சிறுகதை

புது மனுசி – தருமபுரி சி.சுரேஷ்

மங்கா உறக்கத்திலே கனவு கண்டு கொண்டு இருந்தாள். அந்தக் கனவு அவள் வாழ்க்கையை மாற்றியது.

எப்பொழுதுமே மங்கா தன் திறமை மீது நம்பிக்கை கொண்டவளாய் இருப்பவள்.

அவள் படிக்கும் கல்லூரியில் பேச்சு போட்டியில் கட்டுரை போட்டியில் கவிதை போட்டியில் முதல் பரிசை ஒவ்வொரு வருடமும் தட்டிச் செல்வாள்.

இத்திறமைகள் இருப்பதால் தன்னுடன் படிக்கும் சக மாணவிகளை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டாள்.

உண்மை என்னவென்றால் கடவுள் ஒவ்வொரு மனிதனுக்கும் திறமைகளையும் ஆற்றலையும் ஞானத்தையும் வெவ்வேறு விதங்களின் வகைப்படுத்தி கொடுத்திருக்கிறார். எல்லோரும் இந்த பூமியில் டாக்டர்கள் அல்ல; எல்லோரும் இந்த பூமியில் ஆசிரியர்கள் அல்ல; பல பணிகள் பலவிதமான திறமைகள் இருக்கிறது என்பதனை அவள் விளங்கிக் கொள்ள அந்தக் கனவு அவளுக்கு ஏதுவாக இருந்தது.

ஒரு மனிதனின் சரீரத்தில் பல உறுப்புகள் இருக்கிறது. ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு வேலை இருக்கிறது. ஒரு உறுப்புக்கு பிரச்சினை என்றால் இன்னொரு உறுப்பு பரிதவிக்கிறது.

ஒரு கை விரல் நசுங்கி விட்டால் கண்கள் சும்மா இருப்பதில்லை. கண்ணீர் வடிக்கிறது; வாய் சும்மா இருப்பதில்லை; அழ ஆரம்பிக்கிறது.

கால் சும்மா இருப்பதில்லை ; மருத்துவமனையை நோக்கி செல்கிறது இதயம்; சும்மா இருப்பதில்லை; துடிக்கிறது; இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இறைவனின் பார்வையில் இந்த உறுப்பு தான் சிறந்தது ; இந்த உறுப்பு சிறந்ததல்ல ; எனும் வித்தியாசங்கள் கிடையாது ; அவர் பாரபட்சம் இன்றி படைத்திருக்கிறார்; அவருடைய படைப்புகள் யாவும் சிறந்த வகையில் பயனுள்ளவைகள்.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்பதனை மங்கா அந்த கனவின் மூலம் உணர ஆரம்பித்தாள்.

அந்த இரவு அவள் உறங்கிக் கொண்டிருந்தபோது திரைப்படம் போல் அந்தக் கனவு அவள் முன் விரிந்தது.

ஆம் உயரமான மனிதன் பனைமரம் போல் இருந்தான். உடல் பெருத்திருந்தது.

யானை கட்டித் தீனி போட வேண்டும் என்று சொல்வார்களே அப்படி சாப்பிட்டு வளர்ந்திருப்பான் போலத் தெரிகிறது.

அவன் ஒரு மலை பள்ளத்தாக்கில் நின்று கொண்டு அகங்காரமாய் சிரித்தான் தான் எனும் கர்வத்தோடு அந்த மலைகள் அதிரச் சிரித்தான்

அவனின் சிரிப்பு ஏளனத்தை வெளிப்படுத்தியது. மதியாமையை வெளிப்படுத்தியது. என்னை யாராலும் ஒன்றும் செய்து விட முடியாது எனும் திமிரை வெளிப்படுத்தியது.

அவன் அருகே ஒரு ராஜா இருந்தான் ; அந்த ராஜாவிடமே சவால் விட்டான்: உன்னால் என்னை வெல்ல முடியாது ; உன் படையாலும் என்னை வெல்ல முடியாது ; ஒத்தைக்கு ஒத்த வர முடியுமா எனச் சவால் விட்டான்

ராஜா அவன் உருவத்தையும் அவன் வார்த்தைகளையும் கேட்டு மனதளவில் அதிர்ந்து போய் பயந்து ஒதுங்கி இருந்தான்.

அந்த ராஜாவின் ராணுவத்தில் இருக்கும் எவரும் அந்த அகங்கார சிரிப்புக்காரனை அடக்க முடியவில்லை. எல்லோரும் பயந்து ஆளுக்கு ஒரு மூலை என ஓடி ஒதுங்கி போய் கிடந்தனர்.

இதைக் கண்ட ஒரு சிறுவன் ஆடு மேய்க்கின்ற சிறுவன் அங்கே ராஜாவிடம்,

‘‘ ராஜா இவன் செய்கின்ற காரியங்கள் என்னால் தாங்க முடியவில்லை. எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்; இவனை வீழ்த்தி விடுகிறேன் ’’ என்றான்.

ராஜாவே நீ சிறுவன் . ராணுவ பயிற்சி இல்லாதவன்; ஆடு மேய்க்கிறவன்; ஆடு மேய்கிற உன்னால் ஒன்றும் முடியாது என்றான்.

நீங்கள் சொல்வது சரிதான் ராஜா. ஆனால் எனக்குள் இருக்கும் இறை சக்தியால் எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு. நான் என்னை நம்பவில்லை; எனக்குள் இருக்கும் இறைவனை நம்பி அவனோடு போரிடச் செல்கிறேன் என்றான்.

ராஜா எவ்வளவோ சொல்லி தடுத்துப் பார்த்தும் அவன் அதை மீறி செயல்பட விரும்பியதை ராஜாவால் தடுக்க முடியவில்லை. அவனுக்கு ராணுவ உடைகளை உடுத்தி தலையிலே தலைச்சீராவை helmet வைத்து அவனோடு போரிட அனுப்பினார்.

இதற்கு முன்பு அவன் ராணுவ உடையை உடுத்தியது இல்லை. தலைச்சீராவை அணிந்ததில்லை. அது அவனுக்கு பாரமாக இருந்தது. இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என அணிந்திருந்த ராணுவ ஆடைகளை கழற்றி விட்டு எப்பொழுதும் அணியும் கேஷுவல் டிரஸ் போட்டுக் கொண்டான் .

காட்டில் புறாக்கள் பறவைகளை வேட்டையாட பயன்படுத்தும் கவன் கல் ஐந்தையும் கவனையும் எடுத்துக் கொண்டான் .

அந்த அகங்கார சிரிப்புக்காரன் “என்னை நாய் என்று நினைத்தாயா கல்லை எடுத்து வருகிறாயே” என்றான்.

இந்தச் சிறுவன் ஒன்றும் செய்யவில்லை. கவனில் கல்லை வைத்து சுழற்றி அடித்தான். அது நேராக அந்த அகங்கார சிரிப்புக்காரனின் நெற்றியில் ஆழமாய் விழுந்து பதிந்தது.

அவன் நெடுமரமாய் அப்படியே சாய்ந்து போனான்.

நெத்தியடி என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இதுதான் முதல் நெத்தியடி; வீழ்ந்தவன் எழவில்லை; சிறுவனை இராணுவத்தினரும் அம்மக்களும் கூடி அவனைத் தூக்கி ஆரவரித்து புகழ்பாடினர்.

இந்தச் சிறுவன் சொன்னான் “நான் ஒன்றும் இல்லை; எனக்குள் இருக்கிறவர் பெரியவர்” என்றான் .

இந்தச் சிறுவன் இறைவனை முதன்மைப்படுத்தினான்.

அகங்காரம், ஆணவம், திமிர் அங்கே முறிந்து போனது.

இறைவனின் பெரில் நம்பிக்கை வைத்த சிறியவன் எழும்பி நின்றான்.

இக்காட்சிகளை திரைப்படம் போல் கனவிலே பார்த்துக் கொண்டிருந்த மங்கா வீட்டில் எலி பிடிக்கும் பூனை அங்குமிங்கும் ஓடும் சர,,,சர,,,வென்ற சப்தத்தில் கண் விழித்தாள்.

அவள் கண் மட்டும் விழிக்கவில்லை ; அவள் மனமும் விழித்துக் கொண்டது; ஒரு முடிவு எடுத்தாள்.

இனி நான் யாரையும் மதிப்பேன் ; எனக்குள் இருக்கும் திறமைகள் கடவுள் கொடுத்தது; என்னைப் போல் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு திறமை இருக்கும்;சக மனிதர்களை நான் நேசிக்க வேண்டும் என உறுதி கொண்டாள்.

புது மனுசியாக மீண்டும் தன் கல்லூரியில் காலடி எடுத்து வைத்தாள் அவள்.

Leave a Reply

Your email address will not be published.