சிறுகதை

புது வாழ்வு | கரூர் அ. செல்வராஜ்

செல்வியின் வருகையை எதிர்பார்த்து இருந்த லதாவுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது.

“காலையில் 6 மணிக்கு வரவேண்டிய செல்விக்கு என்ன ஆச்சு? 8 மணி ஆகியும் இன்னும் வரலியே? அது சம்பந்தமாக ஒரு போன் கூட பேசலியே? வீட்டுக்கு விருந்தாளிகள் வந்திருக்கிற நாளிலே வேலைக்கு வராமல் மட்டம் போட்டுட்டாளே என்று புலம்பினாள் லதா.

செலவுக்காக காத்திருப்பது வீண் வேலை என்று தெரிந்து கொண்ட லதா வேறு வழி இல்லாமல் சமையலறைக்குச் சென்று காலை நேர டிபன் தயாரித்து வீட்டிலிருந்தவர்கள் எல்லோருக்கும் பரிமாறி சந்தோஷம் அடைந்தாள்.

காலை 11 மணிக்கு மேல் செல்வியின் 17 வயது மகன் ராஜா தன் அம்மா வேலை செய்யும் லதா அம்மாவின் வீட்டுக்குள் நுழைந்தான். வீட்டின் வரவேற்பு அறையில் அமர்ந்திருந்த லதாவிடம் பேசினான்.

” அம்மா!”

” தம்பி யாரு?”

” அம்மா! என்னை உங்களுக்கு அடையாளம் தெரியலையா?”

” தெரியலை தம்பி “

” அம்மா! நான் செல்வியோட மூத்த மகன். என் பேரு ராஜா “

” செல்வியின் மகனா? ஆளே மாறிட்டே தம்பி. உன்னை உடனே அடையாளம் கண்டுபிடிக்க முடியல. சரி தம்பி, உங்க அம்மா செல்விக்கு என்ன ஆச்சு? இன்னிக்கு ஏன் வேலைக்கு வரலே? வேலைக்கு வர முடியாததை போன்லே கூட சொல்லலையே?” என்றாள் லதா. அதற்கு பதில் சொல்லத் தொடங்கினான் ராஜா.

” அம்மா!”

” சொல்லு ராஜா “

” ஏன் அம்மா செல்வி வீட்டில் இருந்து வேலைக்குக் கிளம்புற நேரத்திலே ஒரு போன் வந்துச்சு “

” யாருகிட்ட இருந்து போன் வந்துச்சு?”

” எங்க அம்மாச்சி வீட்டிலிருந்து போன் வந்துச்சு. போன்லே எங்க மாமா பேசினாரு. அவர் பேசிய போது எங்க அம்மாச்சிக்கு திடீரென்று உடம்பிலே சர்க்கரை அளவு குறைஞ்சு போச்சு. உடனே ஆஸ்பத்திரியிலே சேர்க்கணும்னு சொன்னாரு. அதனாலே நீ எங்க அம்மா உடனே கிளம்பி எங்க தெருவிலிருந்து 3 தெரு தள்ளி இருக்கிற அம்மாச்சி வீட்டுக்கு போயிட்டாங்க. எங்க அம்மாச்சிக்கு உதவி செய்யப் போயிருக்கிற அம்மா திரும்பவும் வேலைக்கு வர்றதுக்கு இன்னும் 3 அல்லது 4 நாளாவது ஆகும். அந்த விஷயத்தை உங்ககிட்டச் சொல்லிட்டு போகலாம்னுதான் வந்தேன் ” என்று சொல்லி விட்டு கிளம்பிச் சென்றான் ராஜா.

ஒரு வாரம் கழிந்தது. செல்வியின் உதவியில்லாமல் வேலைகளைச் செய்து வந்த லதாவுக்குத் தனது வேலையில் பளு எதுவும் தெரியவில்லை.

திங்கட்கிழமை காலையில் வழக்கமாக வேலைக்கு வந்தாள் செல்வி. வேலைகளை முடித்து விட்டு தனது வீட்டுக்குக் கிளம்பும்போது எஜமானியம்மாள் லதாவிடம் பேசத் தொடங்கினாள்.

” அம்மா!”

” சொல்லு செல்வி “

” எனக்கு வர்ற திங்கட்கிழமையிலிருந்து ஒரு வாரம் லீவு வேணுமா “

” எதுக்கு லீவு?” எடுத்த லீவு போதாதா? மறுபடியும் லீவா?”

” பரீட்சை எழுத “

” என்ன சொல்றே செல்வி?”

” ஆமாம்மா, பரீட்சை தான் எழுத போறேன். வீட்டு வேலை செய்யற பொண்ணுங்க படிக்க கூடாதா? பரீட்சை எழுதக் கூடாதா? பரிட்சையில் பாஸ் பண்ணி நல்ல வேலைக்கு போகக் கூடாதா? 12 ம் வகுப்பு பாஸ் பண்ணியிருந்த என்னைக் கம்ப்யூட்டர்லே டிப்ளமோ படிக்கச் சொன்னான் என் மகன் ராஜா. நானும் தினசரி சாயந்திர நேரத்திலே கம்ப்யூட்டர் படிப்பு படிச்சேன். அந்தப் படிப்புக்கான பரீட்சைதான் எழுத போறேன். அதிலே பாஸ் பண்ணிட்டா வேலை வாங்கித் தர்றதா என் மகன் ராஜா சொல்லியிருக்கான் ” என்றாள் செல்வி.

செல்வியின் நோக்கம் சரியானது என்பதை புரிந்து கொண்ட லதா வேறு யோசனை எதுவும் செய்யாமல் செல்விக்கு லீவு கொடுத்தாள்.

வீட்டு வேலை செய்பவர் தன் வாழ்நாள் முழுவதும் அதைத்தான் செய்ய வேண்டுமா? புதிய முயற்சி செய்து தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும் அல்லவா? செல்வியின் புதிய சிந்தனை செயல் வடிவம் பெற்றது. கம்ப்யூட்டர் டிப்ளமோ பரீட்சையில் பாஸ் ஆனாள். வீட்டு வேலை செய்யும் தொழிலில் இருந்து மாறி கம்ப்யூட்டர் சென்டரில் வேலைக்கு சேர்ந்து தன் திறமையினால் படிப்படியாக உயர்ந்தாள். முயன்றால் முன்னேற்றம் வரும் என்பதை தெரிந்து கொண்டாள். அவளுக்குப் ‘ புதுவாழ்வு ‘ கிடைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *