகள் உள்ளதாகவும் அவர்களுக்கு திருமணம் செய்ய இருப்பதால் திருமணச் செலவுக்காக கொஞ்சம் நகைகளை விற்பனை செய்ய உள்ளதாகவும் கூறினார். பின்னர் அந்த நகைகள் உங்களுக்கு வேண்டுமா என கேட்டுள்ளார். தேவைப்பட்டால் தன்னை தொடர்பு கொள்ளும்படி கூறி அவரது செல்போன் எண்ணை கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.
மறுநாள் சம்பந்தப்பட்ட நபரின் செல்போன் எண்ணுக்கு குமாரசுவாமி தொடர்பு கொண்டு கேட்டபோது, அந்த நபர் 2 தங்கச் செயினை கொடுத்து இதை நீங்கள் பரிசோதித்து பார்த்து விட்டு, பின்னர் வாங்கிக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார். உடனே, குமாரசாமி அருகில் உள்ள நகைக் கடைக்கு சென்று, அந்த நகைகளை பரிசோதித்து பார்த்தபோது அவை உண்மையான தங்க நகைகள்தான் எனத் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குமாரசுவாமி அவரிடம் இருந்து நகைகளை வாங்க முடிவு செய்து, அவரது உறவினரான புனிதா என்பவரிடமிருந்து ரூ.2.5 லட்சம் பெற்றுக் கொண்டு, தனது பணம் ரூ.2.5 லட்சம் என மொத்தம் ரூ.5 லட்சம் பணத்தை ஏற்பாடு செய்து சம்பந்தப்பட்ட நபரிடம் பணத்தைக் கொடுத்து நகைகளை வாங்க முடிவு செய்து அந்த நபரை தொடர்பு கொண்டபோது, குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே வந்து நகைகளை பெற்றுச் செல்லும்படி தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து குமாரசுவாமி, அவரது மனைவி மற்றும் அவரது உறவினர் புனிதா ஆகியோரை அழைத்துக் கொண்டு கடந்த மாதம் 24-ம் தேதி குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே வந்து ரூ.5 லட்சம் பணத்தை கிஷோர் என்ற அந்த நபரிடம் கொடுத்துவிட்டு அவர் கொடுத்த தங்க நகைகளை வாங்கிக் கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில், போலி நகைகளைக் கொடுத்து பணத்தை ஏமாற்றியதாக தாம்பரம் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டது குறித்து கடந்த மாதம் 27ம் தேதி வந்த செய்திகளைப் பார்த்தார். அதில் கைது செய்யப்பட்ட பெண் கிஷோருடன் வந்தவர் எனத் தெரியவந்தது.உடனே குமாரசாமி தான் கிஷோர் என்ற நபரிடமிருந்து பெற்று வைத்திருந்த நகைளை அருகில் உள்ள நகைக் கடைக்கு எடுத்துச் சென்று பரிசோதித்துப் பார்த்தபோது அந்த நகைகள் போலியானவை எனத் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த குமாரசாமி இதுகுறித்து குரோம்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த மாதம் 28-ம் தேதி புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளடிகளைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் தனிப்படையினர் நேற்று கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பாபுலால் ரத்தோட் (36), ராகுல் (23) ஆகியோரைக் கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த 3 போலி தங்க மாலைகள், ரூ.30 ஆயிரம் பணம், 9 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் படி சிறையில் அடைத்தனர்.